
“கிண்ணையடி”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்.
வாழைச்சேனை பிரதேசத்தைப் பொறுத்த வரையில் மிறாவோடை கிராமத்தைப் போன்றே அதனை அண்டிய கிராமங்களும் மிகவும் முக்கியமானதாகும். இதில் கிண்ணையடி, கறுவாக்கேணி, சுங்கான்கேணி ஆகிய கிராமங்கள் பல தடவைகளில் தாக்கப்பட்டதுடன் பல்வேறு இழப்புகளுக்கும் முகம் கொடுத்துள்ளன.
இதில் கிண்ணையடி கிராமம் சந்தித்த பாதிப்புகள் அதிகம். இதற்கு சில காரணங்களும் உள்ளன. கிண்ணையடி கிராமத்தில் ஓடும் வாவிக்கு அப்பாலுள்ள பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாவிக்கு அப்பாலுள்ள பிரம்படித்தீவு, சாராவெளி, முருக்கன்தீவு ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் கிண்ணையடி வாவி மூலமே பிரயாணம் செய்வது வழக்கம். இக்கிராமங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கிண்ணையடியில் வாவிப்போக்குவரத்து அமைந்திருந்ததாலும் இராணுவத்தினருக்கு இக்கிராமம் மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே வந்தது.
புலிகள் இரவு வேளையில் இந்த வாவி ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதாகவும் புலிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் கிண்ணையடியில் இருந்து இந்த வழி மூலமாகவே புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இராணுவத்தினருக்கு சந்தேகம் இருந்து வந்தது.
1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தே இச்சந்தேகம் இராணுவத்தினருக்கு இருந்தது. அப்போது இப்பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் இக்கிராமங்களில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியும் உள்ளனர். அடிக்கடி இவ்வாறான தாக்குதல்களால் பொது மக்களே அதிகம் இலக்காக வேண்டி இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு வேளையில் நடமாடவோ வாவியில் மீன்பிடிக்கவோ முடியாத நிலை இருந்தது.இந்த நிலை சமாதான ஒப்பந்தம்
அமுலுக்கு வந்த வரையான காலம் வரை நீடித்திருந்தது.
இதனால் இராணுவ முகாம் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பல வீடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஒரு நாள் திடீரென அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்த பெரிய கல்வீடுகள் சிலவற்றில் இருந்து குடியிருப்பாளர்களை எழுப்பிவிட்டு. அதில் முகாமை அமைத்தனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் பின் சுமார் 35 வீடுகளை இராணுவத்தினர் தமதாக்கிக் கொண்டனர்.
இந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் பாடசாலையும் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும் பாடசாலையை அக்கட்டிடத்திலேயே இயக்க வேண்டுமென இராணுவத்தினர் கடுமையான உத்தரவு பிறப்பித்ததால் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை தொடர்ந்து இயங்கியது. ஆனால் பாடசாலைக்குச் செல்லும் இரு வீதிகளில் ஒரு வீதி மறிக்கப்பட்டதுடன் ஒரு வீதியால் மாத்திரம் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லப் பணிக்கப்பட்டனர். அத்துடன் இந்த வீதி வழியாகவே வாவிக்கு அப்பாலுள்ள மக்கள் சென்றுவர வேண்டுமெனவும் பணிக்கப்பட்டனர். இதனால் இந்த வாவி மூலம் வயலுக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் வேறு தேவைக்குச் செல்பவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கைது செய்யப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்ந்தது.
அது மாத்திரமின்றி கிண்ணையடி கிராமத்து மக்கள் எந்தவிதக் காரணமுமின்றி அடிக்கடி கைது செய்யப்பட்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இதைவிட அடிக்கடி படைமுகாமில் இருந்து ஏவப்படும் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் பலர் காயமடைவதுடன் சிலர் பலியாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனால் இந்த வாவியில் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டது.
இவ்வாறான நிலையினால் இக்கிராமத்தை விட்டு பலர் இடம்பெயர்ந்து சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு இப்படைமுகாம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.
இத்தாக்குதலை அடுத்து இம்முகாமின் பாதுகாப்புக்கென வாழைச்சேனையின் பல இடங்களிலுமுள்ள இராணுவ முகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினால் முகாமை அண்டிய பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் பல வீடுகள் எறிகணைத் தாக்குதலினால் சின்னாபின்னமாகின. இத்தாக்குதலினால் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலை அடுத்து இரவோடிரவாகவும் விடிந்த பின்னரும் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பின்னர் தமது வீடுகளுக்குச் திரும்பவேயில்லை அவர்கள் வாழைச்சேனை, சுங்கான்கேணி போன்ற இடங்களில் தற்காலிகமாகத் தங்கிவிட்டனர். இத்தாக்குதல் நடந்த இரு வாரங்களின் பின் இந்த முகாம் மீது மீண்டும் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.
இதன்பின் இப்படை முகாம் மீது அடிக்கடி புலிகள் வாவிக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தனர் இதற்கு படையினர் பதில் தாக்குதலாக பொதுமக்களின் குடியிருப்புகளை நோக்கியே தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறான சம்பவங்களினால் அங்கு வாழ்ந்த சுமார் அறுநூறு குடும்பங்களில் நானூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து பல வருடங்களாக வாழ்ந்து வந்தன. இவர்களி்ன் வீடுகள் உடைக்கப்பட்டதுடன் அவர்களின் தொழில்களும் பாதி்க்கப்பட்டன.
1984 ஆம் ஆண்டு கிண்ணையடிக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் வாவியில் மீன்பிடித்துக் கொண்டு நின்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஆறுபேர் அவ்விடத்திலேயே பலியாகினர். இவர்களின் சடலங்கள் தோணியில் போடப்பட்டு மண்ணினால் மூடிய நிலையில் வாவியில் கிடந்து உறவினர்களால் கண்டெடுக்கப்பட்டது. அன்றிலிருந்து இக்கிராமத்தில் அடிக்கடி இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதும் ஏறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதும் தொடர்ந்ததால் இதுவரை சுமார் ஐம்பது பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் அங்கு படை முகாம் இயங்கி வருவதுடன் வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன் கடந்த காலங்களில் சேதமடைந்த வீடுகளும் இன்னும் திருத்தப்படாத நிலையில் உள்ளன. இடம்பெயர்ந்து சென்றவர்கள் தற்போது தமது இடங்களுக்குத் திரும்பிச்
செல்கின்றபோதிலும் முகாமை அண்டிய பகுதி மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முன்வராத நிலையே உள்ளது.
கிண்ணையடி கிராமத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் போன்றே அதற்கு அருகிலுள்ள சுங்கான்கேணி மற்றும் கறுவாக்கேணி கிராமங்களுக்கும் ஏற்பட்டது. இக்கிராம மக்களும் அடிக்கடி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன் காணாமலும் போயினர். இக்கிராமத்திலும் அடிக்கடி எறிகணைகள் வந்து வீழ்ந்தன.
எனினும் 90 ஆம் ஆண்டில் இக்கிராமங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. 90 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள புலிகளை விரட்டியடிக்கும் வகையில் நகரை நோக்கி பல வழிகளால் படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு மார்க்கமாக மின்னேரியில் இருந்து விசேட படையணியொன்று மட்டக்களப்பு கொழும்பு வீதி வழியாக நகர்த்தப்பட்டது.
இந்நகர்வைத் தடுத்து நிறுத்தும் வகையில் புலிகளும் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். ஓட்டமாவடிப் பாலம் வரை கடுமையான தாக்குதல் நடத்திய புலிகள் பின்னர் மக்களின் இழப்பைக் கவனத்தில் கொண்டு பின்வாங்கிக் கொண்டனர்.
புலிகளின் எதிர்த்தாக்குதல் எதுவும் இல்லாத நிலையில் இப்படையணி ஓட்டமாவடியைக் கடந்து பெற்றோல் நிலையச் சந்தியை அடைந்தது. பின்னர் இது கும்புறுமூலை இராணுவ முகாமில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள இராணுவத்தினரை மீட்பதற்காக தனது நடவடிக்கையைத் தொடர்ந்தது. அந்த வேளையில் கறுவாக்கேணி மற்றும் சுங்கான்கேணி ஆகிய கிராமங்களின் ஊடாகவும் படையினர் சென்றனர். இவர்கள் கண்ணில் தென்பட்டவர்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்களைப் பிடித்துச் சென்று சுங்கான்கேணி சாராயத் தவறணைக்கு முன்பாக இருந்த காட்டினுள் வெட்டிப் போட்டனர்.
அங்கு ஒருசிலரின் சடலங்கள் கிடந்து கண்டெடுக்கப்பட்டன. ஆனால் பலரைக் காணவில்லை. இந்த நடவடிக்கையின்போது இக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர்வரை காணாமல் போயுள்ளனர். அது மாத்திரமின்றி ஆட்கள் இல்லாத வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் உடமைகளும் காணாமல்போயிருந்தன.
இப்படை நடவடிக்கைக்குப் பின்னர் கறுவாக்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பெற்றோல் நிலையச் சந்தியில் இருந்த பிரதேச செயலகக் கட்டிடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் கறுவாக்கேணி கிராமத்தில் வாழ்ந்த பல குடும்பங்கள் இடம்பெயரத் தொடங்கின. அத்துடன் எல்லைப் பகுதி மக்களும் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர்.
கறுவாக்கேணியைப் பொறுத்தவரையில் இங்குள்ள அதிகமான குடும்பங்கள் முன்பு ஓட்டமாவடியிலேயே வாழ்ந்து வந்தன. ஓட்டமாவடியின் சந்தியை மையமாக வைத்து முன்பு தமிழர்களும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு காணி நிலபுலங்கள் இருந்தன. பிள்ளையார் ஆலயம், மயானம் என்பனவும் இருந்தன. தமிழர்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அன்னியோன்னியமாகவே வாழ்ந்து வந்தனர். ஓட்டமாவடி பஜாரில் தமிழர்கள் பல கடைகளையும் நடத்தி வந்தனர்.
ஆனால் 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து அங்கிருந்த தமிழர்கள் இடம்பெயரத் தொடங்கினர். இவர்கள் கறுவாக்கேணியில் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். ஓட்டமாவடியில் முன்பு இருந்த பிள்ளையார் ஆலயப் பகுதியில் இன்று பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளதுடன் மயானத்தில் தபாலகமும், பிரதேச செயலகமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உண்மை அங்குள்ள பலருக்குத் தெரிந்த விடயம். தமிழர்களும் முஸ்லிம்களும் அன்று ஒற்றுமையாக வாழ்ந்ததை இரு சமுகத்திலுமுள்ள முன்னோர்களில் பலர் இன்றும் நினைவு கூருகின்றனர்.
-எஸ்.ஜெயானந்தமூர்த்தி
தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்