ஈழத்தமிழர் உயிர் காக்க “தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல்ரவூப்.
1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகாஅரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம்இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடாநாட்டிலிருந்து வெளியேற்றி கொண்டிருந்தது. ஒருபுறம்தெற்காசிய விளையாடுப் போட்டிக்காக சிங்கள கிரிக்கெட்அணி இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் விளையாட தயாராகிக்கொண்டிருந்தது.
மறுபுறம் தொலைக்காட்சியில் 150 விடுதலைப்புலிகள் சிங்களஇராணுவத் தாக்குதலில் மரணமடைந்தனர் என்ற செய்திஓடிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் காணப்பொறுக்காமல்இருபத்தி நான்கு வயதுடைய இளைஞன் ஒரு வன் மனச்சோர்வோடு காணப்பட்டான். 1995, டிசம்பர் 15ஆம் நாள் பொழுது புலர்ந்தது. தான் பணிபுரிந்து வந்த லண்டன் கணினி பயிற்சிப் பள்ளிக்குச்சென்றான். அங்கிருக்கும் ஒரு அறைக்குச் சென்று தாம் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தன்னுடலில் முழுவதும் ஊற்றினான். நனைந்த ஆடையோடு அருகிலுள்ள காமராசர்வளைவுக்கு ஓடோடி வந்தான். தீயை தன்னுடலில் பற்றவைத்தான். கருகிக் கொண்டிருக்கும் உடலைக் கண்டவுடன் நண்பர்கள் சிலர் காப்பாற்ற ஓடோடி வந்தனர். அப்போது அந்த இளைஞன் பின்வருமாறு கூறினான்: “என்னைக் காப்பாற்றாதீர்கள்: ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்” என்று உருக்கமாக பேசி சரிந்தான். அரசு மருத்துவ மனையில் உடல் முழுவதும் வெந்த நிலையில்சேர்க்கப்பட்டான். காவல் துறையினர் மோப்பம் பிடித்து வாக்கு மூலம் பெற ஓடோடி வந்தனர்.
” தம்பி! நீ எந்த கட்சியப்பா என்றதும், கட்சிகள் பேரைச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர்! முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளிச்சேன்” என்று இறுதி வாக்கு மூலம் தந்தான். அவன் பெயர் அப்துல் ரவூப். 05.12.1971ஆம் ஆண்டு பிறந்தான். தந்தை பெயர் அசன்முகம்மது. பெரம்பலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். தி.மு.க. ஆதரவாளரும்கூட. அப்துல் ரவூப் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். சிறுவயது முதலே எதையும் தீவிமாக சிந்திக்கும் குணமுடையவன். யாரிடமும் அதிமாக பேச மாட்டான். ஆனால் எதைப் பற்றிக் கேட்டாலும் தெளிவாக பதில் தருவான். தாய்மீது மிகுந்த பாசம் கொண்டவன்.
புத்தக வாசிப்பு நிறைய உண்டு. ஒருமுறை கிரிக்கெட்டில் இந்தியா தோற்ற போது விம்மிவிம்மி அழுது தனது இந்திய தேசப்பற்றை வெளிக்காட்டினான். அப்போது தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள அரசின்கொடூரக் கொலைகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதற்காக இந்தியாவின் கல்மனம் கரையாதிருப்பது கண்டுமிகவும் வருத்தம் கொண்டான். அன்றிலிருந்து சிங்கள அரசோடு இந்தியாவையும் சேர்த்து வெறுக்க கற்றுக்கொண்டான். அப்துல் ரவூப் நாகப்பட்டினம் ஐ.ஐ.டி.யில் சுருக்கெழுத்தர் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாள் காணாமல் போனான். பரிதவித்து வந்த தந்தையார் அசன்முகம்மதுக்கு மும்பையில் உள்ள “கொலாபா” பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது.
சமாதானம் பேசி ஒரு வழியாய் அசன்முகமது தனது மகனை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது தந்தையிடம் அப்துல் ரவூப் பின்வருமாறு கூறினார்: “நான் பிராபாகரன் அணியில சேர்ந்து போராடறதுக்காகப்போனேன். என் இலட்சியத்தை வீணடித்து விட்டீர்களே? “அவன் சொன்ன பதில் தந்தையை திகைக்க வைத்தது. அப்துல்ரவூப்பிற்கு ஈழ விடுதலை உணர்வு நெஞ்சில் கணன்று கொண்டிருப்பதை புரிந்து கொண்டார். சாவின் விளிம்பிலும்கூட அப்துல் ரவூப்பின் கண்ணில் ஈரம் கசிய வில்லை என்பதை பல பேட்டிகளில் வெளிப்படுத்தினார். அப்துல் ரவூப் ஈழ விடுதலை மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தீராப் பற்றுக் கொண்டதை பாராட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுப் பணியகம் விடுத்த அறிக்கைபின் வருமாறு: “கலந்திருக்கும் சுவாசக் காற்றில் நஞ்சைத்தூவக் காத்திருப்பவைகள் யாவும் சத்தின்றி சருகாகப் போகும் என்பதைத் தான் அப்துல் ரவூப்பின் தியாகம் எடுத்துரைக்கிறது” அப்துல் ரவூப் ஏந்திய தீப்பந்தம் இன்னும் அணைய வில்லை. அது எதிரிகளை எரிக்கும். தன்பகை முடிக்கும். வெல்லும் தமிழீழம்!
நன்றி: செய்தி உதவி: நந்தன் வழி மாதமிருமுறை ஏடு (மார்கழி 1-15, 1997).