வட இலங்கை தமிழர்களின் ஆதிகால வரலாறு புகைபடர்ந்து இருப்பதற்கான காரணம் என்ன???
தென்னாசியாவிலே தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை இருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு தொடர்ச்சியான வரலாற்றை உறுதிப்படுத்த இலக்கியங்களோ, தொல்பொருள் ஆதாரங்களோ இல்லை. இதற்கு காரணம் தமிழர்களின் வரலாறானது மறைத்தும், மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆனால் சிங்கள இனத்தின் வரலாறானது இலங்கையின் தமிழர்களின்பின் வந்தாலும் அவர்களின் வரலாறானது இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்களின் மூலம் தங்களின் வரலாற்றினை மெருகூட்டி கட்டியெழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் அரசியல் செல்வாக்கும் எனலாம்.
இலக்கியங்களில் தமிழர்கள் பற்றிக்கூறும் போது தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் வந்தேறு குடிகளே தமிழர்கள், ஆனால் இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்களே என்று கூறுகின்ற போதிலும் கல்வெட்டு ஆதாரங்களின்படி சிங்களம் என்ற சொல் கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர்கள் பற்றிய செய்தி கல்வெட்டு ஆதாரங்களின்படி கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் “தமிழ்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே தொல்லியல் ஆதாரம் என்பது இங்கு மிக முக்கியமாகக் காணப்படுகின்றது. ஆகவே தொல்லியல் ஆதாரத்தின்படியே ஒரு நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க வேண்டும். தமிழர்களின் பகுதியான வடகுதியின் வரலாறானது கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை புகைபடந்த வரலாறாகவே காணப்பட்டது. இவை தொடர்பான ஆதாரங்கள் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்துள்ளது.
காரணம் இங்கு தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே வாழ்ந்தனர் அல்லது ஆட்சியினை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதனை மறுத்து தென்னிலங்கையிலே சிங்களவர்கள்தான் ஆதி காலம் தொட்டு ஆட்சியினை மேற்கொண்டுள்ளனர் என்பதனை கூறுவதற்காக இவ்வாறு செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் பின்னர் வட இலங்கை வரலாறானது புது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஒரு லச்சத்து இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை இரணைமடுவில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர வட இலங்கையில் ஆனைக்கோட்டை, கட்டுக்கரை, நாகபடுவான், பூநகரி, சாட்டி, கந்தரோடை என பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவ்வாறு பல ஆதாரங்கள் வட இலங்கையில் கிடைக்கின்ற போதிலும் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொண்டால் வட இலங்கையின் தமிழர் வரலாறானது கட்டியெழுப்பப்படும்.
ஆனால் பல காரணங்களினால் தமிழர் வரலாறானது வெளிக்கொண்டுவரப்பட முடியவில்லை. காரணம் அரசியல் பிரச்சனைகள். மற்றும் ஒரு இடத்தில் (காணியில்) தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்தால் அக்காணி பறிபோய்விடுமென உரிமையாளர்கள் மறைக்கின்றனர். மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் பற்றி போதிய விளக்கம் இல்லாதவர்கள் சேதப்படுத்துகின்றனர். புதையல் தோண்டும் கும்பல்களினால் அளிக்கப்படுகின்றது. மற்றும் ஒரு ஆதாரம் கண்டுபிடித்தாலும் அவற்றை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல பிரச்சனைகள் காரணமாக வட இலங்கையின் தமிழர் வரலாறு வெளிக்கொண்டுவர முடியவில்லை. தொல்லியல் ஆய்வினை மேற்கொள்ளவும், வெளிப்படுத்தவும் சிக்கல்கள் காணப்படாதவிடத்தே வட இலங்கையின் தமிழர் வரலாறு கட்டியெழுப்பப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.