
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில் (1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் எனும் பாதிரியாருக்கு, கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.
வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி, 3 பவுண் மாதச் சம்பள, ஆசிரியப் பணியைத் துறந்தார்.
சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல்விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.