தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு இயங்கிய ஐயா இளவழகனார்!!
தமிழின விடுதலைமீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு இயங்கிய ஐயா இளவழகனார் காலமானார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் அதிகமான தனித்தமிழ் நூல்களை வெளியிட்ட இவர் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கான முழு ஏற்பாடுகளையும் முன்னின்று நடாத்தினார்.
விடுதலைப் போராட்டத்தின் தலைப்பயணிகளான பொன்னம்மான், பேபி அண்ணா முதல் முள்ளிவாய்க்கால் முடிந்த பின் அமைப்பை மீளக்கட்டுமானம் செய்ய முன் வந்து வீரச்சாவடைந்த போராளிகள் வரை பலருக்கு இவரது வீடு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஒரத்த நாட்டிலும் அதை அண்டிய பகுதிகளிலும் நடைபெற்ற இரகசிய பயிற்சி முகாம்களை தன்னுடைய தனிப்பட்ட விடுதலை விருப்பால் இவர் செய்ய போதும் அது குறித்து எங்குமே பேசியதில்லை.
தன்னுடைய வீட்டிலேயே மாதக்கணக்கில் தங்கிச் சென்ற போராளிகள் குறித்து எங்குமே வெளியில் சொல்லிக் காட்டியதில்லை. வலது கை செய்யும் உதவி இடது கையிற்கு தெரியாத அளவு மிகவும் உன்னதமான மேம்பட்ட மாந்தப் பண்பாடுடைய இவர் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணி மிக முக்கியமானது .
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டதிலும் இவர் முக்கிய பங்காற்றினார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களுக்கென்று ஒரு தேசம் அமைய வேண்டுமென மாசிலா மனசுடன் உழைத்த ஐயா இளவழகனார் அவர்களுக்கு எம்முடைய அஞ்சலிகள். தமிழ் உள்ளவரை நீவிர் வாழ்வீர் தரணி உள்ளளவும் தமிழும் வாழும்.