×

அதிகாரம் 101 – நன்றியில் செல்வம்

குறட் பாக்கள்

குறள் #1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.

பொருள்
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.

குறள் #1002

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள்
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.

குறள் #1003

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பொருள்
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

குறள் #1004

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பொருள்
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.

குறள் #1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பொருள்
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

குறள் #1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.

பொருள்
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

குறள் #1007

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

பொருள்
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

குறள் #1008

நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.

குறள் #1009

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

குறள் #1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனைய துடைத்து.

பொருள்
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

ஈட்டம் 

பொருளீட்டல்

இவறி 

ஆசைப்பட்டு

இசை 

புகழ்

ஏதம் 

நோய்

தமியள் 

தனியாய் இருப்பவள்

துனி 

வறுமை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments