×

அதிகாரத்தின் அரூப கரங்கள்

மிஷேல் பூக்கோ (Michel Foucault, 1926-1980) ஒரு பிரஞ்சு தத்துவாசிரியர். ஒரு புதுமையான சமூகச் சிந்தனையாளர். சமூக உலகத்தையும் மனித உறவுகளையும் ஒரு புதிய பரிமாணத்தில் வித்தியாசமாக நோக்கியவர். அறிவுலகங்களை அகழாய்வு செய்தவர். அவற்றின் ரிஷி மூலங்களைக் கண்டுபிடித்துக் காட்டியவர். அதிகார உறவுகளின் சிலந்தி வலைக்குள் மனித வாழ்வு சிக்குண்டு கிடப்பதை மிகவும் நுட்பமாக எடுத்து விளக்கியவர். அறிவுலகமும் அதிகார உலகமும் கூட்டுச் சேர்ந்து மனித அடக்குமுறைக்கு ஒத்துழைக்கும் தந்திரோபாயங்களைப் பிட்டுக்காட்டியவர். மேற்குலகின் அரச அதிகார நிறுவனங்களான காவற்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள், நிர்வாகத்துறை, படைத்துறை ஆகியன எவ்வாறு தனிமனிதர்களைச் சமூகப் பொம்மைகளாக வனைந்து இறுக்கமான சமூகக் கட்டுப்பாட்டை பேணி வருகின்றன என்பதை மிகவும் ஆழமாகவும் துல்லியமாகவும் விளக்கியவர். அவர் நிறைய எழுதினார். பல துறைகள் பற்றி எழுதினார். பைத்திய வைத்தியம் பற்றியும் பாலியல் வரலாறு பற்றியும் தார்மீக தத்துவங்கள் பற்றியும் சிந்தனை உலகங்களின் படிநிலை வளர்ச்சி பற்றியும் பல்வேறு துறைகளை ஆழமாக ஆய்வு செய்து எழுதினார். அவரது எழுத்துக்கள் மேற்குலக சிந்தனைப் பாரம்பரியத்தில் என்றுமில்லாத புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எழுத்தில் புதுமையும், பார்வையில் அபாரமான கூர்மையும் இருந்தது. அதனால் அவர், பிற்கால நவீனத்துவத்தின் (Post-Modernism) பிதாமகர் எனப் போற்றப்பட்டவர்.

மிஷேல் பூக்கோவின் ஆய்வுலகம் பரந்தது. அதனை ஒரு கட்டுரையில் முழுமையாக விளக்குவது கடினம். அவரது புதுமையான சமூக தரிசனத்தைச் சுருக்கமாக விளக்கும் அறிமுகக் குறிப்பாகவே இதனை எழுதுகிறேன்.

தத்துவப் போதனாசிரியராகப் பிரஞ்சு அறிவுலகத்தில் பிரவேசித்த பூக்கோ, ஆரம்பத்தில் மாக்சிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்.

ஐம்பதுகளின் முற்பகுதியில், இரண்டாம் உலகப் பெரும்போரின் இடிபாடுகளிலிருந்து விரக்தியுடன் வெளிவந்த ஐரோப்பிய இளம் பரம்பரை ஒரு புதிய யுகத்தைக் கனவு கண்டது. அநீதியும் வன்முறையும் ஒழிந்த ஒரு புதிய சமூக ஒழுங்கைத் தேடியது. அந்தத் தேடுதலில் ஈடுபட்ட இளம் அறிவுஜீவிகளுக்கு மாக்சிய சிந்தனை புதிய வெளிச்சத்தைக் காட்டியது. மாற்று உலகத்திற்காக ஏங்கிய பூக்கோ மாக்சியத்தை தழுவினார். பிரஞ்சு கம்யூனிச இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்த ஈடுபாடு சொற்ப காலத்திற்கே நீடித்தது.

பிரஞ்சு கம்யூனிச இயக்கம் வைதீக மாக்சிய கோட்பாடுகளை இறுக்கமாகப் பற்றி நின்றது. புதிய விசாரணைகளுக்கு இடைவெளி கொடுக்க மறுத்தது. புதிய பார்வைகளை ஏற்க மறுத்தது. எல்லா உறவுகளையும், எல்லாப் புறநிலைகளையும் விளக்கும் பொதுவுண்மையாக, எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் மெய்யுண்மையாக மாக்சியத்தை வழிபட்டது. இயற்கையினதும், வாழ்க்கையினதும், வரலாறினதும் மாற்ற முடியாத நியதிகளாக, விஞ்ஞான விதிகளாக, இயங்கியலை வரித்துக் கொண்டது. அந்த விதிகளின் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தால், மனித வரலாறு ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எண்ணியது. இத்தகைய மரபுவாதத்தை, குருட்டுத்தனமான தத்துவ வழிபாட்டை பூக்கோவால் ஜீரணிக்க முடியவில்லை. “மாக்சியம் புதிதாக சுவாசிக்க விரும்பவில்லை. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பழமையில் புதைந்து கிடக்கிறது” எனக் கண்டித்தார் பூக்கோ. மூன்றாண்டு கால ஈடுபாட்டுடன் கம்யூனிச இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். மாக்சிய தத்துவத்தைப் புதுப்பிப்பதற்கு அவர் முனையவில்லை. முற்றிலும் வித்தியாசமாக, புதிதாக அவர் சமூக உலகத்தை விசாரிக்க முனைந்தார்.

மேற்குலக தத்துவாசிரியர்களில் ஜெர்மானிய சிந்தனையாளரான நீச்சேயின் எழுத்துக்கள் பூக்கோவை வெகுவாக ஆகர்ஷித்துக் கொண்டன. நீச்சேயின் படைப்புகளில் ஒரு விசித்திரமான புதுமையை அவர் கண்டார். ஏனைய தத்துவாசிரியர்கள் போன்று, கருத்துலகக் கோட்டைகளை நீச்சே கட்டியெழுப்ப விழையவில்லை. பிரபஞ்சத்தின் இரகசியம் பற்றியும் மனித வாழ்வின் அர்த்தம் பற்றியும் தேடுதல்களை நடத்தவில்லை. கடவுளையோ மனிதனையோ மையப் புள்ளியாக வைத்து வாழ்விற்கு விளக்கம் அளிக்கவில்லை. நீச்சே எல்லாவற்றையும் எள்ளி நகையாடினார். எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சித்தார். எல்லாவற்றையும் நிராகரித்தார். அவரது எழுத்துக்கள் மேற்குலக மனிதனின் நீண்ட காலக் கனவுகளைக் கலைத்தது. கிறீஸ்தவ நாகரீகத்தின் தார்மீக முகமூடிகளைக் கிழித்துக் காட்டியது. நீச்சேயின் கண்டனத் திறனாய்வும் அவரது மரபு மூல (Geneological) விசாரணை முறைமையும் பூக்கோவை வெகுவாகக் கவர்ந்தது. பொய்மைகளைப் போர்த்தியவாறு, மறைபொருளாகப் புதைந்து கிடக்கும் மெய்மைகளைக் கண்டு கொள்வதற்கு மூலங்களைத் தேடும் விசாரணையே சிறந்ததாக அவருக்குத் தோன்றியது. நீச்சேயின் வழி தழுவி, வேர்களைத் தோண்டும் தனது ஆய்வு முறைமையை ‘அகழாய்வு’ என வர்ணித்தார் பூக்கோ. தனது ஆய்வு முறைமை பற்றி எழுதிய நூலுக்கு ‘அறிவின் அகழாய்வு’ (Archaeology of Knowledge) எனத் தலைப்பிட்டார். அறிவுலகங்களை ‘அகழாய்வு’ செய்யும் நுட்பமான ஆய்வு முறைமையை அறிமுகப்படுத்தியதால் அவரை ‘சிந்தனைப் பாரம்பரியங்களின் வரலாற்றாசிரியர்’ என அழைப்பதுண்டு.

பூக்கோவின் பார்வையில் அறிவுலகங்கள் பலரகமானவை. விஞ்ஞானம், மருத்துவம், பொருளியல், சமூகவியல், சட்டவியல், அரசியல் என்ற ரீதியில் சிந்தனையுலகங்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனக்கே உரித்தான கட்டமைவு விதிகளையும் செயல்நெறிகளையும் கொண்டவை. காலத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டு புறநிலைகளுக்கு ஏற்ப, சிந்தனையுலகங்கள் மாற்றங்களைச் சந்திக்கின்றன. இந்த மாற்றங்களாகக் கட்டவிழும் வரலாறு சிக்கலானது. காலச்சீர் அற்றது. முறிவுகளையும் முரண்பாடுகளையும் கொண்டது. இந்த அறிவுலகங்கள் தனியுலகமாக சமூக வாழ்விற்குப் புறம்பாக இயங்கவில்லை. அவை சமூக உலகத்தை ஊடுருவி நிற்கின்றன. சமூக நிறுவனத் தளத்திலிருந்து செயற்படுகின்றன. சமூக உறவுகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்தச் சிந்தனை உலகங்களின் உருவாக்கம், அவற்றின் கட்டமைவு, அவற்றின் செயல்நெறிகள், அவற்றின் நிறுவனமயமாக்கல், அவற்றின் சமூக உறவுநிலைகள், அவற்றின் மாற்றம், வளர்ச்சி பற்றிய வரலாறு ஆகிய பன்முக விசாரணைகளைக் கொண்டதாக பூக்கோவின் ‘அகழாய்வு’ அமைகிறது. இந்தச் சிக்கலான ஆய்வுமுறைமை பற்றியோ அதன் சாதக பாதக அம்சங்கள் பற்றியோ எடுத்து விளக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. பூக்கோவின் ஆய்வு புலப்படுத்திக் காட்டும் சில சமூக உண்மைகள் பற்றியே நாம் இங்கு விளக்கிக் கூற விரும்புகிறோம்.

அறிவுலகத்தை சமூக வாழ்வியக்கத்தின் ஆழத்தில் அலசிப் பார்த்த பூக்கோவுக்கு ஒரு விசித்திரமான உண்மை புலப்பட்டது. அறிவுலகமானது தனியுலகமாக நின்று, மனித விமோசனத்திற்கு வெளிச்சம் காட்டவில்லை. மாறாக, அது அதிகார உலகத்துடன் கைகோர்த்து நின்று மனிதர்களை விலங்கிட்டு வைத்திருக்கிறது என்ற கசப்பான உண்மையை அவர் கண்டு கொண்டார்.

தற்கால சமூக உலகம் ஒரு விபரீதமான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. சாதாரண மனித உறவுகள் அசாதாரண அதிகார உறவுகளாக மாறி வருகின்றன. அதிகாரமானது சமூக வாழ்வின் சகல மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சகல சமூக அமைப்புகளிலும், சகல சமூக உறவுகளிலும் மையம் கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் இந்த மேலாதிக்கத்திற்கு அறிவு துணை போகிறது. அறிவும் அதிகாரமும் ஒன்றோடு ஒன்று கூட்டுச் சேர்ந்து, ஒன்றுக்கொன்று முண்டுகொடுத்துச் செயற்படுகின்றன. இந்த எதிர்மறையான கூட்டுறவு ஆதிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. அறிவும் அதிகாரமும் ஒன்றிணைந்து, மிகவும் நுட்பமான முறையில், புலன்களுக்கு புலப்படாத வகையில், மனித உறவுகளை நெறிப்படுத்தி, ஒழுங்கமைத்து, கட்டுப்படுத்தி, மனித வாழ்வுமீது என்றுமில்லாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அறிவும் அதிகாரமும் கூட்டாக பின்னிவிட்ட ஆதிக்க வலைக்குள் தற்கால மனிதன் மீளமுடியாதவாறு சிக்குப்பட்டுக் கிடக்கிறான் என்ற மையக் கருத்தையே பூக்கோவின் ஆய்வுகள் புலப்படுத்திக் காட்டுகின்றன.

அதிகாரம் பற்றியும் அதன் தோற்றுவாய் பற்றியும் அது மையம் கொள்ளும் நிறுவனங்கள் பற்றியும் காலம் காலமாக நம்பப்பட்டு வந்த கருத்துக்களை பூக்கோவின் விசாரணைகள் தகர்த்து விட முனைகின்றன.

அதிகாரமானது சமூகப் படிநிலையின் சிகரத்தின் மீது குவிந்து கிடக்கவில்லை. அல்லது அரசின் நிர்வாகச் சிம்மாசனத்திலிருந்து ஆட்சி புரியவில்லை. அன்றி, அது ஆளும் வர்க்கத்தின் அசையாச் சொத்துமல்ல. அதிகாரமானது எந்தவொரு மையத்திலிருந்தும் பிரவாகம் எடுக்கவில்லை. அது எங்கும், எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கிறது. எங்கெங்கெல்லாம் மனிதர்கள் உறவுகொண்டு, கூட்டாக, குழுவாக அமைப்பாக இயங்குகிறார்களோ, அங்கெல்லாம் அதிகார உறவுகள் இருக்கத்தான் செய்கிறது. அதிகாரம் மையம் கொள்ளும் நுண் தளங்கள் (Micro-Centers of Power) பல ரகமானவை. அது குடும்பத்திலும் இருக்கிறது. கோவில் நிர்வாகத்திலும் இருக்கிறது. அதிகாரம் என்பது அரசியலுக்குச் சொந்தமானதல்ல. அதன் வீச்சு பரந்தது. அது சிறிய அளவிலும் பெரிய அளவிலும் எல்லா சமூக நிறுவனங்களிலும் பரந்து செறிந்து கிடக்கிறது என்கிறார் பூக்கோ.

தற்கால சமூக வாழ்வில் அதிகாரம் எவ்வாறு மேலாண்மை செலுத்துகிறது? அது எவ்விதம் செயற்படுத்தப்படுகிறது? அதிகாரத்தை வலுப்படுத்தி, நிலைப்படுத்தி, செயற்படுத்துவதில் அறிவுலகங்களும் அவை சார்ந்த நிறுவனங்களும் எவ்வாறு துணை போகின்றன? இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் வகையில், குற்றவியல், பாலியல், மனநோயியல், போன்ற துறைகளில் ஆழமான அகழாய்வை நிகழ்த்திப் பல உண்மைகளைத் தோண்டி எடுத்திருக்கிறார் பூக்கோ. இந்த ‘அகழாய்வு’ சமூகத்தின் அடித்தளத்திற்கும் அடியிலுள்ள பாதாள உலகத்திற்கும் அவரை இட்டுச் சென்றது. அங்கு வசித்த ‘மனிதப் பேய்களின்’ இருண்மையான வாழ்க்கை அனுபவம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. கொலைகாரர்கள், குற்றவாளிகள், பைத்தியக்காரர்கள், காமுகர்கள் என்ற முத்திரைகள் குத்தி இவர்களை வேண்டாதோராக, தீண்டாதோராகச் சமூகம் விலக்கி வைத்திருந்தது; ஒதுக்கி வைத்திருந்தது. இவர்கள் சமூகம் வரித்து விட்ட ஒழுக்க நெறிக்குள் வாழ மறுத்தவர்கள். சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறியவர்கள். சமூகம் எண்ணியபடி சிந்திக்க மறுத்தவர்கள். சமூகத்தின் நியமங்களை நிராகரித்தவர்கள். இந்த அந்நியமானவர்களின் அனுபவக் கிடங்கிற்குள் இருப்பின் உண்மைகள் பல ஒளிந்து கிடந்தன. இந்த அனுபவக் கிடங்குகளை அகழாய்வு செய்தார் பூக்கோ.

நூலக நிலவறைகளின் இருளுக்குள் நீண்ட காலமாக மறைந்திருந்த பழைய குற்றவியல் ஆவணங்களைத் தோண்டிப் பார்த்த பொழுது அந்தக் கொலைச் சம்பவத்தை அவர் கண்டு பிடித்தார். 1835இல் நோர்மண்டியிலுள்ள ஒரு கிராமத்தில் அந்தக் குடும்பக் கொலை நிகழ்ந்தது. பியர் ரிவியே (Pierre Riviere) என்ற 20 வயது நிரம்பிய ஒரு இளம் விவசாயி, கர்ப்பிணியான தனது தாயாரையும் 18 வயதுடைய தனது சகோதரியையும் 17 வயதுடைய தனது சகோதரனையும் கொலை செய்தான். கைக் கோடாரி ஒன்றால் மண்டைகளைப் பிளந்து மிகக் கோரமான முறையில் இந்தக் கொலைகளைப் புரிந்துவிட்டு தலைமறைவாகிய அவனை, சில நாட்களின் பின்னர் காவற்துறையினர் கைது செய்தனர். அன்று, பிரான்ஸ் நாட்டில் இந்தக் கொலைச் சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் நீண்ட விசாரணை நடந்தது. அவனைப் பைத்தியக்காரனாக நீதிமன்றம் கண்டது. இறுதியில், பியர் ரிவியேக்கு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பின்னர் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

இந்தக் கொலை வழக்கில் ஒரு விடயம் பூக்கோவின் கவனத்தை ஈர்ந்தது. கொலையாளியான பியர் ரிவியே, வழக்கு விசாரணை நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தனது சுயசரிதையைச் சுருக்கமாக எழுதியிருந்தான். கையெழுத்தில் நாற்பது பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தில், ரிவியே தனது குடும்ப வாழ்வனுபவத்தைத் துல்லியமாக விபரித்திருக்கிறான். தனக்கும் தனது பெற்றோருக்கும் மத்தியிலான சிக்கலான உறவு பற்றியும் தனது மனவுலகச் சலனங்கள் பற்றியும் தாய் சகோதரர்கள் மீது தான் கொண்டிருந்த வக்கிர உணர்வுகள் பற்றியும் கொலைகள் செய்வதற்குத் தன்னைத் தூண்டிய காரணிகள் பற்றியும் மிகவும் துலக்கமாக, விளக்கமாக, சித்தத் தெளிவுடன் அவன் எழுதியிருக்கிறான். உண்மை விளக்கமாக, ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்த இந்த முக்கிய ஆவணம் வழக்கு விசாரணையின்போது இருட்டடிப்புச் செய்யப்பட்டமை பூக்கோவுக்கு வியப்பைக் கொடுத்தது. ரிவியேயின் சொந்தக் கதை கேட்பார் எவருமின்றி சட்டத்தின் இருட்டறைக்குள் புதைக்கப்பட்டது ஏன்? அவனது விபரீத செயலுக்கு அவன் கொடுத்த விளக்கத்தை நீதியுலகம் கருத்தில் எடுக்காதது ஏன்? அவனது ஆன்மாவின் உண்மைக் குரலை மறைத்து விட்டு, மற்றவர்களின் மதிப்பாய்விலிருந்து அவனுக்குப் பைத்தியப் பட்டம் வழங்கப்பட்டது ஏன்? இவை பற்றி ‘அகழாய்வு’ செய்த பூக்கோ இந்தச் சமூக நிகழ்வின் முழுப் பரிமாணத்தையும் விளக்கும் நோக்கில் 1973ஆம் ஆண்டு ஒரு சிறு நூலை வெளியிட்டார். இவ்வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்களை இந்நூல் தொகுத்துத் தருகிறது. இந்தத் தொகுப்பில், அரச தரப்பு வழக்கறிஞரின் குற்றப்பத்திரிகை, சட்டவாளரின் வாதங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவரின் மதிப்பாய்வுகள், மனவியல் நிபுணரின் கருத்துரைகள், நீதிபதியின் குறிப்புகள், பத்திரிகைகளின் செய்தி அறிக்கைகள் எனப் பல ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் மையப் பகுதியில் பியர் ரிவியேயின் சுயசரிதை, அவன் எழுதியபடியே திருத்தமின்றிப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. நூலின் பிற்பகுதி பூக்கோவினதும் வேறு சிலரதும் கருத்துரைகள் கொண்டதாக அமைகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ குற்றவாளியின் குற்றச்செயல் பற்றியோ இந்த நூலில் எவ்வித விமர்சனங்களோ வியாக்கியானங்களோ தரப்படவில்லை. அது தமது நோக்கமில்லை என்கிறார் பூக்கோ. ஒரு சம்பவத்தை, ஒரு சமூக நிகழ்வை, ஒரு மனிதன் புரிந்த குரூரச் செயலை, அந்தச் செயலோடு சம்பந்தப்படாத மற்றவர்கள், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள், அறிஞர்கள், அதிகாரிகள் எவ்வாறு அணுகுகிறார்கள், எவ்வாறு பார்க்கிறார்கள், எவ்வாறு மதிப்பாய்வு செய்கிறார்கள் என்பதை இந்நூல் சூசகமாகச் சுட்டிக் காட்ட விழைகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு அறிவுலகங்கள் சங்கமிக்கின்றன. சட்டம், மருத்துவம், மனவியல், மனநோயியல், குற்றவியல் போன்ற பல்வேறு அறிவுலகங்களின் கருத்தாடல் களமாக இந்த நிகழ்வு அமைகிறது. இந்த அறிவுலகக் கருத்தாடலில் இச் செயலுக்குப் பொறுப்பாளியான, இந்நிகழ்வின் கதா நாயகனான பியர் ரிவியேயின் கருத்தை எவருமே கருத்தில் எடுக்கவில்லை. அவனது கருத்தைக் கருத்தாகவும் கருதவில்லை. அவனது செயலை வைத்தே அவனை ஒரு பித்தனாக, சித்தக் கோளாறு பிடித்தவனாக அறிவுலகங்கள் தீர்மானித்து விடுகின்றன. ஆனால் ரிவியே மௌனியாக நிற்கவில்லை. சாவின் விளிம்பில் நின்றபடி, அவன் தனது சரித்திரத்தை எழுதியிருக்கிறான். தனது எண்ணங்களை எழுத்தில் வார்த்து, தனது செயலுக்குக் காரணம் கற்பித்திருக்கிறான். அந்தச் சுயசரிதையில் தனது தாயை ஒரு கொடியவளாகச் சித்தரித்திருக்கிறான். நல்ல மனிதரான தனது தந்தையை முழுக் குடும்பமும் சேர்ந்து வதைத்து வந்ததாகச் சொல்லியிருக்கிறான். “நான் எனது தந்தையை மிகவும் ஆழமாக நேசித்தேன். அவர் அனுபவித்த துன்பம் எனது மனதை புண்படுத்தியது. கடைசி நாட்களில் அவர் பட்ட துயரமும் சோதனையும் என்னை ஆழமாகப் பாதித்தது. இது பற்றிய எண்ணங்களே என்னை முழுமையாக ஆட்கொண்டது. ஒரு மாதத்திற்கு முன்னரே அந்தப் பயங்கரத் திட்டம் பற்றி நான் எனது மனதில் ஒரு படத்தை வரைந்து கொண்டேன். எனது தாய், சகோதரன், சகோதரி மீது நான் அன்பும் மதிப்பும் கொள்ள வேண்டும் எனக் கூறும் அறப் பண்புகள் எனது மனதிலிருந்து மறைந்து கொண்டன. விசர் நாய்களின், கொடிய விலங்குகளின் அதிகாரப் பிடிக்குள் சிக்கி அவலப்பட்டு வரும் எனது தந்தைக்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என நான் நினைத்தேன். இப்படியான கொடும் செயலை மதமானது தடைசெய்திருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் மதத்தின் நெறிகளை நான் கருத்தில் எடுக்கவில்லை. என் மூலமாக தனது தெய்வீக நீதியை நிறைவு செய்ய இறைவன் விதித்திருக்கலாம் என்றும் கூட எண்ணினேன். மனிதர்களின் தர்மம் பற்றியும் சமூக ஒழுங்கமைப்பின் விதிகள் பற்றியும் நான் அறிவேன். மனிதர்கள் மானம் கெட்டவர்கள்; இழிசனர்கள். இவர்களை விட நான் புத்திசாலி… நான் மனித சட்டங்களை மறுதலிக்கத் துணிந்தேன். எனது தந்தைக்காக எனது உயிரையும் அர்ப்பணிப்பதில் நான் அழியாப் புகழையும் இறவா நிலையையும் அடையலாமென நினைத்தேன்… ஒரு அரசனுக்காக, ஒரு நாட்டிற்காக எத்தனையோ போர் வீரர்கள் மடிந்து போகிறார்கள்… மன்னனைத் தெரியாதவர்கள் மன்னனின் இலட்சியத்திற்காக மடியும் பொழுது, நான் நேசித்து வழிபடும் என் தந்தைக்காக, என் தந்தையின் விடிவிற்காக எனது உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாதா?… இப்படியான எண்ணங்கள் எனது மனத்திரையில் ஓடி, எனது செயலுக்குத் தூபமிட்டன…” என்று எழுதியிருக்கிறான் ரிவியே.

இது ஒரு பைத்தியக்காரனின் அர்த்தமற்ற பிதற்றலல்ல என்கிறார் பூக்கோ. ரிவியேயின் எழுத்துகளில் ஒரு தர்க்கீகம் இழையோடுகிறது. காரண காரியத் தொடர்புடையதான ஒரு உள்நோக்கம் இருக்கிறது. அவனது எழுத்துகளில் ஒரு விபரீதமான ஆசை புதைந்து கிடக்கிறது. அந்த விபரீதமான ஆசைக்கும், எழுத்துக்கும், செயலுக்கும் மத்தியில் பிரிக்கமுடியாத ஒரு தொடர்பு இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் கதாநாயகன் அவனேதான். அந்தக் கதாநாயகனின் குரலை, தனது செயலுக்கு அர்த்தம் கற்பிக்கும் தர்க்கீகத்தை, சமூக உலகமானது கருத்தில் கொள்ளவில்லை என்கிறார் பூக்கோ. சமூகத்திற்கு ஒரு தர்க்கீகம் இருக்கிறது. நியாயப்பாடு இருக்கிறது. நியமம் இருக்கிறது. அந்தத் தர்க்கீகத்திற்கும் நெறிகளுக்கும் பொருந்தாத குரல்களை, பைத்திய உலகத்தின் இருளறைக்குள் மூடிவிடுகிறது சமூகம். அப்படியான ஒரு மனிதக் குரலையே வரலாற்றின் புதைகுழியிலிருந்து மீட்டெடுக்க முனைந்திருக்கிறார் பூக்கோ.

வழக்காடல் என்ற சமூக நிகழ்வில் சொல்லாடல் நிகழ்கிறது. அறிவுலக நிபுணர்களின் கருத்துப் போர் நிகழ்கிறது. அறிவுலகங்கள் ஒன்றோடு ஒன்று பலப்பரீட்சை நடத்தி அதிகார உலகத்திற்கு சேவையாற்றும் ஒரு விந்தையான நிகழ்வே இங்கு இடம்பெறுகிறது. நீதிதேவன் குடியிருக்கும் கோவிலல்ல நீதிமன்றம். அது அதிகாரம் கோலோச்சும் நிறுவனம். இங்கு அறிவுலக நிபுணத்துவம் அதிகாரத்தை நியாயப்படுத்தி, அதிகாரத்தின் கரங்களை வலுப்படுத்த முனைகிறது. அறிவும் அதிகாரமும் கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு சமூக நாடகமாகவே பியர் ரிவியேயின் கொலை வழக்கை சித்தரிக்கிறார் பூக்கோ. இது கதாநாயகனின் கருத்தாடல் நிகழாத ஊமை நாடகம் என்பது அவரது கருத்து.

நீதிமுறை பற்றியும் குற்றவியல் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகளை நிகழ்த்திய பூக்கோ, 1975இல் ‘ஒழுங்கும் தண்டனையும்: சிறையின் பிறப்பு’ (Discipline and Punish: The Birth of the Prison) என்ற நூலை வெளியிட்டார். ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆய்வு நூல் ஈற்றில் பூக்கோவுக்கு அனைத்துலகப் புகழை ஈட்டிக் கொடுத்தது.

தண்டனையின் சகல பரிமாணங்களையும் இந்த நூல் அகழாய்வு செய்கிறது. தண்டனை என்பது அதிகார வெளிப்பாட்டின் ஒரு வடிவம். மனிதர்கள் மீது ஆதிக்கம் பிரயோகிக்கும் உத்தி. சமூகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நடைமுறை. தண்டனையானது எல்லாக் காலங்களிலும், எல்லாச் சமூகங்களிலும் இருந்து வருகிறது. அன்றொரு காலம் உடலை வதைக்கும் உத்தியாக கையாளப்பட்ட இந்நடைமுறை, இன்று ‘ஆன்மாவை’ சீர்திருத்தும் ஒழுங்குமுறைகளைக் கொண்டதாக புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது. இன்று தண்டனையின் முகம் மாறியிருக்கிறது. தண்டிக்கும் உத்திகள் மாறியிருக்கின்றன. தண்டனை என்ற போர்வையில், அதிகார உலகமானது மிகவும் நுட்பமான முறையில் மனிதர்களை நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தி சமூகப் பொம்மைகளாக மாற்றி வருகிறது. அதிகாரத்தின் இந்தச் செயல்நுட்ப வளர்ச்சிக்கு அறிவுலகங்கள் துணைபோகின்றன. இந்த மையக் கருத்தையே இந்நூல் மிகவும் திறம்பட எடுத்து விளக்குகிறது. இது பற்றி இனி விபரமாகப் பார்ப்போம்.

II

உடலை வதைசெய்யும் கொடூரத்திலிருந்து உள்ளத்தை வனையும் ஒழுங்குமுறை நுட்பமாக தண்டனையின் தந்திரோபாயம் மாற்றம் கண்டிருக்கும் வரலாற்றுக் கதையை ‘ஒழுங்கும் தண்டனையும்’ எடுத்துரைக்கிறது. அன்றைய காலத்து ஒரு கோரமான மரண தண்டனையை விவரணம் செய்து தனது நூலை ஆரம்பிக்கிறார் பூக்கோ.

1757ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த சம்பவம் அது. லூயி மன்னனைக் கொலை செய்ய முயற்சித்ததாக டேமியன் என்ற பொதுமகன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒரு பேனாக் கத்தியால் தாக்கி பிரஞ்சு மன்னனுக்கு சிறிய காயத்தை ஏற்படுத்தியிருந்தான் டேமியன். ஆயினும், அரச கொலை முயற்சி எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவனுக்குப் பகிரங்க மரண தண்டனை விதிக்கப்பட்டது. இம்மரண தண்டனை எவ்விதமான உடல்வதையுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதை அன்றைய அரச கட்டளை கீழ்க்கண்டவாறு விதித்தது:

“வெந்தணலில் வேகிய குறடுகளைக் கொண்டு அவனது மார்பிலிருந்தும், புயத்திலிருந்தும், தொடையிலிருந்தும் தசைகள் பிய்த்து எடுக்கப்படவேண்டும். தசைகள் கிழிக்கப்பட்ட காயங்கள் மீது உருக்கிய ஈயமும், கொதிக்கும் எண்ணெய்யும் ஊற்றப்பட வேண்டும். மன்னனை கொலைசெய்யும் நோக்குடன் கத்தியேந்திய அவனது வலது கரத்தை கந்தக அமிலத்தால் எரிவூட்டிப் பொசுக்க வேண்டும். பின்னர், அவனது கைகளையும் கால்களையும் நாற்கோணமாக, நான்கு குதிரைகளில் கட்டியிழுத்து, நான்கு துண்டங்களாக அவனது உடலைப் பிய்த்தெறிய வேண்டும். ஈற்றில் துண்டாடப்பட்ட சதைப்பிண்டங்களை ஒன்று குவித்து அதனைத் தீ மூட்டி எரிக்க வேண்டும்.”

இந்தக் கோரமான சித்திரவதை எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற விபரத்தையும் அந்தக் கொடுமைக்கு ஆளான மனிதன் கூச்சலிட்டுக் குளறி அழுது துடி துடித்து இறந்த கோரத்தையும் அந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து விபரிக்கின்றார் பூக்கோ. உடல் வதையைத் தாங்கமுடியாது, “கடவுளே, என் மீது இரக்கம் காட்டும். யேசுவே என்னைக் காப்பாற்றும்” என அவன் வானதிரக் கத்தியபோது அங்கு நின்ற ஒரு வயோதிபக் குருவானவர் கூட அவனுக்கு ஆறுதல் கூறத் துணியவில்லை. இறுதியில் நான்கு கோணத்திலுமாக நான்கு குதிரைகள் நிறுத்தப்பட்டு, அவன் கைகளிலும் கால்களிலும் கயிற்றினால் கட்டி இழுக்கப்பட்டபோது அவனது கைகால்கள் கிழிபடவில்லை. நீண்ட நேரமாக பல தடவைகள் குதிரைகளைக் கொண்டு முயன்றும் முடியவில்லை. இறுதியில் அவனது கை கால்களைக் கத்தியால் வெட்டித் துண்டித்து, துண்டாடப்பட்ட சதைப் பிண்டங்கள் மீது விறகுகள் குவித்து தீ மூட்டி எரிக்கப்பட்டதாம். இந்தப் பகிரங்க மரண தண்டனையை நிறைவு செய்ய பல மணிநேரம் சென்றதாம்.

உடல் உபாதையின் உச்சமாக இந்த மரண தண்டனை அமைந்தது. குற்றத்தை மிஞ்சியதாக டேமியனுக்கு இக்கொடூர தண்டனை வழங்கப்பட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அக்காலத்தில், பழைய ஐரோப்பிய ஆட்சியமைப்பில், தண்டனையானது மனுநீதியின் அளவுகோலால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு அரசியல் யுக்தியாக, அரச ஆட்சியின் அதிகாரத்தை குறியீடு செய்வதாக அமைந்தது என்கிறார் பூக்கோ. அன்றைய கருத்துலகமும் அரச ஆட்சியை அலாதியான முறையில் நியாயப்படுத்தி நின்றது. அரசன் என்பவன் ஆண்டவனின் பிரதிநிதி என்றும், அவனது ஆளும் அதிகாரம் அவனுக்கு அருளப்பட்ட தெய்வீக உரிமை என்றும், முடியாட்சி என்பது பூமியில் நிகழும் இறையாட்சி என்றும் கருத்துகள் விதையூன்றிய காலமது. எனவே, அரசனை எதிர்ப்பது மகாபாதகமான குற்றம். அது ஆண்டவனை எதிர்ப்பதற்கு நிகர். தெய்வீகத் திருவருளால் நிகழும் முடியாட்சியை மறுப்பதற்கு நேர். இது மரண தண்டனைக்குரிய குற்றம். இம் மரண தண்டனை குடிமக்களுக்கு குலைநடுக்கத்தைக் கொடுப்பதாக அமைய வேண்டும். கடும் எச்சரிக்கையாக அமைய வேண்டும். அத்தோடு, அரச அதிகாரத்தை, மேலாதிக்கத்தை குறியீடு செய்வதாக இருக்க வேண்டும். இதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. ஒன்று மிகக் கொடூரமான உடல் வதையாகத் தண்டனை நிறைவேற்றுவது, மற்றது தண்டனையைப் பகிரங்கமான முறையில் வெகுசனக் கண்காட்சியாக நிகழ்த்துவது. இந்த வகையில் பகிரங்க மரண தண்டனை என்பது ஒரு சூசகமான அரசியல் நாடகம் என்கிறார் பூக்கோ. ஒரு குறியீட்டு அரசியல் நாடகம். இதன் கதாநாயகன் மரணத்தை சுமந்து நிற்கும் குற்றவாளியல்ல. வெகுசனமே இந்த நாடகத்தின் பிரதான பாத்திரம். இங்கு பொதுமக்கள் சாட்சிகளாக மட்டும் நிற்கவில்லை. அவர்களும் இப்பகிரங்க நாடகத்தில் பங்குகொள்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசப்பட்டு, குரலெழுப்பி மக்களும் இந் நாடகத்தில் பாத்திரம் ஏற்கிறார்கள் என்பது பூக்கோவின் வாதம்.

இந்தத் ‘தூக்கு மேடை நாடகங்கள்’, சில சமயங்களில், விபரீதமான திருப்பங்களையும் எடுப்பதுண்டு. அவை, மக்களின் நீண்டகால அரசியல் தூக்கத்தைக் கலைத்து அவர்களைக் கிளர்ச்சிக்கு தூண்டி விடுவதுண்டு. பிரஞ்சுப் புரட்சிக்கு அண்மிய காலத்தில் இவ்வித பூகம்ப நிகழ்வுகள் இடம்பெற்றதாக கூறுகிறார் பூக்கோ.

மரண மேடையைச் சூழ மக்கள் கூட்டம் திரள்கிறது. மரணிக்கப்போகும் ஒரு மனிதனின் மரண அவலத்தைக் கண்டுகளிக்க மக்கள் இங்கு கூடவில்லை. குற்றவாளியாக நிற்பவன் ஒரு புரட்சிவாதி. முடியாட்சியோடு முண்டிய கிளர்ச்சிக்காரன். அடக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுத்த ஒரு பொதுமகன். சருகாக நசுக்கப்பட்ட வெகுசனத்தில் ஒருவன். சத்தியத்திற்காக அவன் சாவைச் சந்திக்க மேடையேறுகிறான். சாவு நிச்சயம் என்பதால், அதிகாரத்தை எதிர்க்கும் அபாரத் துணிவு அவனுக்கு ஏற்படுகிறது. மரண மேடையில் நின்று மக்களுக்கு குரல் கொடுக்கிறான். அரசுக்கு எதிரான தனது ஆத்திரத்தைக் கொட்டுகிறான். உண்மையைச் சொல்கிறான். சாவின் விளிம்பில் தொங்கி நிற்கும் அந்த ஒரு கணத்தில் மக்களின் ஆன்மாவை அவன் ஆழமாகத் தொட்டு விடுகிறான். மன்னனின் விரோதியாக மரணத்தை தழுவும் அவன் மக்களின் தியாகியாக மாறிவிடுகிறான். அவனது சாவுடன் தூக்குமேடை புரட்சியின் மையமாக மாறுகிறது. அரசனின் அதிகார வன்முறைக்கு எதிராக மக்களின் கிளர்ச்சிகர வன்முறை வெடிக்கிறது.

பிரஞ்சுப் புரட்சிக்குப் பிந்திய காலத்தில், மக்களாட்சி யுகத்தில், தண்டனை வடிவத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கியது என்கிறார் பூக்கோ. கொடூரமான சித்திரவதைகளும் பகிரங்க மரண தண்டனைகளும் நிறுத்தப்பட்டன. இரக்க சிந்தையால், காருணியத்தால், மனிதவதை அகல வேண்டும் என்ற மனித நேயத்தால் இம்மாற்றம் நிகழவில்லை. உடலை வதைக்காமல், உயிரைப் பறிக்காமல், மனிதர்களைத் தண்டிக்கும் புதிய வழிகளை அறிவுலகம் காட்டியது. உடலை வதைக்கும் அநாகரீக முறைக்குப் பதிலாக ‘ஆன்மாவைத்’ தண்டிக்கும் ‘நாகரீகமான’ முறைகள் நடைமுறைக்கு வந்தன. மனதை வனைந்து, மனிதனை சீர்திருத்தி, அவனைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி, சமூக ஒழுங்கமைப்பிற்கு ஒத்திசைவாக நெறிப்படுத்தும் புதிய உபாயங்கள் நடைமுறைக்கு வந்தன. அக்கால அரசர்களின் தண்டனை முறையைவிட இக்கால அரசியல்வாதிகளின் தண்டனை முறை அடிப்படையில் வித்தியாசமானது, நுட்பமானது என்கிறார் பூக்கோ.

“அதிகாரத்தின் இரும்புச் சங்கிலியால் இறுகப் பிணைத்து குடிமக்களை அடிமைகளாக நடத்தினான் அக்காலத்து மூட அரசன். ஆனால் இக்காலத்து அரசியல்வாதிகளோ, தமது அறிவுநுட்பத்தால் மக்களை அடிமை கொண்டு விடுகிறார்கள். கருத்துகளின் ஆதிக்கச் சங்கிலியால் அவர்கள் மக்களை விலங்கிட்டு வைத்திருக்கிறார்கள். அரசனின் அதிகாரப் பிணைப்பை விட அரசியல்வாதிகளின் ஆதிக்கப்பிடி இறுக்கமானது, வலுவானது. மக்களை விலங்கிட்டு வைத்திருக்கும் ஆதிக்கச் சங்கிலியின் மறுமுனை அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. இந்த ஆதிக்கப் பிடியின் சூட்சுமமான தன்மையை நாம் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது… இரும்புச் சங்கிலியின் இறுக்கமான பிடி காலத்தால் சிதையுண்டு போகலாம். ஆனால் கருத்து விலங்குகளின் அதிகாரப் பிணைப்பிலிருந்து மீளுவது கடினம்… மூளையத்தின் மென்மையான நூலிழைகள் மீதுதான் வல்லாதிக்கப் பேரரசுகளின் வன்மையான அடித் தளங்கள் கட்டப்படுகின்றன” என்று பிரஞ்சு குற்றவியல் அறிஞன் ஒருவன் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார் பூக்கோ.

அதிகாரத்தின் அழியாத கோடுகளை மனதின் ஆழத்தில் பொறித்துவிடுவது எப்படி? குற்றவாளிகள் எனப்படும் சமூக ஒழுங்கை மீறும் மனிதர்களை மனவிலங்கிட்டு கட்டுப்படுத்துவது எப்படி? குற்றத்திற்கு பழிவாங்கும் செயலாகத் தண்டனையை வழங்காமல் குற்றத்தைத் தடுக்கும் நோக்கில் தண்டனையைக் கையாளுவது எப்படி? இந்தக் கேள்விகளுடன் குற்றவாளிகளின் மனவுலகை மாற்றியமைப்பது பற்றி அறிவுலகங்கள் ஆராயத் தொடங்கின. இதன் பயனாக புதிய கோட்பாடுகள் பிறந்தன. புதிய தண்டனை உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறைகள் தோன்றின. சிறைவாழ்வில் கடுமையான ஒழுங்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில், ஐரோப்பிய உலகில் தண்டனையின் வடிவம் மாறியது என்கிறார் பூக்கோ.

ஒழுங்குமுறைதான் (Discipline) இப்புதிய தண்டனை வடிவத்தின் மையக் கோட்பாடு. ஒழுங்கு என்பது கட்டுப்பாடான நடத்தை. அதாவது, அதிகாரம் விதித்த விதிகளுக்குப் பணிந்து நடப்பது. அதிகாரம் வரித்த நியதிகளுக்கு ஒட்டி ஒழுகுவது. மனித மனதை ஒருநிலைப்படுத்தி, கட்டுப்படுத்தி, சமூக ஒழுங்கமைப்பிற்கு ஒத்திசைவாக நெறிப்படுத்துவதற்கு ஒழுங்கு இன்றியமையாதது. சமூக ஒழுங்கை மீறி, ஒழுங்கீனமாக நடக்கும் அசாதாரண மனிதர்களை, ஒழுக்கமான, ‘சாதாரண’ மனிதர்களாக மாற்றியமைப்பதற்கு இது சாலச் சிறந்த வழி. மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் கையாளப்படும் நவீன உத்தி. இந்த ஒழுங்கு முறைதான் சிறைநிர்வாக உலகின் புதிய தண்டனை வடிவமாக உருவாக்கம் பெற்றிருக்கிறது என்கிறார் பூக்கோ.

பாரிஸ் நகரச் சிறையொன்றில் ஒழுங்கு எவ்வாறு பேணப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்ட கீழ்க்கண்ட உதாரணத்தைத் தருகிறார் பூக்கோ.

மாரி காலத்தில், சிறைக் கைதிகள் காலை ஆறு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். கோடை காலத்தில், காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். கைதிகள் தினமும் ஒன்பது மணிநேரம் வரை வருடம் பூராகவும் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு தினமும் இரண்டு மணிநேரம் அறிவுரை வகுப்புகள் நடத்தப்படும்.

காலையில் முதலாவது தடவையாக முரசு முழங்க கைதிகள் தூக்கத்திலிருந்து எழுந்து மௌனமாக ஆடைகளை அணியவேண்டும். அப்பொழுது சிறைக்காவலர்கள் சிறைக்கூட அறைகளை திறந்துவிடுவர். இரண்டாவது தடவையாக முரசு முழங்கும் பொழுது கைதிகள் ஆடைகளை அணிந்து கொண்டு தமது படுக்கைகளை சீர் செய்து முடிக்க வேண்டும். மூன்றாவது தடவையாக முரசு முழங்கும் பொழுது அவர்கள் வரிசையாக அணிவகுத்து காலை வணக்கத்திற்காக கோவிலுக்குச் செல்ல வேண்டும். ஐந்து நிமிடங்கள் இடைவெளியுடையதாக இம் முரசொலி முழங்கும்.

இப்படியாகக் காலையில் எழுவது தொடங்கி இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, கைதிகளின் சாப்பாட்டு நேரம், வேலை நேரம், வகுப்பு நேரம், வணக்க நேரம் எனக் காலம் ஒடுக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணுவதற்குப் பொதுவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்கிறார் பூக்கோ. இதில் முக்கியமானது கால அட்டவணை. அது நேரத்தை வகுத்து, காலத்தை சீரொழுங்கு செய்து மனித செயற்பாடுகளை காலவரிசையில் நெறிப்படுத்த உதவுகிறது. வீண் காலம் கழிப்பதைத் தவிர்க்கவும், கட்டுப்பாடான நடத்தையை வளர்க்கவும் துணைபுரிகிறது. அடுத்தது உடற்பயிற்சி. தினமும் ஒழுங்காக, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உடலுக்குப் பயிற்சி கொடுப்பது உடல் நலனைப் பேணுவது மட்டுமன்றி, உடல் வாயிலாக மனதைப் பயிற்றுவிக்கவும் உதவுகிறது. அடுத்ததாக கூட்டுச் செயற்பாடு. மற்றவர்களுடன் ஒன்றிணைந்து, ஒழுங்காக கூட்டாக செயற்படுவது கட்டுப்பாடான சமூக நடத்தைக்கு தனிமனிதர்களைப் பயிற்றுவிப்பதாக அமையும். அதிகாரத்திற்குப் பணிந்து, கூட்டாக ஒழுகும் ஒழுங்குமுறைக்கு இது இன்றியமையாதது.

சிறைகளில் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு கண்காணிப்பு முக்கியமானது. இது ஒழுங்கு முறையின் மறுமுகம் என்கிறார் பூக்கோ. இங்கு கண்காணிப்பு என்பது மற்றவர்களுக்குத் தெரியாதவாறு மற்றவர்களை அவதானிக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எப்படி நடந்து கொள்கிறான், மற்றவர்களுடன் எப்படி உறவு கொள்கிறான் என்பதைக் கூர்மையாக அவதானித்து ஒவ்வொருவனது போக்கையும், நடத்தையையும், ஆளுமையையும் மதிப்பீடு செய்ய இந்த மேற்பார்வை அவசியமானது. ஒழுங்கு விதிகள் பேணப்படுகிறதா அன்றி மீறப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு சிறை நிர்வாகத்தினருக்கு இது தேவையானது. இந்த நோக்கில் சிறைக் கட்டிட அமைப்புகளும் உருவாகின. ஒரே இடத்திலிருந்து சகலரையும் கண்காணிக்கும் நோக்கத்துடன் வட்ட கோண வடிவான (Panopticon) சிறைக் கூடங்கள் அக்காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் பூக்கோ. கைதிகளின் வசதிக்காக இக் கட்டிடங்கள் எழுப்பப்படவில்லை. இவை அதிகார நுண்நோக்கின் குறியீட்டு வடிவங்கள் என்கிறார் பூக்கோ.

இந்த ஒழுங்கு விதிகள், கட்டுப்பாடுகள், கால அட்டவணைகள், கண்காணிப்புகள் எல்லாம் சிறையுலகத்து சடங்குகள் மட்டுமல்ல. இவை அதிகார உலகத்தின் அரூப கரங்கள் என்பதால் அவை பல்வேறு சமூக நிறுவனங்களிலும் ஊடுருவி நிற்கின்றன. கால நிரல் தொடங்கி கண்காணிப்பு வரை கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், படைத்துறை முகாம்களாகப் பல்வேறு பொது நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தன்மைகள், இயல்புகள் வேறுபட்டாலும், எங்கும் எல்லா இடங்களிலும் அதிகாரத்தின் அகற்சியாக ஒழுங்கும், கட்டுப்பாடும் சமூக உலகத்தை ஆட்கொண்டு நிற்கின்றன என்கிறார் பூக்கோ.

அதிகார மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு சமூக ஒழுங்கு அவசியமானது. இதனால் இன்று உலகின் எல்லா ஆட்சியமைப்புகளும் சமூக ஒழுங்கிற்கு முதன்மை கொடுக்கின்றன. ஆயினும், ‘ஒழுங்கமைவான சமூகம்’ என்ற கருத்துருவம் மேற்கு ஐரோப்பிய முதலாளியத்துடன் தோற்றம் கொண்டதாகச் சொல்கிறார் பூக்கோ. பிரபுத்துவ ஆட்சிமுறையானது அப்பட்டமான வன்முறையைப் பிரயோகித்து சமூக ஒழுங்கை நிறுவ முனைந்தது. ஆனால் முடியவில்லை. பிரபுத்துவத்தின் வன்முறையை, மக்கள் வன்முறையால் எதிர்கொண்டனர். இதனால் சமூக ஒழுங்கு சிதைந்தது. பிரபுத்துவம் வீழ்ந்தது.

ஆனால் முதலாளியம், மிகவும் சூட்சுமமான முறையில், மிகவும் நுணுக்கமான ஆதிக்க உத்திகளைப் பிரயோகித்து சமூக ஒழுங்கை நிலைநாட்டியது. கால அட்டவணை, கட்டுப்பாடு, கண்காணிப்பு என்ற ரீதியில், இறுக்கமான ஒழுங்குமுறையை தொழிற்சாலைகளில் செயற்படுத்தியது. உற்பத்தி முறையை மட்டுமன்றி, சமூக உலகையும் படிப்படியாக இயந்திர மயமாக்கியது. சனநாயகம், மக்களாட்சி, பிரதிநிதித்துவ அரசு என்ற கருத்துருவத் திரையின் பின்னால், முதலாளியத்தின் ‘அடக்குமுறைத் தொழில்நுட்பம்’ சூசகமாக செயற்படுகிறது. ஒரு சீரான, ஒழுங்கமைவான, கட்டுப்பாடான சமூகமும், ஒரு நிலையாகப் பலமான ஆட்சியும், முதலாளியத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் இன்றியமையாதவை.

‘ஒழுங்கும் தண்டனையும்’ என்ற பூக்கோவினது நூலின் கடைசிப் பக்கங்கள், குற்றமும் சிறையும் பற்றிய கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்க முனைகிறது.

மனிதர்களது சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்து வைத்து, அவர்களது நடத்தை மீது ஒழுங்கை விதித்து, கட்டுப்பாடுகளைத் திணித்து, அவர்களைக் கண்காணிக்கும் தண்டனை முறையால் குற்றங்கள் ஒழியவில்லை. குற்றவாளிகளும் குறையவில்லை. மாறாக, குற்றங்கள் பெருகி வருகின்றன. குற்றவாளிகளும் பெருகி வருகிறார்கள். சிறைகளும் பெருகி வருகின்றன. சிறை முறையை சீர்திருத்தம் செய்வது பற்றி காலம் காலமாக விவாதங்கள் நடக்கின்றன. விசாரணைகள் நடக்கின்றன. விஞ்ஞான ஆய்வுகளும் நடக்கின்றன. ஆனால் சிறைமுறையை ஒழித்துக் கட்டுவது பற்றி யாருமே சிந்திப்பதில்லை. அன்றுதொட்டு இன்று வரை சிறைகள் இருக்கவே செய்கின்றன. கட்டிட அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் மாற்றம் கண்டபோதும், மனிதர்களை சிறை வைக்கும் கோட்பாட்டில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. அறிவியல் நிபுணர்களும், ‘ஆன்ம வைத்தியர்களான’ மன இயல் நிபுணர்களும் குற்றவியல் துறைக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறார்கள். குற்றவாளிகளின் மனக்குகை மர்மங்களை துலக்கியிருக்கிறார்கள். சமூகப் பின்புலத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த வெளிச்சத்தால் குற்றங்கள் பல வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளும் பல ரகத்தினராக வகுக்கப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய அறிவு வளர்ந்திருக்கிறது. ஆனால் குற்றங்களை ஒடுக்கும் மார்க்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றமானது ஒரு சமூக நோய் எனக் கூறப்படுகிறது. இது ஒரு வர்க்கத்தைச் சார்ந்த நோய் எனவும் சொல்லப்படுகிறது. சமூகத்தின் அடிமட்டத்திலிருந்தே இந் நோய் மேற்கிளம்புவதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேற்தட்டு வர்க்கத்தினரின் சதி முயற்சியாகவும் குற்றத்திற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது அதிகார வர்க்கத்தின் பயத்திலிருந்து பிறக்கும் விசித்திரமான கண்டுபிடிப்பு. அதிகார வர்க்கத்தின் இந்தப் பயம்தான் சிறை என்ற நிறுவனத்தைக் கட்டிக் காத்து வருகிறது என்கிறார் பூக்கோ.

‘பைத்தியமும் நாகரீகமும்’ (Madness and Civilisation) என்ற தலைப்பில் பூக்கோ எழுதிய ஆய்வு நூல் மிகவும் சுவாரஸ்யமானது. மன மருத்துவத்தின் வரலாற்று வளர்ச்சியை இந்நூல் அகழாய்வு செய்கிறது.

அன்றொரு காலத்தில் ஐரோப்பிய நாகரீகம் பைத்திய மனிதனை ஒரு மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. அவனை ஒரு விபரீதமான விலங்காகவே கண்டது. நாகரீக மனிதர்களுக்கு, அதாவது பகுத்தறிவு பிறழாத மனிதர்களுக்கு அவன் ஒரு அச்சுறுத்தலாகவே காணப்பட்டான். பைத்தியம் ஒரு மனோ வியாதியாக முற்காலத்தில் கருதப்படவில்லை. அதனைக் குணப்படுத்த மருத்துவ முறைகளும் இருக்கவில்லை. பைத்தியக்காரன் நோயின் உபாதையால் புலம்பும் போது, ஆவேசமடைந்து கதறும்போது, குழப்பத்தில் பிதற்றும் போது, பித்தலாட்டம் ஆடும்போது அவனது நடத்தையை விபரீதமான விலங்காடித்தனமாகவே அன்றைய சமூகம் கருதியது. மனிதமற்ற மனிதப் பண்புகள் செத்துப் போன ஒரு ஆபத்தான பிராணியாகவே மற்றவர்கள் அவனைக் கண்டனர். ஐரோப்பிய ஆளும் வர்க்கம் பைத்தியக்காரனைக் கண்டு பயந்தது. அவனை நாகரீக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க விரும்பியது. அதனால் அவன் மிருகம் போல வேட்டையாடிப் பிடிக்கப்பட்டான். பைத்திய இல்லங்களில் அடைத்து வைக்கப்பட்டான். இருண்ட பாதாள அறைகளில், சங்கிலியால் விலங்கிடப்பட்டு தனிமையில் ஒதுக்கப்பட்டான். அவன் ஒரு மிருகமாகக் கருதப்பட்டதால் உடையோ, உணவோ, உறங்கும் வசதிகளோ அவனுக்கு வழங்கப்படவில்லை. நிர்வாணமாக, பசியின் உபாதையுடன், குளிரில் நடுங்கியபடி, சுவரோடு கட்டுண்டு கிடந்து மௌனமாகக் கண்ணீர் வடித்த அந்த அப்பாவி மனிதனின் ஆழமான துன்பத்தை அன்றைய நாகரீக மனிதர்கள் கண்டுகொள்ளவில்லை. பைத்திய மனிதன் ஒரு சபிக்கப்பட்ட மனிதனாகவே கருதப்பட்டான்.

இன்றைய நாகரீக உலகம், பைத்தியத்தை ஒரு மன நோயாகக் கண்டுபிடித்த போதும், பண்டைய அணுகுமுறையிலேயே இந் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகிறார் பூக்கோ. அன்றுபோலவே இன்றும் பைத்திய நோயால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் மனநோயாளர் காப்புமனைகளில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அன்றைய சமூகம் பைத்தியக்காரனை ஒரு மிருகமாகவும் அவனது நடத்தையை மிருகத்தனமாகவும் கருதியது. இன்றைய மருத்துவமும் நோயின் மூலத்தை மனித இயல்பின் பிறழ்ச்சியால் ஏற்படும் மனக் கோளாறாக கருதி வருவதாகக் கூறுகிறார் பூக்கோ.

அதிகாரத்தின் அரூப கரங்கள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments