×

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1992

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.
நவம்பர் 27, 1992.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

எமது விடுதலைப் போராட்டத்தை ஒப்பற்ற வீரகாவியமாக உலக வரலாற்றில் பொறித்துச் சென்ற உன்னதமானவர்களை நாம் நினைவில் நிறுத்திப் பூசிக்கும் புனித நாள்.

மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.

மனித வாழ்வில் சுதந்திரம் உன்னதமானது. மனித நற்பண்புகளில் தலைசிறந்தது. மனித வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஆதாரமானது. சுதந்திரம்- தான் மனித வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது. முழுமையைக் கொடுக்கிறது.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
நாகரீகம் தோன்றிய காலந்தொட்டு, யுகம் யுகமாக மனித குலம் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறது. அடிமைத்தளைகளிலிருந்து, அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற விழைந்து வருகிறது. காலம் காலமாக இந்தப் பூமியில் நிகழ்ந்த போராட்டங்கள், புரட்சிகள், யுத்தங்கள் எல்லாம் மனித விடுதலை எழுச்சியின் வெளிப்பாடுகளன்றி வேறொன்றுமல்ல.

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்றுதொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது தர்மம் செத்துவிடுகிறது. உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்த மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது. மோதல்கள் வெடிக்கிறது. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதி. ஏனெனில் சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது.

ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம்வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல் இன்று உலகரங்கத்தில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்திரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட சாராம்சத்தில் வித்தியாசமானது; தனக்கே உரித்தான தனித்துவத்தைக் கொண்டது; ஒப்பற்றசிறப்பம்சங்களைக் கொண்டது.

உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது. சாவுக்கு அஞ்சாத அவர்களது துணிவும் உறுதிப்பாடுமே எமது போராட்டத்தின் பலமும் வளமுமாகும். எமது எதிரிக்கு உலகம் ஆயுதத்தையும் பணத்தையும் வாரி வழங்குகிறது. நாம் உலகத்திடம் கைநீட்டி நிற்கவில்லை. எவரிடமும் தங்கி நிற்கவில்லை. நாம் எமது சொந்த மண்ணில், எமது சொந்த மக்களில், எமது சொந்தக் கால்களில் தங்கி நிற்கிறோம். எமது சொந்தக் கைகளால் போராடுகிறோம். இதுவே எமது தனித்துவத்தின் தனிச் சிறப்பாகும். எமது சொந்தப் பலத்தில், நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால் மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்துகொடாமல் எம்மால் தலைநிமிர்ந்து நிற்கமுடிகிறது.

புதிய சவால்களும், புதிய நெருக்கடிகளும் நிறைந்ததாக இன்று எமது தேசிய விடுதலைப் போராட்டம் மிகவும் சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.

சமாதானத்தின் கதவுகளை இறுக மூடிவிட்டு போரை விரிவாக்கம் செய்வதில் எதிரி தீவிர அக்கறை காட்டி வருகிறான். தமிழரின் தேசிய பிரச்சனைக்கு எந்த உருப்படியான தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்க அரசு தயாராக இல்லை.

இவ்வாண்டு என்றுமில்லாத வகையில் யுத்தம் முனைப்புற்று உக்கிரமடைந்தது. எதிரியின் படையெடுப்புத் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நாம் புதிய போர்த் தந்திரோபாயங்களை வகுத்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினோம். இதனால் என்றுமில்லாதவாறு எதிரி களத்தில் இரத்தம் சிந்தினான். வரலாற்றில் நிகழாத பாரிய இழப்புக்களைச் சந்தித்தான். ஆக்கிரமிப்பாளர்களின் சுவடுகளை இந்த மண் ஒருபொழுதும்
சுமந்துகொள்ளாது என்பதை எதிரிக்கு நாம் நன்கு உணர்த்திக் காட்டினோம்.

போர்முனையில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும், போரின் விளைவால் பொருளாதாரம் சீர்குலைந்தபோதும், போரில் புலிகளை வெற்றி- கொள்ள முடியாது என உணர்ந்துகொண்டபோதும் போர் அணுகுமுறையைக் கைவிட சிங்கள அரசு தயாராக இல்லை. ஆயுதப் படைகளைப் பலப்படுத்தி, ஆக்கிரமிப்பு யுத்தத்தை தீவிரப்படுத்தி, இராணுவத் தீர்வை முன்னெடுப்பதிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இதிலிருந்து நாம் ஒன்றைத் தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஆயுத பலத்தால் தமிழினத்தை அடக்கி ஆளவேண்டுமென்ற சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக்கிடக்கும்வரை தமிழரின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு நீதியான, நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும்வர்க்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்தக் கசப்பான உண்மையை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நீண்டதாக, மிகவும் கடினமானதாக, நெருக்கடிகளும் சோதனைகளும் நிறைந்ததாக, எமது விடுதலைப் பயணம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. காந்தீய மென்வழிப் போராட்டத்திலிருந்து ஆயுத எதிர்ப்பு இயக்கம்வரை, இத்தனை காலமாக எத்தனையோ வழிகளில், நீதி கேட்டு நியாயம் கோரி நாம் எழுப்பிய உரிமைக்குரல் சிங்கள தேசத்தின் மனச்சாட்சியைத் தொட்டதாகத் தெரியவில்லை.

காலம் காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள், சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள், சோகத்தின் சுமையால் அவர்கள் சிந்திய இரத்தக் கண்ணீர் – இவை எல்லாம் பௌத்த தேசத்தின் காரூண்ணியத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.

எதிரி ஈவிரக்கமற்றவன். போர்வெறி கொண்டவன். எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன். அவனது இதயக் கதவுகள் திறந்து எமக்கு நீதி கிடைக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்வது?

நாம் தொடர்ந்து போராடுவதைத் தவிர, தொடர்ந்து எமது போராட்டத்தைத் தீவிரமாக்குவதைத் தவிர எமக்கு வேறு வழி இல்லை.

நாம் வன்முறைமீது மோகங்கொண்ட போர் வெறியர்கள் அல்லர். நாம் உண்மையில், ஆன்மரீதியாக, சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான, நிம்மதியான, கௌரவமான சமாதானத்தையே விரும்புகிறோம். அதனால்தான் இந்தக் கொடூரமான போரின் மத்தியிலும் சமாதானத்தின் கதவுகளை நாம் திறந்து வைத்திருக்கிறோம். சமாதானத்தின் பாதையை நாம் மூடிவிடவில்லை. அப்படி மூடிவிடும் நோக்கமும் எமக்கில்லை. ஏனென்றால் சமாதானத்தை அடைவதற்காகவே நாம் போராடுகிறோம். என்றோ ஒருநாள் எதிரியானவன் எமது சமாதானக் கதவுகளைத் தட்டுவானாக இருந்தால் நாம் எமது நேசக் கரங்களை நீட்டத்தயாராக இருக்கிறோம்.

ஆனால் எமது எதிரியோ வன்முறைமீது காதல் கொண்டவன். அதனால் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அநியாயமான யுத்தத்தை எம்மீது திணித்து வருகிறான். இன்று எதிரியின் படையணிகள் எமது வாசல்வரை வந்து போர்முரசு கொட்டுகின்றன. எம்மை அழித்துவிடுவதற்கும் எமது மண்ணை விழுங்கிவிடுவதற்கும் கங்கணம்கட்டி நிற்கின்றன. இந்த இன அழிப்பு யுத்தத்திற்காக எந்த அளவிற்கும் இரத்தம் சிந்த எதிரி தயாராக இருக்கிறான்.

இந்த இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில் நாம் என்ன செய்வது? போராடி எமது மக்களையும், எமது மண்ணையும் பாதுகாத்துக்கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழி ஏதும் உண்டா?

போராடித்தான் நாம் எமது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்பது பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளும் ஒரு வியாபாரப் பண்டம் அல்ல. அது இரத்தம் சிந்தி வென்றுகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனை இடர் வரினும், எத்தனை துயர் வரினும், நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடருவோம். எமது மக்கள் சிந்திய இரத்தமும் எமது மாவீரர் புரிந்த தியாகமும் வீண் போகாது இருக்க நாம் உறுதி தளராது போராடுவோம். எமது இலட்சியப் பயணத்தில் எத்தனையோ சவால்களை, எத்தனையோ ஆபத்துக்களை, எத்தனையோ நெருக்கடிகளை நாம் சந்தித்துவிட்டோம். இனி எம்மை எதுவும், எவரும் அச்சுறுத்தமுடியாது. நாம் துணிந்து போராடுவோம். வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது. சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கிறது.

எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே!

உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகிறது.

உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகிறது.

உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது.

உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது.

எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை நாம் சிரந்தாழ்த்தி வணங்குகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments