தமிழீழத்தின் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமைக்கான அரசியல் போராட்டம் நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்கள் கொண்டு நகர்கின்றது. சிங்கள அரச ஒடுக்குமுறைகளின் கொடுமைகளை தமிழீழ மக்கள் இன்றுவரை நேர்கொண்டு வருகின்றோம். தமிழீழத்தின் உண்மையான வரலாறும், தமிழின் தொன்மை, தமிழர் கலாச்சார விழுமியங்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் விதியாக தோன்றிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்ட வரலாறும், இவ் உலகத்தில் சரியாகப் பதியப்படவேண்டும்.
இவ்வகையில் சுவிற்சர்லாந்தில் கல்வி ஒப்படைப்பாக எமது போராட்டத்தை எடுத்துக்கொண்டு கல்விரீதியாக எமது வரலாற்றை பதிவுசெய்த மாணவர்கள் பலரை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் உப அமைப்பாகிய சுவிஸ் தமிழர் அரசியல் துறையினர் இணங்கண்டு அவர்களின் ஆக்கங்கள் பகுப்பாய்வு செய்து அவற்றில் சிறப்பான கல்வி ஒப்படைப்பிற்காக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் வளந்தோர் தொழில்முறை கல்வியில் எமது இனத்தின் வலிசுமந்த வரலாற்றை ஒப்படைப்பாக மேற்கொண்ட ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டார்.
தெரிவுசெய்யப்பட்ட மூவருக்குமான மதிப்பளிப்பானது தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 நவம்பர் 27 அன்று தமிழீழ விடியலுக்காய் வித்தாகிப்போன மாவீரர்கள், அவர்களது பெற்றோர், மக்கள் முன்நிலையில் சுவிஸ் நாட்டில் மதிப்பளிக்கப்பட்டனர்.