கீழடி கிராமம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.
அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
“சங்க இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகள் இங்கே கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க முடியும்” என்கிறார் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் இயக்குநரான ஆர். பாலகிருஷ்ணன்.
மேலும், கீழடியில் வழிபாட்டுக்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், இதற்கு பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும் வணங்கவில்லை என்பதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மாதிரி வணங்குவதும் சமயச் செயல்பாடுகளும் அவர்கள் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கவில்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. “சங்க இலக்கியத்தில் நிறைய பெண் தெய்வங்கள் உண்டு. ஆனால், கீழடியில் வாழ்ந்த பழங்கால மக்கள் அவற்றைச் சுற்றி வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வரலாம்” என்கிறார் பாலகிருஷ்ணன்.
முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்
Keeladi Book English 18 09 2019
Keeladi Book Tamil 18 09 2019
Keezhadi 1