மட்டக்களப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக பதின்மூன்று மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துள்ளது. இந்து மதத்தவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயம் அமைந்த இக்கிராமம் வளங்கள் நிறைந்ததும், மக்கள் செறிந்து வாழும் ஓர் இடமாகவும் உள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயம் ஆகும். இக்கிராமத்தினை 1990.07.20 அன்று இராணுவத்தினர் முற்றுகையிட்டு, மக்கள் அனைவரையும் முருகன் ஆலயத்தினுள் அழைத்துச் சென்றனர். அவர்களில் எண்பது பொதுமக்களின் கண்கள், கைகள் என்பனவற்றைக் கட்டி எல்லைக் கிராமத்திற்கு கூட்டிச் சென்று படுகொலை செய்தனர்.
அதே மாதம் மீண்டும் இருபத்தேழாம் திகதி இப்பகுதியில் ஐமப் த்தேழு இளைஞர்களை சுற்றிவளைத்துக் கைதுசெய்து கண்களைக் கட்டி எல்லைப்புறக் கிராமத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் குழிகளிற் போட்டு எரித்தனர். 28.01.1987 அன்று இராணுவத்தினரால் கொக்கட்டிச்சோலையில் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றே 1990.07.20, 1990.07.27ஆம் திகதிகளில் சித்தாண்டியூரிலும் மேற்கொள்ளப்பட்டது.
இரு தினங்கள் இராணுவத்தினரின் தாக்குதலில் சித்தாண்டியில் மட்டும் நூற்றுமுப்பத்தேழு மக்கள் உயிரிழந்தார்கள். தொடர்ந்தும் பல மாதங்களாக இராணுவத்தினர் சித்தாண்டிப் பிரதேசத்தினைச் சுற்றிவளைப்பதும், கைதுசெய்து மக்களைப் படுகொலை செய்வது தொடர்ந்தது.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.