
ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பலநாட்டு அரச தலைவர்களும் வருகைதந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சாவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் பல நாடுகளிலும் இருந்து ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.
ஊடக அறிக்கை 01-11-2021 திங்கட்கிழமை
தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட்
நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த்து இன்று 01-11-2021 திங்கட்கிழமை தாய் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் இயங்கும் அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அணிதிரண்டு பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி இருந்தார்கள். இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக மாறிய காலத்திலிருந்து சிறிலங்கா பேரினவாத அரசு தமிழர் தாயகம் மீது இனவழிப்பை நடாத்தி வருகின்றது.
2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் போது லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்பிற்கு அன்று மூல காரணமாய் இருந்தவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இதே கோட்டபாயவாகும். எமது தாயகப் பகுதியில் போர் உச்சம் பெற்ற வேளையில் ஐ.நா மன்றமும் சர்வதேசமும் போரை நிறுத்தி தமிழ் மக்களை காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பிலிருந்து தவறியதன் காரணமாகவே மிகப் பெரும் தமிழ் இனவழிப்பை சிறிலங்கா பேரினவாத அரசு அரங்கேற்றியது.
தமிழீழ மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கான நீதி வேண்டி தமிழர் தாயகத்திலும் உலகெங்கிலும் தொடர் அமைதிவழிப் போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தி வருகின்றபோது, Scotland Glasgow வில் நடைபெறும் Cop 26 சுற்றுச் சூழல் மாகா நாட்டிற்கு தமிழீழ மக்களை கொன்றுகுவித்த போர்வெறியன் கோத்தபாய அழைக்கப்பட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மாண்பு மிகு பேராளர்கள் கலந்கொண்டு மானிடத்தினதும் அனைத்து உயிர்களுக்குமான புவி வாழ்வின் இருப்பிற்கான சுற்றுச் சூழல் மகாநாட்டில் மனிதம் அழித்த கொடுங்கோலன் இணைந்திருப்பதை இனம் காட்டும் அரசியல் சனனாயக எதிர்ப்பின் வெளிப்பாடே உலகத் தமிழ் மக்களின் ஆதரவோடு இன்று நடைபெற்ற அறவழி எதிர்ப்புப் போராட்டமாகும். அனைத்துத் தேசிய இனங்களுக்குமான சமத்துவமான மாண்பையும் மனித உரிமைகளையும் தாங்கி நிற்கும் ஐ.நா மன்றமும் இதில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளும் நீதியின் வழி நின்று தமிழ் இனவழிப்பாளர்களை கண்டிப்பது மட்டுமன்றி எமது உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு வேண்டுகின்றோம்.
அன்பிற்குரிய எமது மக்களே அரசியற் செயற்பாட்டாளர்களே!
எமது தாயக விடுதலைக்காக எமது அழைப்பை ஏற்று இன்றைய போராட்டத்தில் உங்களது அன்றாட வாழ்வின் சுமைகளைத் தாங்கி, நீங்கள் அனைவரும் தேசியக் கடமையை உச்சமாக ஆற்றி இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்துள்ளீர்கள். எம்மோடு உணர்வால் ஒன்று பட்டு நின்று போராட்டத்திற்கு உரமூட்டிய உலகத் தமிழ் உறவுகளது கரங்களையும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து
தோழமையோடு பற்றிக் கொள்கின்றோம். மேலும் இப்போராட்டத்திற்கான பரப்புரைத் தளத்தை தாயகம் முதல் தமிழகம், கனடா, அவுஸ்ரெலியா, ஐரோப்பா வரை எடுத்துச் சென்று தமிழீழ வரலாற்றுக் கடமையை செவ்வனே செய்த ஊடக நிறுவனங்களுக்கும்
எமது நன்றிகள்.
எமது தேச விடுதலையை உலக நாடுகளும் அதன் மக்களும் அங்கீகரிக்கும் திசை வழியில் எம்மோடு தோழமையோடு இணைந்து எமக்காக குரல் கொடுத்துவரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,கட்சி சார் பிரமுகர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம். எமது தாயக தேசமீட்புப் போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான நீதிக்காகவும் தமிழீழ தாயக விடுதலைக்காகவும் நாம் தொடர்ந்து போராடுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்