ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கைக் கால் செய்வதென்பது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. பயனாளிகள் ஒவ்வொருவரதும் பாதிப்புக்குள்ளான கால்களை துல்லியமாக அளவெடுத்து, அதற்கான வடிவத்தை அச்சில் (plaster of paris) வார்த்தெடுத்து, பின்னர் அந்த அச்சின் வடிவத்தைக் கொண்டே செயற்கைக் கால் பைபர்கிளாஸில் (Fiber glass) செய்யப் படுகிறது.
அதனால்தான் மூன்று தகரக் கால்களை இரண்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிப்பது போல வேகமாக Fiber glass கால்களைச் செய்து முடிக்க முடியவில்லை. ஒரு தகரத்தாலான செயற்கைக் காலினைத் தயாரித்து, ஒரு பயனாளியை ஒரு கிழமை வெண்புறா நிறுவனத்தில் தங்க வைத்து, பயிற்சி கொடுத்து, உணவும் கொடுத்து அனுப்பி வைக்க வெண்புறா நிறுவனத்துக்கு ஏற்படும் செலவு ரூபா12000 (150 யூரோ) தான்.
ஆனால் தகரக்கால்கள் என்ற ஒரே காரணத்தால் 1994 முதல் 2001 மார்கழி வரை வெண்புறா நிறுவனத்தால் பொருத்தப்பட்ட 1197 பேரினது செயற்கைக் கால்களுக்கான திருத்த வேலைகள் மட்டும் 9893 தடவைகள் மீண்டும் மீண்டுமாய் செய்ய வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதே நேரம் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்களுக்கான செலவும் நேரமும் சற்று அதிகமாக இருந்தாலும் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால் பல முன்னேற்றமான நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதாவது ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்:
1. தகரத்தால் செய்யப்பட்ட கால்கள் போலத் துருப்பிடிக்காது.
2. அணிபவருக்கு இலகுவானது. (பாரம் குறைவு)
3. வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் செய்யப்படுவதால், காலுடன் பொருந்தக்கூடியது. எனவே செயற்கை உறுப்பை பொருத்துவதற்கு எந்தவிதமான பட்டிகளும் தேவையில்லை.
4. தகரத்தில் உருவாக்கப்படும் செயற்கைக்காலில் ஏற்படும் திருத்த வேலைகள் இந்த வகையில் உருவாகும் கால்களுக்கு மிகமிக அரிது.
5. கால்களின் அளவும் முழங்கால் சில்லின் அளவும் மிகத் துல்லியமாக அளந்து எடுக்கப்படுவதால், முதுகெலும்பு வளைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
6. பாதிப்புக்குள்ளான காலின் பகுதி மெலிந்து போவதற்கான காரணிகள் குறைகின்றன.
7. பாதிக்கப்பட்ட காலின் பகுதிக்கும் செயற்கை உறுப்புக்கும் இடையில் உள்ள இறப்பரினால் ஆன பகுதி காலில் ஏற்படும் வீணாண எரிச்சல் உபாதைகளைத் தடுக்கிறது.
8. காலினை இலகுவாக மடித்து நீட்டக்கூடியதாக இருக்கும்.
9. இலகுவாகக் கழற்றி வைக்கக்கூடியது.
இதுவரை காலமும் செய்யப் பட்ட தகரத்தாலான செயற்கைக் கால்களையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும், யேர்மனியில் செயற்கை உறுப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீடு செய்தே நவீன முறையிலான ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கை கால்கள் செய்வதில் உள்ள இந்த நன்மைகள் அறியப் பட்டன. அறியப்பட்டதுடன் மட்டும் நின்று விடாமல் அதைச் செயற்படுத்தும் திட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மனியக் கிளையினால் கிளிநொச்சியில் அமர்ந்திருக்கும் வெண்புறா நிறுவனத்தின் செயற்கை உறுப்புச் செய்யும் பட்டறைக்குள் வெற்றிகரமாக செயலாக்கம் பெறத் தொடங்கியது.
எடுத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமையானவர்கள் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் மின்சாரத்தினதும், நவீன தொழில் நுட்பத்துக்கான கருவிகளினதும், பற்றாக்குறைகள் வேலை நேரத்தை நீட்டிக் கொண்டிருந்தன.