இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்
10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான்.
தலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதிகட்ட வேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்: இதற்கு ஆழமான காரணங்கள் பலவற்றை அது வைத்திருந்தது.
திராவிட எழுச்சி’ என்ற சொற்பிரயோகத்தால் அழைக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்ற விடயம், காலாதி காலமாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் செத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தைப் பார்த்து அகமகிழ்ந்தபடியிருந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்கு; அது தமிழீழத்தில் தலைவர் பிரபாகரனின் தலைமையில் புது வடிவம் எடுத்து வீறுடன் வளர்ந்து வந்ததை இந்திய ஆளும்வர்க்கம் சரியாகவே இனங்கண்டு, அஞ்சத் தொடங்கியது.
எனவே, தலைவர் பிரபாகரனைத் தனது முக்கிய எதிரியாக இந்திய ஆளும்வர்க்கம் கருதத் தொடங்கியது.
தமிழீழத்தில் சகோதரச் சண்டை ஒன்றை உருவாக்கி, ஆழவேரூன்ற முயன்ற தமிழீழ தேசியத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொலை செய்ய, இந்திய ஆளும் வர்க்கம் சூழ்ச்சி செய்தது.
ஆனால் அந்தச் சாதியைப் புலிகள் முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டனர். அதன் பின் தமிழீழ தேசியத்தைத் தானே நேரடியாக அழிக்க, இந்திய ஆளும்வர்க்கம் முடிவெடுத்தது.
முதலில் அரசியல் வழிமுறைகள் மூலம் முயன்று பார்க்க விரும்பியது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற அரசியல் சதுரங்க விளையாட்டின் மூலம், நயவஞ்சகமாகத் தமிழீழத் தேசியத்திற்குக் குழிபறிக்க முயன்றது.
ஆனால், அந்த அரசியல் சதுரங்க அரங்கை புலிகள் இயக்கம் திறமையாகக் கையாண்டதுடன், இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மைச் சொரூபத்தையும் தமிழீழ மக்களுக்குத் தோலுரித்துக் காட்டத் தொடங்கியது. மெது மெதுவாக தமிழீழ மக்களும் இந்தியாவின் கபடத்தனத்தை உணரத் தொடங்கினர். இதை வளரவிட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. எனவே, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த அடுத்த கட்டமாகிய போருக்குச் செல்ல, அது முடிவெடுத்தது.
புலிகள் மீது நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யுமுன், வெளி உலகிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலிருந்த செய்தித் தொடர்பைத் துண்டிக்க விரும்பி ஈழமுரசு, முரசொலி பத்திரிகை நிறுவனங்களையும், நிதர்சனம் ஒளிபரப்புக் கோபுரத்தையும் குண்டு வைத்துக் தகர்த்து, போர் முரசு தொடங்கியது.
இந்தியப் படைகளின் பிரதான இராணுவ இலக்காக தலைவர் பிரபாகரனே இருந்தார். படை பலத்தைப் பயன்படுத்தி தலைவர் பிரபாகரனை அழித்து, புலிகள் இயக்கத்தின் பற்களையும் – நகங்களையும் பிடுங்கி எறிந்து விட்டுத் தமிழீழ தேசியத்தைத் தூக்கிலிடுவது என்று இந்தியா முடிவு செய்தது. ஆனால் இந்திய இராஜதந்திரிகள் கணித்த கால எல்லைக்கும் அப்பால் போர் நீண்டு சென்றது. அழிவுகளும் இழப்புகளும் பெருமளவில் அதிகரித்தன.
இந்தியப் படைப்பலத்திற்கு அஞ்சி, தனது உயிரைப் பாதுகாப்பதற்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு, அது நடைபெறாமல் போனது ஆச்சரியத்தையும், அதேவேளை ஆத்திரத்தையும் கொடுத்தது.
எனவே படைப் பலத்துடன் சேர்த்து ஒரு அரசியல் பேரத்திலும் இந்தியா இறங்கியது.
போரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைக்கத் தலைவர் முன் வருவாரானால், பெருந்தொகைப் பணமும் மற்றும் சலுகைகளும் அவருக்கு வழங்கப்படும் என, இந்திய அரசு கூறியது.
நிபந்தனைகளை ஏற்றால் புலிகள் இயக்கத்திற்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் புனர்வாழ்வுக்கென்று 500 கோடி ரூபாவும், இயக்கத்திற்கென்று 200 கோடி ரூபாவும் வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு உறுதியளித்துக் கூறியது.
இந்திய அரசின் சார்பில் அதன் உளவுத்துறையான ‘றோ’வின் பிரதம அதிகாரி கேணல் வர்மா அவர்கள் பேரத்தில் ஈடுபட்டார். இந்தப் பெருந்தொகைப் பணத்தை வைத்துக்கொண்டு தொழிற்சாலை போடலாம்; மற்றும் முதலீடுகளைச் செய்து வருமானம் சம்பாதிக்கலாம் அத்துடன் இந்தப் பணத்தை வீசியெறிந்து தேர்தலையும் வென்று பதவியிலும் அமரலாம்; அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சுகங்களையும் சலுகைகளையும் அதிகரிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதியான கேணல் வர்மா தலைவருக்கு ஆசை காட்டினார். அது மட்டுமல்ல, ஆயுதங்களை ஒப்படைத்தாலும் தலைவரின் மெய்ப்பாதுகாப்பிற்கென்றும் மற்றும் தளபதிகளினது பாதுகாப்பிற்கென்றும் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்றும் சலுகைகளை அள்ளி வீசினார்.
சலுகைகளையும் பணத்தையும் அள்ளி வீசுவதாகக் கூறிவிட்டு இந்தியா சும்மா இருக்கவில்லை. அந்தச் சலுகை வலைக்குள் தலைவரை விரைவாக வீழ்த்துவதற்காக, அவருக்கெதிரான இராணுவ அழுத்தத்தையும் இந்திய அரசு அதிகரித்தது.
மணலாற்றுப் பகுதியை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கையை இந்தியப்படைகள் தீவிரப்படுத்தின. தலைவரின் இருப்பிடம் என்று கருதிய பகுதிகளெங்கும் இந்திய வான்படை 200 கி.கிராம் குண்டுகளை வீசத் தொடங்கியது. அடர்ந்த காடுகள், திறந்த வயல்வெளிகளைப் போல மாறும் அளவுக்கு பாரிய விருட்சங்களைத் தகர்த்தெறிந்து அங்கிருந்தோரை அஞ்சச் செய்யுமளவுக்கு அந்தப் பாரிய குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இப்பாரிய குண்டுகளைத் தலைவரின் இருப்பிடப்பகுதிகள் மீது வீசிக்கொண்டு, இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் 200 கி.கிராம் குண்டுகளின் தன்மைகளை விளக்கியபடி “விரைவில் தலைவர் சாகப்போகின்றார் அதற்கிடையில் கோரிக்கைகளை ஏற்கச் சொல்லித் தகவல் அனுப்புங்கள்” என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்தனர்.
என்ன செய்தாவது தலைவரைப் பாதுகாத்துவிட வேண்டும் என்பதில் அக்கறைகொண்ட எமது மூத்த உறுப்பினர்களான அந்தப் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஏற்கும்படி தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவரிடம் மன்றாடினர். அக்கோரிக்கைகளை ஏற்பதால் இயக்கத்திற்கு நட்டமேற்பட்டுவிடப் போவதில்லை என்று எடுத்து விளக்கினர்.
இயக்கத்திற்கென்று இந்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட 200 கோடி ரூபா என்பது, அந்த நேரம் எமது இயக்கத்திடம் இருந்த ஆயுதங்களின் மொத்தப் பெறுமதியை விடப் பல மடங்கு அதிகமானது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி, “ஆயுதங்களை ஒப்படைத்தால் நட்டமேற்படப் போவதில்லை தேவை ஏற்பட்டால் அப்பணத்தைப் பயன்படுத்தியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்யலாம்” என்று வாதிட்டனர்.
இதேவேளை, தலைவரோடு தோளோடு தோள் நின்றபடி களமாடிக்கொண்டிருந்த தளபதிகளும் சண்டைக்களத்தின் கடுமையை நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
இந்திய வான்படை குண்டுகளை அள்ளிக் கொட்ட இந்திய இராணுவம் முற்றுகையை இறுக்கி புலிகளின் அசைவியக்கத்தைத் தடுத்து புலிவீரர்களை மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்தது. இதனால் மணலாற்றுக் காட்டுக்குள் பட்டினியும், நோயும், சாவும் போட்டி போட்டுக் கொண்டு, தலைவர் உட்படப் புலிவீரர்களை வதைத்தன.
இந்த நிலையில் தலைவரைப் பாதுகாக்க முயன்ற தளபதிகள் மணலாற்றுக் காட்டைவிட்டு வேறிடம் செல்லும்படி தலைவரிடம் வேண்டினர்.
வேறிடம் செல்வதால் மட்டும் உயிர்ப்பாதுகாப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், தளபதிகளின் வேண்டுகோள்களை ஏற்க மறுத்தார்.
அந்தக் காடு எங்கிலும் பரந்து கிடந்த பழைய கால நினைவுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி விட்டுத் தலைவர் சொன்னார்.
“இது பண்டாரவன்னியன் உலாவித் திரிந்த காடு. இந்தக் காட்டில் இருந்த படியே நான் போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன்”. என்று வைராக்கியமாகக் கூறிவிட்டு, சண்டையை வழிநடாத்துவதிலேயே முழுக்கவனம் செலுத்தினார்.
இவ்விதம் இந்தியாவில் இருந்த எமது மூத்த உறுப்பினர்களும், களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த தளபதிகளும் தலைவரைப் பாதுகாக்கப் பிரயத்தனப்பட்டனர்.
ஆனால், தலைவரது எண்ணமெல்லாம் தனது சொந்தப் பாதுகாப்பின் மீதோ அல்லது தருவதாக வாக்களிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பணத்தின் மீதோ இருக்கவில்லை. அவரது முழுக்கவனமும் எமது இனத்தின் அரசியல் உரிமைகள் மீதே இருந்தது.
புனர்வாழ்வுக்கான பணத்துடன் மட்டும் நின்றுவிடாது, அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் எழுத்து மூல உறுதி தரவேண்டும் என்று இந்திய அரசைக் கோரும்படி, பேச்சுவார்த்தை பிரதிநிதிகளிடம் தலைவர் பணித்தார்.
இந்திய அரசின் சார்பில் அரசியல் பேரத்தை நடாத்திக் கொண்டிருந்த கேணல் வர்மா இதற்கு உடன்பட மறுத்தார். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்கும் விடயத்தை தாங்கள் கவனித்துக் கொள்வதாகப் பதில் கூறினார்.
ஒடுக்கப்படும் இனத்தின் தலைவர்களுக்கு வசதிகளையும், சலுகைகளையும் வாரி வழங்கி அவர்களை வளர்ப்பு நாய் நிலைக்கு ஆளாக்கிவிட்டு, அந்த இனத்தின் எழுச்சியை நசுக்குவது அல்லது இதற்கு உடன்பட மறுத்தால் அந்தத் தலைவர்களுக்கு எதிரான அழுத்தங்களைப் பிரயோகித்து அவர்களை அடிபணியச் செய்து, அவர்கள் மூலமாக அந்த இனத்தின் அடிமைச் சாசனத்தை எழுதுவிப்பது…. அல்லது அழிப்பு வேலைகளைச் செய்து அந்த இனத்தைப் பலவீனப்படுத்திவிட்டு, அதன் மேல் அரைகுறைத் தீர்வுகளைத் திணிப்பது….. இவைதான் காலாதி காலமாக ஏகாதிபத்தியவாதிகளும் ஆக்கிரமிப்பு சக்திகளும் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்த வருகின்ற சித்தாந்தங்கள் ஆகும்.
ஆனால், இந்த ஏகாதிபத்தியச் சித்தாந்தங்கள் எதுவுமே, தலைவரிடம் எடுபடவில்லை.
சலுகைகளைக் கண்டு வாய்பிளக்கும் தலைவர்களிடமும், தனதும் தனது குடும்பத்தினதும் உயிர்களுக்கு அஞ்சி ஒரு தேசியத்தின் உயிரை அழியவிட விரும்பும் தலைவர்களிடமும்தான், அந்தச் சித்தாந்தம் எடுபடும்.
படைப்பலத்திற்கு அடிபணிந்து உயிருக்கு அஞ்சி தமிழினத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்தார் என்ற வரலாற்று அவச்சொல்லை ஏற்க, தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சாவையும், பட்டினியையும், அழிவையும் ஏற்கவே அவர் தயாராக இருந்தார்.
தமிழ் இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே தலைவரின் இலட்சியம். அது முடியாவிட்டாலும், ‘எவர்க்கும் அடிபணியாது விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடு’ என்ற செய்தியையே அடுத்த சந்ததிக்குக் கொடுக்க அவர் விரும்பினார்.
எனவேதான் இந்திய அரசு கொடுத்த அனைத்து நிர்ப்பந்தங்கள், ஆபத்துக்கள் மத்தியிலும் தப்பிப் பிழைப்பதற்கு வழி ஒன்று இருந்த நிலையிலும், தலைவர் அவர்கள் ஆபத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தார் என்பது, எமது இன வரலாற்றில் முதற் தடவையாக நடந்துள்ளது.
இதுவரை நாளும் தமிழினத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் விட்ட தவறு யாதெனில், தங்களுக்கும் தமது குடும்பத்தவர்களுக்கும் வரும் கஷ்டங்களை – ஆபத்துக்களை நீக்குவதற்கா, இலட்சியத்தை இனத்தை எதிரிக்கு விற்று விட்டு அதன் பின்னர். அதற்கு நியாயங்கள் கற்பிப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தனர்.
இந்தப் பழைய அரசியல் மரபுக்கு முரணாக தலைவர் பிரபாகரனின் செயற்பாடு அமைந்திருந்தது. எமது இனத்திற்கு வரும் எந்த ஆபத்துக்குமெதிராகப் போராடி வெல்வது அல்லது அப்போராட்டத்தில் வீரச்சாவடைவதே சிறந்தது என்ற விடயமே இந்தச் சம்பவத்தின் வாயிலாக எதிர்காலச் சந்ததிக்குத் தலைவர் பிரபாகரன் கொடுத்த செய்தியாகும்.
சலுகைகள், பணம் என்பவற்றைக் கொடுத்து இந்தியா எதை வாங்க முயற்சித்தது என்ற உண்மையையும் அதன் அபாயத் தன்மையையும் இந்திய மண்ணில் இருந்தபடி பேச்சுவார்த்தைக
ளில் ஈடுபட்ட எமது பிரதிநிதிகளுக்குச் சூசகமாகத் தெரிவிப்பதற்காக, தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவர் இப்படிச் செய்தியனுப்பினார்.
“நான் செத்த பிறகு, யாரென்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ, இயக்கத்தையும் இனத்தையும் யாரிற்கும் விற்கலாம்”.
தொகுப்பாக்கம்:- தளபதி தினேஷ் மாஸ்ரர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”