மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தோணிதட்டாமடு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் எல்லைக் கிராமங்களாகச் சிங்களக் கிராமங்கள் அமைந்துள்ளது. இயற்கை வளம் மிகுந்த இக்கிராம மக்கள் தமக்கான தனித்துவமான கலை, கலாச்சார, முறைகளையும் பாதுகாத்து சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக அயல் சிங்களக் கிராமத்திலேயே தமது அத்தியாவசியத் தேவைப் பொருட்களைக் கொள்வனவு செய்து வந்தார்கள்.
25.05.1987 அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் தோணிதட்டாமடு மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளிற்குள் பதுங்கிக்கொண்டனர்.
பின்னர் 27.05.1987 அன்று இரவு இரண்டு மணியளவில் இக்கிராமத்தை சுற்றிவளைத்து உள்நுழைந்த இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சுட்டும் வெட்டியும் மக்களைப் படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் பதின்மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.