
இன்று சர்வதேச வானொலி நாள்..
வானொலி என்றால் எனது அடையாளம். இன்னமும் எனது அடைமொழி எங்கள் வானொலியாகத்தான் இருக்கிறது. எங்கள் வானொலியை தொலைவிலிருந்து பார்த்து அதன் உள்ளே சென்று பார்த்து வளர்ந்து நிமிர்ந்தது ஒரு வரம்.
எங்கள் வானொலி உண்மையில் ஒரு பல்கலைக்கழகம் தான்.
அங்கு கலைத்துறை, செய்தித்துறை சார்ந்தவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று வேலைகளை அவர்களை அறியாமலேயே பழகிவிடுவார்கள். செய்திப்பிரிவு, கலைப்பிரிவு, ஆவணப்பிரிவு மற்றும் தமிழீழ வானொலி என நான்கு கட்டமைப்புக்கள் இருந்தன. நிறுவனப் பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர், நிர்வாக இணைப்பாளர், நிர்வாக மேலாளர் என்ற பதவி நிலையில் நிர்வாகம் நடைபெறும். செய்திப்பிரிவில் பிரதம செய்தியாசிரியர், செய்தியாசிரியர், துணைச் செய்திரியர்கள் என அதன் நிர்வாகக் கட்டமைப்புக் காணப்படும்.
ஒரு நிகழ்ச்சித் தயாரிப்புக்கான தயார்ப்படுத்தல் என்பது சாதாரணமாக இருக்காது.
நிகழ்சிக்கான மதிப்பீட்டுப்படிவம் ஒன்று இருக்கும், (எனது வானொலிக்காலத்தின் முதலாவது பணி, நேயர் கடிதங்களைப் பிரித்து தரம்பிரிப்பதும் மதிப்பீட்டுப் படிவம் நிரப்புவதும் ) அந்த மதிப்பீட்டுப்படிவத்தில் மதிப்பீடு 01, மதிப்பீடு 02, இணைப்பாளர், பொறுப்பாளர் என நான்கு கட்டங்களாக மதிப்பீட்டாளர்களால் நிகழ்ச்சிகள் மதிப்பிடப்படும், ஒலிப்பதிவின் பின்னர் ஒலிப்பதிவு சரிபார்க்கப்பட்டே நிகழ்ச்சி ஒலிபரப்புக்கு அனுப்பப்படும். ஒலிப்பதிவுக் கலையகத்திலும் ஒலிபரப்பு நிலையத்திலும் தொழில்நுட்பவியலாளர்கள் தனியாக இருப்பார்கள் (தற்போதைய தனியார் வானொலிகளின் ஒலிபரப்பாளர்கள் போல ஒருவரே இரண்டையும் செய்யும் வகையிலான ஏற்பாடு இருக்கவில்லை)
ஒலிப்பதிவுகள் ஒலிநாடாக்களில் (கசற்) இடம்பெற்றிருந்தன. பொருளாதாரத் தடை என்பதால் அடிக்கடி பழுதடையும் ஒலிப்பதிவுக்கருவிகள் திரும்பத் திரும்ப திருத்தப்பட்டே பயன்படுத்தப்பட்டன. சமாதான காலத்துடன் துரிதமாகவே கணிணிப்பயன்பாடு ஒலப்பதிவு மற்றும் ஒலிபரப்பு மயப்படுத்தப்பட்டது.
ஒலிப்பதிவுகளின் போது, குறைந்தது நால்வர் ஒரே நேரத்தில் குரல் வழங்கும் வகையில் கலையக வசதிகள் காணப்பட்டன.
”உயிர்த்தெழுகை” போன்ற தொடர் மற்றும் பொதுவான நாடகங்களுக்காக ஒலிப்பதிவுக் கலையகத்தில் கூடும் போது பெருமளவானோரின் பிரசன்னம் அங்கு காணப்படும். ஒலிநாடா (கசற்) ஒலிப்பதிவின் போது யாராவது ஒருவர் ஒரு பிழை விட்டால், அந்தச் சிரமத்தைச் சுமப்பவராக ஒலிப்பதிவாளரே காணப்படுவார்.
சில நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவின் பின்னரே இசை சேர்க்கப்படும், சில நிகழ்ச்சிகளின் போது நேரடியாகவே இசையும் சேர்க்கப்படுவது வழக்கம்.
செய்திப்பிரிவு:
சமாதானத்துக்கு முன்னர் வானொலிகளையும், தொலைக்காட்சிகளையும் மட்டுமே தான் கூடுதலான செய்திக்கான மூலங்களாகப்பயன்படுத்தப்பட்டன. அதனை விட அமைப்பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் துணைபுரிந்தன. சில செய்தியாளர்கள் மிதிவண்டிகளிலோ, கிடைக்கும் வாகனங்களிலோ பயணித்து செய்திகளைச் சேகரித்துவருவார்கள். அவ்வாறு வருகின்ற செய்திகள் கைகளால் எழுதப்பட்டே வாசிப்பாளர்களால் வாசிக்கப்பட்டன. சமாதான காலத்திற்குப் பின்னர், இலத்திரனியல் சாதனங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தன. தரம் வாய்ந்த ஒலிப்பதிவுக்கருவிகள், கணிணிகள் பயன்படுத்தப்பட்டன. இணையம், தொலைபேசி, தொலைக்காட்சி, அனைத்துப் பகுதிகளிலும்
செய்தியாளர்கள் என ஒரு பிரமாண்ட செய்திக் கட்டமைப்பு எங்கள் வானொலியில் இருந்தது. இன்றுவரையில் அன்று கைகோர்த்த பல ஊடக நண்பர்கள் ஆதரவாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
பணியாளர்கள்:
வானொலியில் ஒலிக்கும் குரல்களை மட்டுமே வைத்துக்கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களின் பெயர்கள் மட்டுமே நேயர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அந்த ஒலிப்பதிவு, ஒலிபரப்புக்குப்பின்னால் பெருமளவானோரின் உழைப்புக்கள் மறைந்திருக்கும்,
ஒலிபரப்புக் கோபுரங்களை அமைப்பவர்கள், சாரதிகள், திருத்துநர்கள், ஆவணப்பிரிவுப் பணியாளர்கள், தட்டச்சாளர்கள், நிதியாளர்கள், பொறுப்பாளர்கள், போராளிகள் என 60 இற்கும் மேற்பட்ட உறவுகளின் சங்கமாக எங்கள் வானொலி இருந்தது. கலைநிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு ஒலிபரப்புக்கள் எல்லாமே பண்டிகை போலவே எங்கள் வானொலிப் பணியகம் காட்சிதரும்.
எங்கள் வானொலியின் தாங்குதூண்களை தொலைத்துவிட்டோம்.. எங்கள் பிரமாண்டங்களின் விழுதுகளின் நிழலில் இன்னமும் ஏக்கப் பெருமூச்சுடன் இளைபாறிக்கொள்கிறோம்..