×

இரண்டு தசாப்தங்களும், புலிகளும்

(வெளியீடு: 1991)

‘எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் பிரபாகரன்.’ இப்படியாக பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார் பிரபல எழுத்தாளரும், ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையின் ஆசிரியருமான மேர்வின் டீ சில்வா.

புயலின் மையமாக நின்று, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வீரன் என்ற காரணத்திற்காக ஒரு தசாப்தத்தின் மாமனிதன் எனப் பிரபாகரன் போற்றப்படுகிறார். ‘‘இது எனது தனிப்பட்ட மானசீக மதிப்பீடு அல்ல. இலங்கைத் தீவை அதிர வைத்த பூகம்பமான நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இது தவிர்க்க முடியாத வரலாற்றின் தீர்ப்பு’’ என்கிறார் மேர்வின்.

எண்பதுகளில் புயலின் வேகத்துடனும், ஆவேசத்துடனும் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காலகட்டத்தின் வரலாற்றுக் கதாநாயகன் பிரபாகரன் என்பதும் சரியான மதிப்பீடுதான். எனினும், பிரபாகரனதும், விடுதலைப் புலிகளினதும் வரலாறு ஒரு தசாப்தத்திற்குள் மட்டும் அடங்கி நிற்கவில்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் தலைதூக்கிய வன்முறை அரசியலலைகளுடன் தொடங்கி, இன்று வரை படிமுறை வளர்ச்சியுடன் முன்னோக்கி அசைந்து கொண்டிருக்கும் புலிகளின் வரலாறு, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை வியாபித்து நிற்கிறது.

இந்த இரண்டு தசாப்த காலகட்டத்தில், தமிழீழ மக்களின் அரசியல் வரலாறு மாபெரும் திருப்புமுனைகளை எதிர்கொண்டது. இந்த வரலாற்றுத் திருப்பங்களும், தேசியப் போராட்டத்தில் அவை விளைவித்த பாரிய தாக்கங்களும், விடுதலைப் புலிகளின் வரலாற்றுத் தோற்றம், வளர்ச்சி, எழுச்சியுடன் பின்னிப்பிணைந்து நிற்கின்றன.

எழுபதுகளைக் கொண்ட தசாப்தம் அரச ஒடுக்குமுறையையும் (state repression), ஆயுத எதிர்ப்புமுறையையும் (armed resistance) முனைப்புறச் செய்த காலகட்டம். ஒடுக்குமுறை மோசமாகிச் செல்லும் போது, எதிர்ப்புமுறையும் உரங்கொண்டு தீவிரம் பெறுவது இயல்பானது. சகல புரட்சிகரப் போராட்டங்களிலும் இதுவே சரித்திர நியதியாக இருந்து வந்திருக்கிறது. இந்த முரண்பாட்டு நியதியின் அடிப்படையில், இந்தத் தசாப்த வரலாற்றினை நாம் மீளாய்வு செய்து பார்ப்பது பயனுடையதாக அமையும். அப்பொழுதுதான் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுத் தேவையையும், புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கான புறநிலைகளையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

எழுபதின் ஆரம்ப காலகட்ட நிகழ்வுகள், தமிழீழ மக்களின் அரசியல் வாழ்வில் பாரிய தாக்கங்களை விளைவித்தன. இந்தக் காலப் பகுதியில் புதிய மூர்க்கத்துடன் எழுந்த பேரினவாதம், தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியது. இதன் விளைவாகத் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில் நிலவிய தேசிய முரண்பாடு கூர்மையடைந்தது. இதனால் தமிழீழத்தில் வன்முறை அரசியலின் எழுச்சிக்கான திண்ணியமான புறநிலைகள் உருவாகின.

ஆவேசம் கொண்ட இளம் பரம்பரை

ஏற்கனவே சிங்கள இனவாத ஒடுக்குமுறையின் அழுத்தத்தால் விரக்தியும், வெறுப்பும் கொண்டிருந்த தமிழ் இளம் சமுதாயம் மீது 1970ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறை திணிக்கப்பட்டமை, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்தது. உயர்கல்வி வாய்ப்பிற்கும், வேலை வாய்ப்பிற்கும் கதவுகள் அடைக்கப்பட்டதால் தமிழ் இளம் பரம்பரை ஆவேசம் கொண்டிருந்தது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் கூட்டங்கள், கொடும்பாவி எரிப்புக்களாகத் தமிழீழமெங்கும் மாணவர் கிளர்ச்சிகள் குமுறின. இந்தக் கிளர்ச்சிகளுக்கு எதிராக சிங்கள அரசின் ஆயுதப் படையினர் மேற்கொண்ட மிருகத்தனமான அடக்குமுறைகள், இளம் சமூகத்திற்கு மேலும் ஆவேசத்தைக் கொடுத்தது. இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில் சிங்கள இனத்துவேசத்திற்கு சிகரம் வைக்குமாப்போல் 1972ஆம் ஆண்டு, மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. திருமதி பண்டாரநாயக்காவின் தலைமையில் முக்கூட்டு முன்னணியாக (சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி) 1970இல் ஆட்சிபீடம் ஏறிய அரசு, சிங்களப் பேரினவாதத்தைச் சட்டரீதியாக ஸ்தாபனமயப்படுத்த முனைந்தது. இந்த நோக்கில் கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் யாப்பை, இடதுசாரி இயக்கத்தின் தந்தைகளில் ஒருவராக வர்ணிக்கப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாக்கிக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும் முதன்மையான விசேட அந்தஸ்து வழங்கி, முந்திய சோல்பரியின் அரசியலமைப்பில் தமிழருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை நீக்கி, தமிழரின் நலன்களுக்கு விரோதமான முறையில் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய அரசியலமைப்பு, சிங்கள-தமிழ்த் தேசிய முரண்பாட்டை மேலும் வலுக்கச் செய்தது.

சிங்கள தேசத்தில் தலைவிரித்தாடிய இனத்துவேச அரசியல், தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில், புரட்சிகரமான அரசியல் விழிப்புணர்வையும், தீவிரவாதப் போர்க்குணத்தையும் உருப்பெறச் செய்தது.

வன்முறையும், மென்முறையும்

பேயுருவம் பெற்று வந்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துநின்று போராடும் உறுதிப்பாடோ, செயற்திறனோ, தீர்க்கதரிசனமோ, உருப்படியான கொள்கைத் திட்டமோ எதுவுமற்ற பழைய தமிழ்த் தலைமையில் புதிய இளம் சமுதாயத்திற்கு நம்பிக்கை தளர்ந்தது. பிரித்தானிய காலனித்துவம் திணித்துச் சென்ற பாராளுமன்ற அரசியல் முறை, சிங்களப் பெரும்பான்மை சர்வாதிகாரத்திற்கு வலுவூட்டி வந்ததால் பாராளுமன்ற அரசியலிலும் அவநம்பிக்கை ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மென்முறை வழியைத் தழுவிநின்ற அகிம்சைப் போராட்டம், அன்றைய புரட்சிகர சூழ்நிலைக்கு ஒவ்வாதது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது. மனிதாபிமானமற்ற, மனித தர்மங்களுக்கு மதிப்பளிக்காத அடக்குமுறையாளனின் மிருகத்தனமான வன்முறைக்கு எதிராக, மென்முறையான, ஆத்மீக, அறநெறி தழுவிய போராட்ட வடிவம் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதைத் தமிழீழ இளம் சமூகம் உணர்ந்து கொண்டது.

அடக்குமுறையாளனின் வன்முறையானது, மனித உரிமைகளையும், அடிப்படை மனித சுதந்திரங்களையும் நசுக்கித் தமிழின ஒழிப்பை இலக்காகக் கொண்டதால் அது அநீதியானது; பிற்போக்கானது. வன்முறைக்கு எதிராக அடக்கப்படும் மக்கள், உரிமை கோரி மேற்கொள்ளும் வன்முறைப் போராட்டம் முற்போக்கானது; நியாயமானது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வன்முறை அரசியல் போராட்டத்தில் குதிக்கப் புரட்சிவாதத் தமிழ் இளைஞர்கள் தீர்மானித்தனர்.

இதுவரை காலமும் அமைதி வழியில் நடைபெற்று வந்த அரசியல் போராட்டம், எழுபதின் ஆரம்பத்தில் வன்முறை தழுவிய போராட்டமாக வெடித்தது. கொலை முயற்சிகள், குண்டுத் தாக்குதல்கள், அரச உடமைகளை நாசம் செய்தல், பேருந்துகளுக்குத் தீவைத்தல், அரச கொடியை எரித்தல், இப்படியாகப் பரவலாக அரசியல் வன்முறை குமுறியது. புதிய இனவாத அரசியலமைப்பை ஆதரித்துத் தமிழ்த் துரோகிகளாகக் கருதப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசின் அடிவருடிகளாகச் செயற்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், அரச அடக்குமுறையின் ஏவு நாய்களாகச் செயற்பட்ட தமிழ்க் காவற்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தன்னிச்சையான வன்முறை

தமிழீழத்தில் தலையெடுத்த வன்முறைப் போராட்டம், சிங்கள அரசுக்கு ஒரு புதிய சவாலாக எழுந்தது. 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னிலங்கையில் வெடித்த ஜே.வி.பி.யினரின் ஆயுதக் கிளர்ச்சியை வெற்றிகரமாக நசுக்கிப் பதினையாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்த பண்டாரநாயக்கா அம்மையார், தமிழீழத்திலும் அரச அடக்குமுறையை முடுக்கிவிடத் தயங்கவில்லை. அரச ஆயுதப் படையினரால் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர். மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடுமை காரணமாகப் பல தீவிரவாத இளைஞர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. ஆயினும் வன்முறை அலைகள் ஓயவில்லை.

தமிழ் இளைஞர்களின் வன்முறைப் போராட்டம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டத்தைக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு மூலம் நெறிப்படுத்தப்படவில்லை. தனி நபர்களாகவும், ஒரு சிலரைக் கொண்ட குழுக்களாகவும், தன்னிச்சையான போக்கில் வன்முறையில் இறங்கிய இளைஞர்களுக்கு அனுபவமோ, ஆயுத வெடிமருந்துகள் பற்றிய அறிவோ, பயிற்சியோ, போர் யுக்தி, போர்முறைத் திட்டங்கள் பற்றிய தெளிவோ இல்லாததால், பெரும்பாலான வன்முறை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும் விடுதலையுணர்வும், தேசியப் பற்றுணர்வும், அரச ஒடுக்குமுறைக்கு எதிரான ஆவேசமும், புரட்சிகரப் போர்க்குணமும் இந்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்து காணப்பட்டது.

பிரபாகரனின் புரிந்துணர்வு

வன்முறை அரசியலில் ஆர்வம்கொண்ட இந்தப் புரட்சிவாத இளைஞர்கள் அனைவரும், தம்மைத் தமிழ் மாணவர் பேரவையினர் என அழைத்துக் கொண்டனர். சத்தியசீலன் என்ற பட்டதாரி மாணவன் தலைமையில் இந்த அமைப்பு இயங்கி வந்தது. சிவகுமாரன், பிரபாகரன், தங்கத்துரை போன்றோர் இந்த அமைப்போடு தொடர்புகொண்டு இயங்கி வந்தனர்.

செயற்திறனற்ற தலைமை காரணமாக இந்த அமைப்பு செம்மையாகச் செயற்படவில்லை. சத்தியசீலன் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டாரே தவிர, களத்தில் இறங்கத் துணியவில்லை. புரட்சிகரக் கொள்கைத் திட்டமோ, செயற்பாடோ இல்லாததினாலும், ஆயுதப் போராட்டம் பற்றிய தெளிவு இல்லாததினாலும், வன்முறை நிகழ்வுகள் மாறி மாறித் தோல்வி கண்டதாலும், பேரவைத் தலைமை மீது விரக்தியடைந்த பிரபாகரன் தனித்தியங்க முடிவுசெய்தார்.

எதேச்சையாக, கட்டுப்பாடற்ற முறையில் திசையின்றிப் பிரவாகமெடுத்த வன்முறை எழுச்சியானது இளைஞர் சமூகத்தின் இதயக் குமுறலை வெளிப்படுத்தியதே தவிர, மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதைப் பிரபாகரன் புரிந்து கொண்டார். தேசிய விடுதலையை இலட்சியமாக வரித்த கொள்கைத் திட்டத்துடன் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்ட அமைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டியதன் வரலாற்றுத் தேவையையும் அவர் நன்கு உணர்ந்து கொண்டார்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புரட்சிகர விடுதலை அமைப்பைக் கட்டி எழுப்பி, தீர்க்கமான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென உறுதிபூண்ட பிரபாகரன், 1972ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். வீரமும், அர்ப்பணிப்பும், விடுதலையுணர்வும் மிகுந்த புரட்சிகர இளைஞர்கள் பிரபாகரன் பின்னால் அணிதிரண்டனர்.

புதிய தமிழ்ப் புலிகள்

1972ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இந்த அமைப்பை உருவாக்கிய பிரபாகரன், அவசரப்பட்டுக் களத்தில் குதிக்காமல் ஆரம்பகாலத்தைத் தனது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதிலும், போர்முறைத் திட்டம் ஒன்றை உருவாக்குவதிலும் செலவளித்தார். அன்றை யதார்த்த சூழ்நிலையையும், தமிழீழத்தின் பூகோளத் தன்மையையும், எதிரியின் இராணுவ பலத்தையும் கருத்திற் கொண்டு நீண்டகால கெரில்லா (கரந்தடி) போர்முறையின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே பொருத்தமானதெனப் பிரபாகரன் முடிவுக்கு வந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற இலட்சிய வரிகளைப் புனைந்த பிரபாகரன், தமிழீழத்தை மீட்டு, சுதந்திரத் தனியரசு அமைப்பதையே புலிகள் இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோளாக வரித்துக் கொண்டார்.

விடுதலைப் புலிகளின் தோற்றமானது எழுபதுகளைக் கொண்ட தசாப்தத்தின் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகவும், தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு மாபெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. திசை தெரியாது அலைமோதிய வன்முறை எழுச்சியிலிருந்து ஒரு திண்ணியமான, நீண்டகால ஆயுதப் போராட்டத்திற்கான உறுதியான அத்திரவாரத்துடன் புலிகள் இயக்கம் பிறப்பை எடுத்தது. புலிகளின் பிறப்போடு புரட்சிகரமான ஒரு புதிய வரலாறும் பிறந்தது.

தமிழராய்ச்சி மாநாட்டுக் கொலைகள்

1974ஆம் ஆண்டு சனவரி மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், இனத்துவேச அரசியலின் அசிங்கமான வெளிப்பாடாக அமைந்தன. தமிழரின் கலாச்சார வாழ்வைச் சிதைக்கவும் சிங்கள அரசு தயங்காது என்பதை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது. இச்சம்பவம் தமிழீழ மக்கள் மனதில் என்றுமே மாறாத ஒரு வடுவை ஏற்படுத்தியதோடு, இன முரண்பாட்டை மேலும் இறுகச் செய்தது.

தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த விடாது தடுக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பகீரத முயற்சிகளைச் செய்தது; இறுதியில் சிங்களப் பொலீஸாரை ஏவி மாநாட்டைக் குழப்பியது. இந்தச் சம்பவத்தில் 9 அப்பாவித் தமிழர்கள் கொலையுண்டார்கள். இந்தப் படுகொலைச் சம்பவத்திற்குச் சூத்திரதாரியாக விளங்கியவர் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவாகும். சுதந்திரக் கட்சியின் வடமாகாணப் பிரதான அமைப்பாளராக இயங்கிய துரையப்பா, அரசின் அடிவருடியாக இருந்து தமிழ்த் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்த் தீவிரவாத இளைஞர்களை அரசுக்குக் காட்டிக் கொடுத்தார். தமிழராய்ச்சி மாநாட்டிற்கு சிங்களப் பொலீஸாரை ஏவிவிட்டதற்கு இவரே காரணகர்த்தாவாக விளங்கினார். இந்த இனத்துரோகியை அழித்து, சிங்கள அரசுக்கு ஒரு பாடம் புகட்டப் பிரபாகரன் முடிவு செய்தார்.

இதற்கிடையில் தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளால் கொதிப்படைந்த சிவகுமாரன், அல்பிரட் துரையப்பாவையும், உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவையும் குண்டுவைத்துக் கொலை செய்ய மேற்கொண்ட பகீரத முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் பொலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சிவகுமாரன், 1974 ஜுன் 5ஆம் திகதி வீரமரணத்தைத் தழுவிக் கொள்கிறான். விடுதலையுணர்வும், வியப்பு மிக்க துணிச்சலும் கொண்ட மகத்தான ஒரு விடுதலை வீரனை இழந்து தமிழீழம் துயரில் ஆழ்ந்தது.

துரையப்பா சுட்டுக் கொலை

பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் திட்டமிட்டபடி செயலில் குதிக்கிறார்கள். தமிழினத்தின் பெரும் துரோகியான அல்பிரட் துரையப்பா, 1975 யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அருகாமையில் பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அல்பிரட் துரையப்பா கொலையுண்ட நிகழ்வு சிங்கள அரசுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முயன்ற தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தமிழீழத்தில் நிலைகொள்ள முனைந்த முயற்சிகளுக்கும் இந்தச் சம்பவம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. சிங்கள இனவாத அடக்குமுறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் முதலாவது அத்தியாயத்தை விடுதலைப் புலிகள் ஆரம்பித்து வைத்தனர். எழுபதுகளில் தமிழீழத்தை அதிர வைத்த முதலாவது ஆயுதப் போர் நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தி, விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான வரலாற்றுப் பயணத்தைத் தொடக்கி வைத்தார் பிரபாகரன்.

1976ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராணுவ அமைப்பையும், அரசியல் அமைப்பையும் ஒன்றிணைத்த ஒரு தேசிய விடுதலை இயக்கமாக, விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டனர். அன்று மலர்ந்து கொண்டிருந்த எமது விடுதலை இயக்கத்திற்கும், தமிழர்களின் தேசியப் போராட்டத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது தமிழ்ப் பொலீஸ் உளவுப் படையாகும். இந்த உளவுப் படையுடன் சேர்ந்த சிங்கள அரசின் கைக்கூலிகளாகக் காட்டிக் கொடுப்போரும், இனத்துரோகிகளும் இயங்கினர். தமிழீழத்தில் ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பை வளரவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியோடு எதிரியின் கைப்பொம்மைகளாக இவர்கள் செயற்பட்டனர். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால கெரில்லா நடவடிக்கைகள், பொலீஸ் உளவுப் படையைச் சிதைப்பதோடு, காட்டிக் கொடுக்கும் கயவர்களையும், இனத்துரோகிகளையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

தனியரசுக் கோரிக்கை

பாராளுமன்றத்திற்குப் புறம்பாகத் தமிழீழத்தில் தலைவிரித்தாடிய அரசியல் வன்முறை எழுச்சியும், புலிகள் இயக்கமாக உருவகம் பெற்ற ஆயுத எதிர்ப்பு இயக்கமும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலையும், நெருக்குதலையும் கொடுத்தது. பாலைவனத்தில் எழுப்பும் குரல்கள் போல, பாராளுமன்றத்தில் விடும் அறிக்கைகளில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதைத் தமிழீழ மக்கள் உணர்ந்து கொண்டனர். சமஸ்டி கோரி நடத்திய சாத்வீகப் போராட்டங்களும் பயனற்றுப் போய்விட்டதையும் மக்கள் உணராமல் இல்லை. தீவிரமடைந்து சென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையும், அதன் எதிர்வீச்சாகத் தமிழீழத்தில் உருவாகியுள்ள புரட்சிகரப் புறநிலைகளும், ஒற்றையாட்சியைக் கைவிட்டுத் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க வேண்டுமென மக்கள் மத்தியில் எழுந்துள்ள புதிய விழிப்புணர்வும், தமிழ் அரசியல்வாதிகள் மீது ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ஒப்பந்தங்கள் செய்து – உடன்பாடுகள் செய்து – ஒத்துழைப்புச் செய்து, எல்லா வகையிலும் நெகிழ்ந்து கொடுத்தும், சிங்கள ஆளும் வர்க்கத்தால் மாறி மாறி ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாற்று அனுபவமும் தமிழ்த் தலைவர்களை உறுத்தியது. தமிழீழத்தில் மேலோங்கி நின்ற தன்னாட்சி உரிமைக் குரலுக்கு செவிசாய்க்க மறுத்தால், அது அரசியல் தற்கொலையில் போய் முடியும் என்பதையும் அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர். இவ்வாறான வரலாற்று நிர்ப்பந்தங்களால் நெருக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்திசைவாகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தனியரசுக் கோரிக்கையை முன்வைக்க முன்வந்தனர்.

1976ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டையில் நிகழ்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில், ‘‘தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, இறைமையுடைய, மதசார்பற்ற சோசலிச தமிழீழத்தை அமைப்பது’’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தமக்கு மனு தருமாறு கோரி 1977 யூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டணியினர் தமிழ் மக்களை வேண்டிக் கொண்டனர். தேர்தலில் அவையாகச் செயற்பட்டு, தமிழீழ அரசுக்கான யாப்பு ஒன்றைத் தயாரித்து, தமிழீழத்தின் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடுவோம் எனவும் கூட்டணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனம் செய்தனர். சர்வசன வாக்கெடுப்புப் போல நிகழ்ந்த இத் தேர்தலில், தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசை என்ன என்பதை தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தினர். அமோக வெற்றியை ஈட்டிய கூட்டணியினர், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையை இங்கு விபரிக்கத் தேவையில்லை.

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை, வெறும் தேர்தல் கோசமாகக் கூட்டணியினர் பயன்படுத்தியமை தமிழீழ மக்களுக்கு இழைத்த மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும். தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைக் கொச்சைப்படுத்தும் வகையில் கூட்டணியினர் அரங்கேற்றிய இந்த அரசியற் துரோக நாடகம், தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தைப் பின்னடைவுக்குள் தள்ளியது.

1977 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பதவியேறிய ஜே.ஆர்.இன் ஆட்சிபீடம், தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்வது போல ஒரு பயங்கர இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தச் சிங்கள இனவாதப் பேயாட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் கூட்டணித் தலைவர்கள் செயலிழந்து போய், தமது பாராளுமன்ற நாற்காலிகளை மட்டும் இறுகப் பற்றியபடி இருந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து கூட்டணித் தலைமை தமிழீழ அரசியல் அரங்கிலிருந்து முற்றாக அந்நியப்பட்டு நின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவது போல விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முனைப்புறத் தொடங்கியது. அரசின் அடக்குமுறைக் கருவிகளாகச் செயற்பட்டுத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கிய பல இரகசியப் பொலீஸ் அதிகாரிகளையும், இனத் துரோகிகளையும் எமது இயக்கம் அழித்தது.

1978 ஏப்ரல் 7ஆம் திகதி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையும், அவரது பொலீஸ் கோஸ்டியும் முருங்கன் காட்டுக்குள் புலிகளால் அழிக்கப்பட்ட சம்பவம், சிங்கள ஆட்சியாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பஸ்தியாம்பிள்ளை கோஸ்டியை அழித்தமைக்கும், மற்றைய பொலீஸ் அதிகாரிகள், இனத்துரோகிகள் கொல்லப்பட்டமைக்கும் உரிமைகோரி, முதற் தடவையாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையைக் கொழும்புப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. இதனூடாகப் புலிகள் இயக்கம் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வளர்ச்சிபெற்று வருவதைக் கண்டு சிங்கள அரசு திகைத்தது. தமிழீழத்தில் தலைமறைவாக வளர்ந்து வரும் விடுதலை இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில், 1978 மே மாதம் விடுதலைப் புலிகள் தடைச் சட்டத்தை சிங்கள அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் ஆயுதப் படைகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை வழங்கியது. இளைஞர்களைக் கண்மூடித்தனமாகக் கைது செய்யவும், விசாரணை இல்லாமல் நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்திருக்கவும், சித்திரவதை செய்து கொல்லவும் இந்தக் கொடும் சட்டம் இடமளித்தது. ஒட்டுமொத்தத்தில் தமிழருக்கு எதிரான அடக்குமுறையை இந்தச் சட்டம் வலுப்படுத்தியது.

1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி ஜெயவர்த்தனா அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்தியது. இந்த அரசியலமைப்புச் சட்டம் சர்வ அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை நிறுவியது. சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும் விசேட அந்தஸ்தை வழங்கியது. தமிழ் மொழியை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளியது. சாராம்சத்தில் சிங்களப் பௌத்த பேரினவாதம், சட்டம் மூலம் வலுப்பெற்றதோடு, ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியும் அமையப் பெற்றது. சிறீலங்கா ஆட்சியமைப்பிலிருந்து தமிழ் மக்கள் பூரணமாக அந்நியப்படுத்தப்பட்டனர்.

அவ்ரோ விமானம் புலிகளால் தகர்ப்பு

பாராளுமன்ற ஆசனங்களைத் தொடர்ந்தும் இறுகப்பற்றியிருந்த கூட்டணியினர், இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதியை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர உறுதிபூண்டது. இந்தச் சட்டம் சிறீலங்கா தேசியப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அதே தினத்தில், அரசுக்குச் சொந்தமான பயணிகள் விமானமான ‘அவ்ரோ’ விமானத்தை விடுதலைப் புலிகள் தகர்த்தனர். இரத்மலானை விமான நிலையத்தில் பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில், புலிகளால் வைக்கப்பட்ட நேரக்குண்டு வெடித்து, விமானம் சிதறியது. கொழும்பில் நிகழ்ந்த முதற் குண்டுவெடிப்பான இந்தச் சம்பவம், தமிழர் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியதுடன், இனத்துவேசத் திமிர்கொண்ட சிங்கள அரசின் முகத்தில் கரிபூசுவதாகவும் அமைந்தது.

எழுபதுகளைக் கொண்ட தசாப்தத்தின் இறுதிக் காலகட்டம், இன ஒடுக்குதலின் இரத்தம் படிந்த இருண்ட அத்தியாயத்துடன் முடிவுற்றது. தீவிரமடைந்து வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் எதிர்ப்பு இயக்கத்தை ஒழித்துத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் ஜெயவர்த்தனா அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தது. இதன்படி 1979 யூலை 30ஆம் திகதி விடுதலைப் புலிகள் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் படுமோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. சனநாயக தர்மங்களுக்கு விரோதமானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுமான இந்தக் கொடுமையான சட்டத்தைச் சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டித்தது. இந்தப் பயங்கரவாதச் சட்டத்தைப் பிறப்பித்த நேரத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது. பிரிகேடியர் வீரதுங்கா தலைமையில் மேலதிக இராணுவப் படைகளை யாழ்ப்பாணத்தில் குவித்த ஜெயவர்த்தனா, ஆறு மாத காலத்திற்குள், அதாவது 1979 டிசம்பர் 31ஆம் திகதிக்குள், விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளும் முற்றாக அழிக்கப்பட வேண்டுமென பிரிகேடியர் வீரதுங்காவுக்கு ஆணை பிறப்பித்தார்.

யாழ் குடாவில் இராணுவப் பயங்கரவாதம்

வீரதுங்காவின் இராணுவம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியது. முன்னென்றுமில்லாத வகையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். மிருகத்தனமாக சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். பலர் இராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் வதைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்களது சிதைந்த உடல்கள் வீதியோரம் வீசப்பட்டன. யாழ் குடாநாட்டு மக்கள் மீது இராணுவப் பயங்கரவாதம் கோரநர்த்தனம் புரிந்தது.

வீரதுங்காவின் ஆறு மாதகாலக் கொடுங்கோன்மை ஆட்சியின் விளைவாகப் பெரும் தொகையில் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டனர். பரந்துபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு மனமுவந்து ஆதரவு நல்கினர்.

உயர்வடிவம் பெற்ற ஆயுதப் போராட்டம்

எழுபதுகளின் தசாப்தம், சிங்கள-தமிழ் தேசிய முரண்பாட்டை என்றுமில்லாதவாறு முதிர்ச்சியடையச் செய்தது. அரச ஒடுக்குமுறையின் தீவிரமான அழுத்தம், தமிழீழத்தில் அரசியல் வன்முறையை அலைமோதச் செய்தது. இந்த அரசியல் வன்முறையால் எழுந்த புறநிலைகள் ஒரு பலம் வாய்ந்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்தைப் பிறப்பெடுக்கச் செய்தது. அரச ஒடுக்குமுறை மேலும் மேலும் தீவிரமடைந்து செல்ல, ஆயுத எதிர்ப்பு முறையும் தீவிரமடைந்து சென்றது. பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் வளர்ந்து விரிவடைய, மிதவாதப் பாராளுமன்ற அரசியல் செயலிழந்து போனது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தசாப்தம் தமிழரின் அரசியற் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக உயர்வடிவம் பெறச் செய்ததுடன், தன்னாட்சி உரிமையை நிலைநாட்டித் தமிழீழத் தனியரசை நிறுவும் வரலாற்றுத் தேவையையும் வெளிப்படுத்தியது.

எண்பதுகளின் தசாப்தம்

வரலாறு காணாத வன்முறைப் பூகம்பங்கள் இலங்கைத் தீவை உலுப்பிய காலகட்டமாக, எண்பதுகளின் தசாப்தம் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் மூர்க்கம் கொண்டு எழுந்த அரச ஒடுக்குமுறைக்கு எதிராகச் சீற்றம்கொண்டு எழுந்த புலிகளின் எதிர்ப்பியக்கம், சூறாவளி வேகத்தில் உக்கிரமடைந்தது.

இந்தத் தசாப்தத்தில் தமிழீழம் என்றுமில்லாதவாறு இரத்தம் சிந்தியது. சிங்களப் படையெடுப்புக்களும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும், உள் ஊர்க் கூலிப்படைகளின் அராஜகமுமாகத் தமிழீழ மண் ரண களமாகியது.

மிகக் கொந்தளிப்பான இந்தக் காலகட்டத்தில், புயலின் மையமாக நின்று எல்லா எதிர்ப்புக்களுக்கும் ஈடுகொடுத்து, தமிழரின் வீர விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் பிரபாகரன். ஆகவேதான் இந்தத் தசாப்தத்தின் மாமனிதனாக, வரலாற்றுக் கதாநாயகனாகப் பிரபாகரன் கருதப்பட வேண்டியவர்.

இராணுவ, அரசியல், ராஜதந்திரப் பரிமாணங்களில் பல திருப்புமுனைகளை எடுத்த இந்தப் பத்தாண்டு வரலாற்றில், புலிகள் இயக்கம் பல சிக்கலான சவால்களுக்கு முகம்கொடுத்தது. இதில் இந்தியத் தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது. 1983 நடுப்பகுதியில் ராஜதந்திரக் குறுக்கீடாக ஆரம்பித்து, 1987 ஒக்ரோபரில் நேரடி இராணுவ ஆக்கிரமிப்பாகப் பூதாகரமெடுத்து, 1990 மார்ச் வரை நீடித்த இந்திய வல்லாதிக்கத் தலையீட்டைத் தனித்து நின்று எதிர்த்து, ஈற்றில் வெற்றி கொண்டமை புலிகள் இயக்கத்தின் மகத்தான வரலாற்றுச் சாதனையாகும்.

ஒரு மாபெரும் வரலாற்றுச் சக்தியாக வளர்ந்து, இக்காலகட்டத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் புலிகள் இயக்கமே நிர்ணயித்தது. இதனை இக்கட்டுரையில் முழுமையாக மீளாய்வு செய்வது கடினம். எனினும் சுருக்கமாகப் பார்ப்போம்.

யாழ் நகரம் தீவைப்பு

எண்பதுகளின் ஆரம்பம், கூட்டணியின் இனத்துரோகப் படலமாகவும், சிங்களப் பேரினவாதத்தின் இன ஒழிப்பு வன்முறையாகவும் தொடங்கியது. தமிழீழத் தனியரசு அமைப்பதற்குத் தமிழ் மக்களிடம் ஒப்புதல் பெற்றுக் கொழும்புப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்ட கூட்டணி, மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்கும் அளவிற்குக் கீழிறங்கியது. இந்த மாவட்ட சபைத் தேர்தலுக்கு முதல்நாள் இரவு, 1981 மே 31ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆயுதப் படைகள் வெறியாட்டம் ஆடி, யாழ். நகரைத் தீயிட்டுக் கொளுத்தின. யாழ். நூல் நிலையமும், அதிலிருந்த வரலாற்றுக் கலாச்சாரப் பொக்கிசங்களும் தீவைத்து அழிக்கப்பட்டன. ஜெயவர்த்தனாவின் மூத்த அமைச்சர்களான சிறில் மத்தியூவும், காமினி திசநாயக்காவும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த நாசவேலையைச் செய்து முடித்தனர். யாழ்ப்பாணத் தீவைப்பை அடுத்துச் சரியாக மூன்று மாதங்களின் பின்னர், இலங்கைத் தீவு பூராகவும் தமிழருக்கெதிரான இனக்கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கில் தமிழர் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.

புலிகளின் தாக்குதல்கள்

அரச வன்முறை தீவிரமாக, விடுதலைப் புலிகளின் ஆயுத எதிர்ப்பியக்கமும் அதிதீவிரமடைந்தது.

1981 ஒக்ரோபர் 15ஆம் திகதி, சார்ள்ஸ் அன்ரனி (சீலன்) தலைமையில் விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையணி ஒன்று யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் இராணுவ ஜீப் வண்டி ஒன்றைத் தாக்கி இரு இராணுவத்தினரை அழித்தது. சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய முதலாவது கெரில்லாத் தாக்குதல் இதுவாகும்.

1982 யூலை 2ஆம் திகதி, நெல்லியடியில் ரோந்து சென்ற பொலீஸ் ஜீப் வண்டி மீது திடீர்த் தாக்குதலை நடாத்திய புலிகள், நான்கு பொலீஸாரைக் கொன்றனர்.

1982 ஒக்ரோபர் 27ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் கெரில்லா அணி ஒன்று சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது வெற்றிகரமான தாக்குதலை நடாத்தியது. இந்தத் தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர்; மூவர் படுகாயமடைந்தனர். பொலீஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்விதம் எண்பதின் ஆரம்பத்தில் முனைப்புற்ற புலிகளின் ஆயுத எதிர்ப்பியக்கம், 1983இல் மேலும் தீவிரமடைந்தது.

மகத்தான அரசியல் வெற்றி

இது இவ்வாறிருக்க, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டமாக அதிகாரப் பரவலாக்கத்தின் அத்திவாரமாகக் கூட்டணியால் சிங்கள அரசிடமிருந்து பெறப்பட்ட மாவட்ட சபை அதிகார வறுமையால் செயலிழந்து, செத்துப் போனது. இந்த நிலையில் 1983 மே 18ஆம் திகதி வடக்கில் உள் ஊராட்சித் தேர்தலை நடாத்துவதென அரசு அறிவித்ததும், தேர்தல் களத்தில் குதிக்கக் கூட்டணியும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளும் முன்வந்தன. வடக்கில் தாண்டவமாடும் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர். வடக்கில் அரசின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளின் எச்சரிக்கையை மீறித் தேர்தலில் குதிக்க முற்பட்டதால் இவர்களில் மூவரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். ஒரே நாளில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றதுடன், பல தமிழர்கள் ஐ.தே. கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்தனர். புலிகளின் தீவிர அரசியல் பிரச்சாரத்திற்குச் செவிசாய்த்த வடமாகாண மக்கள் உள் ஊராட்சித் தேர்தலைப் பூரணமாய்ப் பகிஸ்கரித்தனர். இந்தப் பகிஸ்கரிப்பு அரசியல் ரீதியில் புலிகளுக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாக அமைந்தது. புலிகளின் வேண்டுகோளை நிராகரித்துத் தேர்தலில் நின்ற கூட்டணியினர் சகிக்க முடியாத அவமானத்தைத் தேடிக் கொண்டனர். தேர்தலில் சந்தித்த தோல்வியுடன் கூட்டணி செல்லாக்காசாக மாறியது. இத்துடன் தமிழீழ அரசியல் அரங்கிலிருந்து கூட்டணியின் உதயசூரியன் நிரந்தரமாக அஸ்தமித்தது.

1983 யூலை நிகழ்வுகள்

தமிழர் வரலாற்றில் கொந்தளிப்பு மிகுந்த காலகட்டமாக 1983 யூலை மாதம் அமைந்தது. ஒரு சம்பவம் சங்கிலித் தொடராகப் பல நிகழ்வுகளை விளைவித்துப் பாரிய அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தி, போராட்ட வரலாற்றின் ஓட்டத்தை முனைப்புப்படுத்தும் வகையில் அமைந்ததென்றால், அது யூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல் சம்பவமாகும். சிங்களப் பேரினவாதத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தத் தாக்குதலில், 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த அதிரடித் தாக்குதலைத் திட்டமிட்டு அதில் பங்குகொண்ட பிரபாகரன், தனது கையால் ஏழு இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். தமிழீழத்தில் கூடிய தொகையில் சிங்களப் படையினர் கொல்லப்பட்ட முதற் சம்பவம் இதுவாகும்.
‘பயங்கரவாதத்தைப்’ பூண்டோடு அழிக்கப் போவதாக மாறி மாறி முழங்கிக் கொண்டிருந்த ஜெயவர்த்தனா அரசுக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.

புலிகள் இயக்கத்தின் தலைமையில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு திண்ணியமான வடிவத்தையும், காத்திரமான வளர்ச்சியையும் பெற்று வருகிறது என்பதைத் தமிழ் மக்களுக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் உணர்த்தியது.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் தென்னிலங்கையில் பரவிய போது, அதனைத் தமிழருக்கு எதிரான இனக்கிளர்ச்சியாக மாற்றிவிட்டுக் கொழும்பில் நிலைகொண்டிருந்த தமிழரின் பொருளாதார ஆதிக்கத்தை நாசமாக்கிவிட சிங்கள அரசு திட்டமிட்டது. அரசின் தூண்டுதலின் பேரில் யூலை 24ஆம் திகதியிலிருந்து தென்னிலங்கையில் வெடித்துப் பரவிய இனப் பூகம்பம், வரலாறு காணாத இரத்தக் களரியை உண்டுபண்ணியது. சிங்களக் காடையரின் காட்டுமிராண்டித்தனமான வன்முறை முழு உலகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆறாவது சட்டத் திருத்தம்

இந்த இனத்துவேச வன்முறையானது தமிழ், சிங்கள தேசங்களை என்றுமில்லாதபடி பிளவுபடுத்தியது. தமிழ்த் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் தனியரசுப் போராட்டத்திற்கு என்றுமில்லாத உத்வேகம் பிறந்தது. இனவுணர்ச்சிப் பிரவாகத்தில் உந்தப்பட்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார்கள். தனியரசுப் போராட்டம் மேலோங்குவதைக் கண்டு பயந்த சிங்கள அரசு, அவசர அவசரமாக அரசியலமைப்பில் ஆறாவது திருத்தம் ஒன்றை அமுல்படுத்தித் தமிழரின் தன்னாட்சி உரிமைக்குத் தடைவிதித்தது. இந்தத் தடை தனியரசுப் போராட்டத்திற்கு மேலும் உரமேற்றுவதாக அமைந்தது. இந்தச் சமயத்தில் பாராளுமன்றத்திலும் இருக்க முடியாது, தமிழீழத்திற்கும் திரும்ப முடியாது தத்தளித்த கூட்டணித் தலைவர்கள், தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர்.

இந்தியத் தலையீடு

இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிர வைத்த சம்பவங்களையும், அதன் வரலாற்றுப் போக்கினையும் உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு, யூலைக் கலவரத்துடன் இலங்கையில் தலையிட முடிவு செய்தது. இந்திய வல்லாதிக்கத்தை வெறுத்த ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஏகாதிபத்திய சார்புப் போக்கும், இலங்கையில் இந்தியப் பகைமைச் சக்திகளின் ஊடுருவலும் பாரத அரசுக்குச் சினத்தை மூட்டியது. அதே சமயம் ஈழத்தமிழர்கள் மத்தியில் மேலோங்கி வரும் தனியரசுப் போராட்டமும், அதனை முன்னெடுத்த புலிகளின் ஆயுத எதிர்ப்பு இயக்கமும் இந்திய உப கண்டத்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கலாம் எனவும் இந்தியா அஞ்சியது. எனவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கைத் தீவைத் தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இந்திய அரசு தீர்மானித்தது. இந்த நோக்கை நிறைவேற்ற இரகசியத் திட்டம் ஒன்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சினால் தீட்டப்பட்டது.

இந்த இரகசியத் திட்டத்தின்படி, தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்து, ஆயுத எதிர்ப்பியக்கத்தைத் தீவிரமாக்கி, ஜெயவர்த்தனா அரசுக்கு நெருக்குதலை உண்டுபண்ணி, ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர இந்தியா விரும்பியது. ஜெயவர்த்தனாவின் திமிரை அடக்கி அவரை வழிக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், தமிழீழ மக்களின் தனியரசுப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்தியா திட்டமிட்டது. ஏனைய அமைப்புக்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும், பயிற்சியும், பண உதவியும் அளித்து விட்டால் இராணுவ சமபலத்தை மாற்றியமைத்து, தனிநாட்டு இலட்சியத்தில் உறுதியுடன் நிற்கும் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவும் இந்திய அரசு கருதியது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை இந்திரா காந்தி அம்மையார், இந்திய உளவுப்படையான ‘றோ’வுக்கு (RAW) வழங்கினார்.

செயற்கையான வீக்கம்

1983 ஓகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய தாக்கங்களை விளைவித்தது. வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியில் உருவகம் கொண்டு வந்த தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம், இந்தியத் தலையீட்டினால் திடீரென ஒரு செயற்கையான வீக்கம் அடைந்தது. செய்வதறியாது செயலிழந்து போயிருந்த பல தமிழ்க் குழுக்கள், இந்தியாவின் இரத்தமூட்டலினால் உயிர்பெற்றெழுந்து நிமிர்ந்தன. படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் கண்மூடித்தனமான ஆட்சேர்ப்புக்கள் நடந்தன. இதனால் பல சமூக விரோத சக்திகள் இந்தக் குழுக்களுக்குள் ஊடுருவல் செய்ய முடிந்தது; இதன் விளைவாக ஒழுக்கம், கட்டுப்பாடு சீர்குலைந்தது.

சிறு அளவில் இந்திய உதவியைப் புலிகள் பெற்றுக் கொண்டாலும், இந்திய அழுத்தங்களுக்கு வளைந்துகொடாமல் தனித்துவமான போக்கிலும், இலட்சிய உறுதியிலும் இறுக்கமாக இருந்தனர். ஆனால் அனேகமான மற்றைய அமைப்புக்கள் எல்லாமே இந்திய உதவியில் மெய்மறந்து இந்திய எசமானுக்கு அடிமைப்பட்டன. இந்தியாவின் கூலிப்படை என்று ரெலோ இயக்கம் தன்னைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியது.

ஆயுதப் பயிற்சித் திட்டத்தை இந்திய மண்ணில் செயற்படுத்திக் கொண்டு, கொழும்பில் பேச்சுவார்த்தை நாடகம் ஒன்றையும் பாரத அரசு அரங்கேற்றியது. செத்துப் போயிருந்த கூட்டணித் தலைமைக்குப் புத்துயிர் கொடுத்து, சர்வகட்சி மாநாட்டில் தமிழரின் பிரதிநிதிகளாக அவர்களை மேடையேற்றியது. ஒருபுறம் தமிழ் இளைஞர்களைக் கூலிப்படைகளாகக் களத்தில் இறக்கி ஜே.ஆர். அரசுக்கு இராணுவ நெருக்குதலைக் கொடுத்து, மறுபுறம் கூட்டணியைத் தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பாவித்து, ஒற்றையாட்சியின் கீழ் அற்ப சொற்ப சலுகைகளுடன் ஒரு தீர்வைக் கொண்டுவர இந்திய அரசு முயன்றது. அரசியல் பாலைவனத்தில் ஒதுங்கிப் போயிருந்த கூட்டணித் தலைவர்களுக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக அமைந்தது. எனவே இந்திய இயக்குநர்கள் சொன்னபடி நடிப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தனர். எனினும் குறைந்தபட்ச சலுகைகளைத்தானும் கொடுக்க ஜே.ஆர். அரசு மறுத்ததால் 1983இன் இறுதியில் ஆரம்பித்த சர்வகட்சி மாநாடு சிறிது காலம் இழுபட்டுப் பின்னர் தோல்வியில் முடிந்தது.

1984ஆம் ஆண்டு தமிழீழம் பரவலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் அதிதீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும், தீர்க்கமாகவும் பலமுனைகளில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பல பொலீஸ் நிலையங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் வடக்கில் பொலீஸ் நிர்வாகச் சேவை சீர்குலைந்தது. மிகவும் நுட்பமான முறையில் புலிகளால் தயாரிக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகள், இராணுவத் தரப்பில் பலத்த உயிர்ச் சேதத்தை விளைவித்தன. இதனால் கொதிப்படைந்த இராணுவம், அப்பாவிப் பொதுமக்களைப் பழிவாங்கியது. திருக்கோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல கிராமியப் படுகொலைகள் இடம்பெற்றன. மக்களைக் கொன்றுவிட்டுத் தப்பிவிட முடியாது என்ற வகையில் புலிகளின் பதிலடித் தாக்குதல்கள் அமைந்தன. சிங்கள ஆயுதப் படைகளுடன் நேருக்கு நேர் நின்று சமர்புரியும் அளவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வளர்ச்சி பெற்று வருவதைக் கண்டு சிங்கள அரசு திகிலடைந்தது. புலிகளின் போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டம் முழுமையான ஆயுதப் போர் வடிவம் பெற்று வருவதை மக்கள் புரிந்து கொள்ளத் தவறவில்லை.

திம்புவில் பேச்சுவார்த்தை

புயலின் வேகத்துடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைவதைக் கண்டு இந்திய அரசு கலக்கமடைந்தது. சிங்கள இராணுவ இயந்திரம் சிதைக்கப்பட்டுத் தமிழரின் ஆயுத எதிர்ப்பியக்கம் வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டால், தனியரசு சாத்தியமாகும் சூழ்நிலை பிறந்துவிடுமென இந்தியா அஞ்சியது. போட்ட அழுத்தம் போதும், இனிப் போர் நிறுத்தம் செய்து, பேச்சுக்களை நடாத்தி, பிரச்சினையைத் தீர்ப்போம் என இந்திய அரசு 1985இன் ஆரம்பத்திலிருந்தே புலிகள் இயக்கம் மீது அழுத்தத்தைப் போட்டது.

இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் 1985 யூன் 18ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து யூலை முதற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பித்தன. கூட்டணி உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் பேச்சுக்களில் கலந்து கொண்டன.

தமிழரின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்திப் புலிகள் இயக்கம் திம்புப் பேச்சுக்களில் முன்வைத்த நான்கு கோட்பாடுகளை ஏனைய அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டு தன்னாட்சி உரிமைக் கோரிக்கையில் ஒரே நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டமை, இந்திய அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்துத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளதும், மற்றைய தமிழ் அமைப்புக்களதும் ஏகோபித்த கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாக திம்புப் பேச்சுவார்த்தைகள் சிக்கலடைந்த நேரத்தில், வவுனியாவில் சிங்கள இராணுவம் போர் நிறுத்தத்தை மீறி 200இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. இதனைக் கடுமையாக ஆட்சேபித்துப் புலிகளும், ஏனைய அமைப்புக்களும் திம்புப் பேச்சுக்களைப் பகிஸ்கரிக்க முடிவெடுத்தன. இந்திய அரசு பேச்சுக்களைத் தொடர வைக்கப் பகீரத முயற்சி செய்தும், திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்தன. பேச்சுக்கள் முறிவடைந்ததைத் தொடர்ந்து தமிழீழத்தில் விடுதலைப் போர் உக்கிரமடைந்தது; விடுதலைப் புலிகள் தொடர்ந்து வீரசாதனைகள் புரிந்தனர்.

இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள்

தன்னாட்சி உரிமைப் பிரச்சினையில் தமிழமைப்புக்கள் புலிகளோடு ஒன்றுசேர்ந்து ஒரே குரலெழுப்பியதும், திம்புப் பேச்சுக்கள் முறிந்ததும், தொடர்ந்தும் புலிகள் இயக்கம் ஆயுதப் போரில் முன்னணிப் படையாக நின்று சிங்கள இராணுவத்தின் முதுகெலும்பை முறித்து வருவதும் இந்திய அரசுக்குச் சினத்தைக் கொடுத்தது. தமிழ் அமைப்புக்கள் மத்தியில் ஒற்றுமையைக் குலைத்து, மோதல்களை உண்டுபண்ணி, புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, கடுகதியில் முன்னேறிச் செல்லும் ஆயுதப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசு சதி செய்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்கிப் புலிகளை மோதி அழிக்கத் தூண்டிவிட்டது. இதற்கிடையில் சிங்கள அரசு புளொட் தலைமையுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திப் புலிகளை அழிக்கும் இன்னொரு சதியில் ஈடுபட்டது. இப்படியாகத் தமிழ்க் குழுக்கள் இந்திய-சிங்கள அரசுகளின் சூத்திரதார சூழ்ச்சிவலைக்குள் சிக்குப்பட்டுப் புலிகளுடன் மோதுவதற்குத் துணிந்தன. தேசிய விடுதலைப் போராட்டத்திலோ, அன்றித் தமிழீழ மக்களின் நலனிலோ எவ்வித அக்கறையும் காட்டாது, முற்றுமுழுதாக சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த ஆயுதக் குழுக்கள், இந்திய ஏகாதிபத்தியத்தினதும், சிங்களப் பேரினவாதத்தினதும் சூழ்ச்சிக்குப் பலியாகி, தமிழரின் விடிவுக்காக இரத்தம் சிந்திக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை அழிக்க முற்பட்ட போது, புலிகளும் தற்காப்பு யுத்தத்தில் குதிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1986 மே மாதம் ரெலோ இயக்கத்துடனும், நொவெம்பர் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும் மோதல்கள் நிகழ்ந்து, இவ்விரு இயக்கங்களும் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டன. புளொட் இயக்கம் தடைசெய்யப்பட்டு அவர்களது செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. எட்டப்பர் கோஸ்டிகளுக்கு எதிராகப் புலிகள் ஈட்டிய வெற்றி, தமிழீழச் சுதந்திரச் சுடரை அணைந்து போகாமல் பாதுகாத்தது. இந்தியாவின் கூலிகளாக மட்டுமன்றி, மக்கள் விரோத சக்திகளாகவும் செயற்பட்ட இந்த அமைப்புக்கள் செயலிழந்து போக, தமிழீழத்தில் தலைவரித்தாடிய அராஜகமும் நின்று போயிற்று.

எதிரி அமைப்புக்களின் பகை முரண்பாடுகள் நீங்கியதால் தமிழீழத்தில் புலிகள் இயக்கத்தின் மேலாதிக்கம் வளர்ந்தது. சிங்கள இராணுவத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்றுமில்லாத முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பலமுனைகளில் வெடித்த புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் முகாமுக்குள் முடங்கியது. யாழ்ப்பாணக் குடாநாடும், வடக்கின் பெரும் பகுதிகளும் விடுதலைப் புலிகளின் பெரும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாறின. சிங்கள அரசு தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு

தனது சதித்திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகி, புலிகள் இயக்கத்தின் மேலாதிக்கம் மேலோங்கி வந்தமை இந்திய அரசுக்கு திகைப்பைக் கொடுத்தது. சிங்கள இராணுவத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுத் தமிழீழ மண் படிப்படியாகப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து கொண்டிருப்பதையும் இந்திய அரசால் ஜீரணிக்க முடியவில்லை. நான்கு ஆண்டு காலமாக நடாத்திய அரசியல், ராஜதந்திர சுழியோட்டங்களினாலும், சூழ்ச்சிகளாலும் எவ்வித பயனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பாரதம், நேரடி இராணுவத் தலையீடுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தது. புலிகளின் ஆயுதப் போராட்ட நெருக்குதலால் ஆட்டம் கண்டிருக்கும் சிங்களக் கிழட்டு நரி, இந்திய இராணுவத் தலையீட்டை எதிர்க்காது என்றும் புதுடில்லி கணிப்பிட்டது. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து விடும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடும், சிங்கள இராணுவத்தைப் பலிகொடாமல் இந்தச் சாதனையைச் சாதித்து விடலாம் என நப்பாசை கொண்ட ஜெயவர்த்தனா, இந்திய ஆதிக்கத்திற்கு அடிபணிய முடிவு செய்தார். 1987 யூலை 29ஆம் திகதி ராஜீவ் – ஜே.ஆர். ஒப்பந்தம் கைச்சாத்தியது. இந்தியாவின் பூகோள நலன்களையே பிரதான நோக்காகக் கொண்ட இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க, ரஸ்ய வல்லரசுகளின் ஆசீர்வாதமும் கிடைத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர வெற்றி என இந்தியப் பாராளுமன்றமும், இந்தியப் பத்திரிகை உலகமும் ஒப்பந்தத்தைப் புகழ்ந்தன. கூட்டணி தொடக்கம் தமிழ் அமைப்புக்கள் எல்லாமே ஒப்பந்தத்திற்குப் புகழாரம் சூட்டின. தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே ஒப்பந்தத்தை எதிர்த்தனர். தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்காக, தமிழ் மக்களின் கௌரவத்திற்காக இந்திய வல்லரசுடன் முரண்பட்டு நிற்கத் துணிந்தனர்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கெதிராகப் புலிகள் போர்

இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியின் விளைவாக, இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே யுத்தம் வெடித்தது. ஆயுதக் களைவு என்ற போர்வையில் இந்திய அமைதிப் படை புலிகளுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கியது. இந்த யுத்தம் தமிழீழ மக்களுக்கு எதிரான போராக விஸ்வரூபம் பெற்றது.

1987 ஒக்ரோபர் 10ஆம் திகதி ஆரம்பமான இந்திய-புலிகள் யுத்தம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்களைக் களத்தில் இறக்கிப் புலிகளை அழித்துவிட இந்திய அரசு பகீரத முயற்சிகளை எடுத்தது. புலிகளை ஆதரித்து நின்ற அப்பாவித் தமிழ் மக்களையும் இந்திய அரசு பழிவாங்கியது. இந்திய இராணுவத்தின் அசுரத்தனத்திற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் பலியானார்கள்.

தமிழீழம் முழுவதையும் முற்றுகையிட்டு நின்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் ஆக்ரோசத்துடன் சமர்புரிந்தனர். அலை அலையாக எழுந்த படையெடுப்புக்களை எல்லாம், மலை போன்ற உறுதியுடன் எதிர்த்துப் போராடினர். விடுதலைப் புலிகளின் அலாதியான துணிவும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இந்திய இராணுவத்தைத் திகைக்க வைத்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை உயிர்ப்பலி கொடுத்தும் புலிகளை வெற்றி கொள்ள முடியாது போகவே, இந்திய இராணுவத்தின் மனவுறுதி தளர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே என்றுமே சந்தித்திராத நீண்ட, கடினமான ஒரு யுத்தத்தில் குதித்தும், பெரிய உயிர்ச்சேதத்தைச் சந்தித்தும் தனது இராணுவ கேந்திர இலக்குகளை அடைய முடியாமல் இந்திய அரசு திணறியது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகொள்ள முடியாத போது, அரசியல் ரீதியில் அந்நியப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தில் போலியான ஒரு மாகாண சபைத் தேர்தலை அரங்கேற்றித் தனது கூலிகளை இந்திய அரசு பதவியில் ஏற்றியது. அப்படியிருந்தும் மக்களின் ஆதரவு இல்லாததால் மாகாண சபை நிர்வாகம் செயற்படவில்லை.

ஒட்டுமொத்தத்தில், இந்தியத் தலையீடு தமிழீழத்தில் தோல்வியைச் சந்தித்தது. ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தம் செயலிழந்து, செத்துப் போனது. எனினும் இந்திய இராணுவம் தொடர்ந்தும் தமிழீழத்தில் நிலை கொண்டிருந்தது.

சிறீலங்கா-புலிகள் பேச்சுக்களும், இந்தியப் படை வெளியேற்றமும்

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிரேமதாசா, 1989இன் ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். வட-கிழக்கில் முடிவில்லாமல் தொடரும் யுத்தமும், தென்னிலங்கையில் ஜே.வி.பியின் கிளர்ச்சியுமாக வன்முறைச் சுவாலைகள் இலங்கைத்தீவு முழுவதிலும் பரவியிருந்தன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தைச் சாக்காக வைத்து, வட-கிழக்கில் இந்திய இராணுவம் நிரந்தரமாக நிலைகொண்டிருக்கலாம் எனப் பிரேமதாசா அஞ்சினார். ஜே.வி.பியினரும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான கோசத்தை முன்வைத்தே கிளர்ச்சியை நடாத்தி வந்தார்கள். எனவே விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடாத்தி, இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட வேண்டுமெனப் பிரேமதாசா விரும்பினார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் எனப் புலிகளும் விரும்பியதால், பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தனர். நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுக்கள் சுமுகமாக நடைபெற்றன. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பிரேமதாசா அரசு புலிகளுடன் கைகோர்த்து நின்றமை, ராஜீவ் அரசுக்குச் சினத்தைக் கொடுத்தது. சிங்கள இராணுவத்திற்கு முண்டுகொடுத்து, சிறீலங்கா அரசின் நலனுக்காக இந்திய ஜவான்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், பிரேமதாசா அரசு புலிகளை அரவணைத்து நிற்பது இந்தியாவுக்கு அவமானத்தையும், ஆத்திரத்தையும் கொடுத்தது. புலிகளின் விவேகமான ராஜதந்திர காய்நகர்த்தலால் இந்திய-இலங்கை உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார். இலங்கையின் அழைப்பின் பேரில் அமைதி காக்க வந்ததாகக் கூறிவந்த இந்திய அரசுக்கு, நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு, முகத்தில் கரிபூசியபடி இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது.

எத்தனையோ திட்டங்கள் வகுத்து, எத்தனையோ அரசியல், ராஜதந்திர நாடகங்களை அரங்கேற்றி, எத்தனையோ கோடி பணத்தை செலவளித்து, எத்தனையோ ஜவான்களின் உயிரைப் பலிகொடுத்து, இறுதியில் வெறும் கையுடன், எதிர்பார்த்தது கைகூடாமல், அவமானப்பட்டு வெளியேறுவதை இந்தியாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இந்திய இராணுவத் தலையீட்டின் படுதோல்வி

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட போது சோவியத் யூனியன் கையாண்ட யுக்தியை இந்தியா கடைப்பிடிக்க முனைந்தது. புலிகளிடமிருந்து தனது பொம்மை ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு கூலி இராணுவத்தை உருவாக்க இந்தியா முயன்றது. ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ என்ற பெயரில் இந்த இராணுவம் அமைக்கப்பட்டது. பலவந்தமாகத் தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் வேட்டையாடிப் பிடித்து, பயிற்சி அளித்து, பெருந்தொகையில் நவீன ரக ஆயுதங்களை வழங்கிப் புலிகளுக்கு எதிரான ஒரு படை திரட்டப்பட்டது. பெருமாளின் மாகாண சபை நிர்வாகத்திற்குப் பாதுகாப்பு அரணாக இந்தப் படையை உருவாக்கிவிட்டு, இந்திய இராணுவம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் படிப்படியாக வெளியேறியது.
இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் புலிகள் வசம் வீழ்ந்தன. இலட்சிய உறுதியும், போர் அனுபவமும், வீரமும் மிகுந்த புலிப்படை வீரரின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையானோர் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். மாகாண சபை கவிழ்ந்தது. பெருமாளும், அவரது சகாக்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இந்திய அரசின் இறுதித் திட்டமும் தவிடு பொடியாகியது.

எண்பதுகளின் இறுதி ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வெளியேற்றத்துடனும், ‘தமிழ்த் தேசிய இராணுவத்தின்’ வீழ்ச்சியுடனும் முடிவடைந்தது. இந்திய இராணுவத் தலையீடு தோல்வியில் முடிந்ததால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எழுந்த மிகப்பெரிய ஆபத்து நீங்கியது. இந்திய வல்லாதிக்கம் விடுத்த பெரியதொரு சவாலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தில் அநியாயமாகத் தலையிட்டதன் கசப்பான வரலாற்றுப் பாடத்தை இந்திய அரசு கற்றுக் கொண்டது. இந்திய இராணுவப் பூதத்தைத் தனித்து நின்று எதிர்த்து வெற்றிகொண்டதால், உலகத்தின் தனிச்சிறந்த போராட்ட சக்தியாகப் புலிகள் இயக்கம் புகழைத் தேடிக் கொண்டது.

பேச்சுக்களில் சிக்கலும், தமிழீழ-சிறீலங்கா போரும்

இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து கொழும்புப் பேச்சுக்களில் சிக்கல் எழுந்தது. பிரேமதாசா அரசின் போக்கிலும், அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்திய வல்லாதிக்க ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, ஜே.வி.பி. இயக்கமும் அழிக்கப்பட்டதால் திமிர்கொண்ட பிரேமதாசா அரசு, தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் வைக்காமல் தட்டிக்கழிக்க முற்பட்டது. தமிழரின் தன்னாட்சி உரிமைக்குத் தடைவிதித்த அரசியலமைப்பின் ஆறாவது சட்டத்திருத்தத்தை நீக்கிவிட வேண்டுமெனப் புலிகள் விடுத்த கோரிக்கையையும் அரசு அசட்டை செய்து வந்தது. அதே சமயம் எந்தத் தீர்வுக்கும் முன்நிபந்தனையாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென அழுத்தங்களும் போடப்பட்டன. இதனால் அரசுக்கும், புலிகளுக்கும் முரண்பாடு எழுந்தது.

ஜே.வி.பி. இயக்கம் என்ற போர்வையில் ஐம்பதுனாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களைக் கொன்றுகுவித்த சிங்கள ஆயுதப் படைகள், புலிகளையும் அழித்துவிடலாமெனக் கர்வம் கொண்டன. தமிழீழத்தில் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்த சிங்கள இராணுவத்திற்கு, வரிப்புலிகள் கம்பீரமாகப் பவனி வருவதையும், புலிக்கொடிகள் எங்கும் வானுயரப் பறப்பதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கில் சிங்களப் பொலீஸாரின் அட்டகாசங்களும், வடக்கில் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் மோதல்களாக உருவெடுத்து, இறுதியில் யுத்தமாக வெடித்தது.

தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில் வரலாறு காணாத மாபெரும் மோதலாக வெடித்திருக்கும் முழு அளவிலான யுத்தத்துடன், தொண்ணூறுகளின் புதிய தசாப்தம் ஆரம்பமாகியது.

பல வரலாற்றுத் திருப்புமுனைகளையும், யுக நிகழ்வுகளையும் கொண்டதாக அமைந்த கடந்த இரு தசாப்தங்களின் சரித்திரம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் படிமுறை வளர்ச்சியோடும், எழுச்சியோடும், போராட்டத்தோடும் இழையோடி நிற்பதைப் பார்த்தோம். இந்த வரலாற்று ஓட்டத்தில் புலிகள் இயக்கம் தமிழரின் சுதந்திர எழுச்சியின் புரட்சிவடிவமாக வளர்ச்சி கண்டதோடு, விடுதலைப் போராட்டத்தையும் தீர்க்கமான பாதையில் முன்னடையச் செய்தது.

எமது தேசிய வாழ்வுக்கு அடித்தளமானதும், சுதந்திரத் தனியரசுக்கு அத்திவாரமானதுமான எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் முயற்சியில் புலிகள் இயக்கம் மாபெரும் சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறது. தொடர்ச்சியான, திண்ணியமான, வீரம்செறிந்த போராட்டத்தின் பயனாக, இன்று தமிழீழத்தின் பெரும் பகுதி நிலப்பரப்பு புலிகளால் மீட்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக இந்திய இராணுவங்களின் ஆக்கிரமிப்புக் களமாக இருந்து வந்த இந்தப் பகுதிகள், இன்று தமிழரின் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது, எமது போராட்டத்தின் பெரியதொரு முன்னடைவாகவே கருதப்பட வேண்டும்.

பிரபாகரனின் சொந்த முயற்சியாலும், செயற்திறனாலும் இன்று தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாக ஒரு பலம்வாய்ந்த விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மரபுவழி யுத்த முறைகளில் கைதேர்ந்ததாகத் தமிழர் படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பது, எமது போராட்ட வரலாற்றில் வளர்ச்சியை நோக்கிய பெரும் திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது.

அற்புதமான தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் நிறைந்த புலிகளின் போராட்டம், தமிழர் மத்தியில் என்றுமில்லாதவாறு தேசாபிமான உணர்வையும், விடுதலைப் பற்றையும் ஊட்டியிருக்கிறது. பரந்துபட்ட பொதுமக்களை சாதிய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபடுத்தி, ஒரே தேசிய சக்தியாகக் கட்டி எழுப்பிய சாதனையும் புலிகளையே சாரும்.

இன்று எமது போராட்டம் தென் ஆசியக் கண்டத்தில் முதன்மை பெற்ற தேசிய விடுதலைப் போராட்டமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. போர்த்திறனிலும், இலட்சிய உறுதியிலும், தியாகச் சிந்தனையிலும் ஈடிணையற்றதாகத் திகழும் புலிகளின் தன்னாட்சி உரிமைப் போர், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலை இராணுவத்தின் தோற்றமும், தாயக மீட்புப் போரில் ஈட்டிவரும் மகத்தான சாதனைகளும், எதிரி இராணுவம் எதிர்கொள்ளும் பேரிழப்புக்களும் தமிழீழ மக்களுக்கு என்றுமில்லாத ஒரு நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் மீது ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புதிய தசாப்தத்தினது வரலாற்றுப் படைப்பாளிகளாகத் திகழப் போகும் விடுதலைப் புலிகள், தமிழர் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டித் தமது புனித இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இரண்டு தசாப்தங்களும், புலிகளும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments