×

அர்த்தமும் அபத்தமும்

பிரஞ்சு இருப்பியவாதிகளில் அல்பேர்ட் கம்யூ (Albert Camus, 1913-1960) ஒரு வித்தியாசமான மனிதர். அவரது உலகப் பார்வையும் வித்தியாசமானது. தான் ஒரு இருப்பியவாதி என்பதை அவர் மறுத்து வந்தார். ஆயினும் இருப்பியத் தத்துவத்தின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் கருதப்பட்டார்.

கம்யூவை ஒரு தத்துவாசிரியர் எனச் சித்தரிக்க முடியாது. இருப்பியத் தத்துவம் பற்றி அவர் கனமான நூல்களை எழுதவில்லை. சொற்பமாக, சுருக்கமாக இரு மெல்லிய நூல்களில் தனது தத்துவப் பார்வையை விளக்கினார்.

அவர் ஒரு எழுத்தாளர். இலக்கியப் படைப்பாளி. நாவல்கள், நாடகங்கள், சிறு கதைகளாகத் தனது வாழ்வனுபவத்தை எழுத்தில் வடித்தார். இளம் வயதில், 44ஆவது வயதில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.

அபத்தமான உலகில், அர்த்தமற்று வாழும் அபத்த நாயகனாக (Absurd Hero) அவர் மனிதனைக் கண்டார். இந்த அபத்த மனிதனின் அவலமான, அர்த்தமற்ற வாழ்வுபற்றி ஆக்ரோஷத்துடன் எழுதினார்.

கடவுள் இல்லாத உலகத்தில், நிச்சயமற்றதான வாழ்வில் மனித இருப்பிற்கு அர்த்தமென்ன? வாழ்வின் அர்த்தத்தைக் கண்டு கொள்ளாமல் வாழ்வதில் என்ன அர்த்தமுண்டு?

இந்தப் பிரபஞ்சம் மனிதனைப் படைத்திருக்கிறது. ஒரு விந்தையான பிராணியாக, விழிப்புள்ள ஜீவனாக, எதையும் விசாரித்தறியும் விவேகமுடையவனாக மனிதனை சிருஷ்டித்திருக்கிறது. இந்த அற்புதமான மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டான்? இந்தப் படைத்தலின் குறிக்கோள் என்ன? பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் மத்தியிலான உறவு எப்படியானது?

மனிதன் விடைதேடி அலைகிறான். தெளிவுபெற விழைகிறான். ஆனால் மனிதனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிய, அறிய, அறியாமை மேலோங்குகிறது. அபத்தத்தின் அலங்கோலம் தெரிகிறது. புரியப் புரிய, உலகம் புதிராக மாறுகிறது. தத்துவத் தேடல்களும், விஞ்ஞான விசாரணைகளும் மனிதனுக்கு உண்மையைக் காட்டவில்லை. வாழ்வின் அர்த்தத்தை விளக்கவில்லை. பொய்மையின் சிதைவுகளாக, எங்கும் எல்லாம் அபத்தத்தின் அசிங்கமான முகம்தான் தெரிகிறது.

நான் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்த உலகம் எனக்குப் பரீட்சயமானது. இந்த மலையும், மரமும், கடலும், அலையும், நீலவானமும், நிலவும் நான் சதா சந்தித்துக் கொள்பவை. இந்தப் பூமி என்னைத் தோள் மீது சுமந்து திரிகிறது. நான் இந்த உலகத்தின் கனிகளைப் புசித்து வாழ்பவன். கணத்திற்குக் கணம் நான் விழுங்கும் இந்தக் காற்றில் எனது உயிர் தொங்கி நிற்கிறது. இந்த உலகம்தான் எனது இருப்பிற்கு ஆதாரம். நான் இருப்பாக உயிர்த்து நிற்கிறேன். வாழ்வின் தீயாக எரிந்து கொண்டு இந்த உலகத்தின் மீது இச்சை கொண்டு நிற்கும் என்னை இந்த உலகம் ஒதுக்கிவிடுகிறது. எனக்குப் பாராமுகம் காட்டுகிறது. பற்றற்றதாக நிற்கிறது. என்னிலிருந்து அந்நியப்பட்டதாக மௌனமாக நிற்கிறது. நான் வேர் அறுபட்டவனாக விழுந்து கிடக்கிறேன். எனது தேடுதல் பற்றியும், தடம் தெரியாது நான் எழுப்பும் அவல ஓலம் பற்றியும் இந்த உலகம் எவ்வித அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை.

உணர்வற்ற, இலக்கற்ற, அர்த்தமற்ற உலகமும், உணர்வுள்ள, அறிவுள்ள, அர்த்தம் தேடும் மனிதனும், இரு துருவங்களாக, உறவு முறிந்து, ஒத்திசைவு இழந்து, முரண்பட்டு நிற்கும் இந்த வாழ்வு அர்த்தமற்றது.

விடிகிறது. தினமும் விடிகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்று மாறி, மாறி, தொடர்ச்சியாக விடிகிறது. விடியலுடன் நானும் விழித்துக் கொள்கிறேன். தினமும் தூங்குவதும், விழிப்பதும் வேலைக்கு ஓடுவதுமாக முடிவில்லாமல் நானும் விரைகிறேன். அதே வேலை. பழக்கப்பட்ட, வழக்கமான அதே வேலை. சலிப்புத் தட்டத்தட்ட, இயந்திரமாக இயங்கி, இயங்கி, அதே வேலை. என்னோடு சேர்ந்து மற்றவனும் என்னைப் போல உழல்கிறான். அதே காலை, அதே பாதை, அதே வேலை. திரும்பத் திரும்பப் பார்த்து அலுத்துப் போன அதே முகங்கள். நாட்கள் ஓடுகின்றன. நானும் ஓடுகிறேன். அர்த்தமில்லாமல், மீண்டும், மீண்டும், அதே வினையில், அதே விளைச்சலில் நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

இயந்திர உலகில் வாழும் நவயுக மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும், அவசர வாழ்வும் அபத்தமானது என்கிறார் கம்யூ. கிரேக்க இதிகாசத்துப் பாத்திரமான சிசைப்பஸை (Sisysphus) இந்த அசட்டுத்தனமான உழைப்பின் குறியீட்டுச் சின்னமாக சித்தரித்துக் காட்டுகிறார்.

தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாகிறான் சிசைப்பஸ். சாபம் கிடைக்கிறது. தண்டிக்கப்படுகிறான். மலையடிவாரத்திலிருந்து மலையுச்சிக்கு ஒரு கற்பாறையை தள்ளிச் செல்லும் கடூழியத் தண்டனை. பாறையை மேல்நோக்கி அவன் தள்ளிச் செல்ல, அந்தப் பாறை அதன் பழுவில் கீழ்நோக்கி உருண்டு விழுகிறது. தொடர்ச்சியாக, முடிவில்லாமல் முயற்சிக்கிறான். அவனது பகீரத முயற்சி, பயனற்ற முயற்சியாக மாறுகிறது. அர்த்தமற்ற, அசட்டுத்தனமான ஊழியம் செய்ய அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சோர்ந்து போகாமல், இடிந்து போகாமல், தெய்வங்களை சினந்தவாறு, அவன் முடிவில்லாமல் முயற்சிக்கிறான். இந்த சிசைப்பஸ் கம்யூவின் அபத்த நாயகன். தற்கால மனிதனின் அபத்தத்தைக் குறியீடு செய்யும் அக்காலத்து இதிகாச மனிதன்.

அபத்த நாயகனாகச் சித்தரிக்கப்படும் சிசைப்பஸிடம் ஒரு அபூர்வமான குணவியல்பைக் காண்கிறார் கம்யூ. தாங்கமுடியாத துயரிலும் தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவனிடம் இருக்கிறது. தனக்குக் கிட்டிய விபரீத வாழ்வு பற்றியும் விசித்திரமான தண்டனை பற்றியும் அவன் விரக்தி கொள்ளவில்லை. கலங்கவில்லை. தெய்வத்தின் சாபமாக, விதியாக, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக தன் மீது சுமத்தப்பட்ட பழுவை, அபாரமான பொறுமையுடன் அவன் சுமந்து செல்கிறான். தனது வாழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் விழிப்புணர்வு அவனுக்கு ஏற்படுகிறது. துயரத்தின் அழுத்தத்தால் அவன் நசிபட்டுப் போகவில்லை. உறுதி தளராது தனது ஊழியத்தைத் தொடர்ந்தான். எட்டமுடியாத சிகரத்தை நோக்கிய போராட்டத்திலும் அவனுக்கு ஒரு ஆன்ம திருப்தி இருந்தது என்கிறார் கம்யூ.

இந்தப் புராண காலத்து புனைக் கதையிலிருந்து நவீன யுக மனிதனுக்கு ஒரு அறநெறியை வரித்துக் காட்ட முனைகிறார் நூலாசிரியர்.

மனித வாழ்வு அபத்தமானது; துன்பம் நிறைந்தது; நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தளர்ந்து போய் விழுந்து விடாமல் எழுந்து நின்று வாழவேண்டும். வாழ்வில் அர்த்தமில்லை எனக் கண்டுகொள்ளும் போது சிலர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் அர்த்தமில்லாத போதும் வாழக்கையை வாழத்தான் வேண்டும். வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது. அபத்தத்திலிருந்து தப்பிக் கொள்ள தற்கொலையை நாடுவது பேடித்தனம். அது எவ்வகையிலும் நியாயமாகாது. கடவுள் இல்லாத உலகத்தில் மனிதன்தான் கடவுள். கடவுளிடமிருந்தோ, சுவர்க்கத்திலிருந்தோ மனித வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுகொள்ள முடியாது. மனித வாழ்வுக்கு மனிதனே அர்த்தத்தைக் கற்பிக்க வேண்டும். மனித செயலுக்கு மனிதனே அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுக்கு எட்டிய பார்வையுடன், தனக்குக் கிட்டிய வாழ்நிலையை ஏற்று அதில் திருப்தி கொண்டு, எட்டமுடியாத எதிலும் இச்சை கொள்ளாது வாழ முடியுமாயின் அந்த வாழ்வு அவனுக்கு அர்த்தமுடையதாக அமையும் என்கிறார் கம்யூ. அபத்தத்திலும் அர்த்தமின்மையிலும் அர்த்தத்தைக் காண்பதுதான் அர்த்தமான வாழ்வாக அமையும் என்பது அவரது கருத்து. Myth of Sisyphus என்ற அவரது தத்துவ நூல், மானிடத்திற்கு இந்தத் தரிசனத்தையே தருகிறது. வரண்டுபோன பாலைவனத்தின் மத்தியிலும் மனிதன் வாழ வேண்டும், உழைக்க வேண்டும், படைக்க வேண்டும் என்பதே இந்த நூலின் மையக் கருத்து என்கிறார் கம்யூ.

உருவகக் கதைகளாக அவர் நாவல்களைப் படைத்தார். குறியீட்டுப் புனைக்கதைகள் மூலம் தனது தத்துவக் கருத்துகளை அழுத்திச் செல்வது அவரது தனித்துவ வித்துவம். கதாபாத்திரங்களும் இரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் அல்லர். முகமற்ற கருத்துருவச் சித்திரங்கள்.

அந்நியன் (Stranger) என்ற அவரது முதலாவது நாவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அது ஒரு அபத்த மனிதனின் கதை.

வாழ்க்கையில் விரக்தி கொண்டு, தன்னில் வெறுப்புக் கொண்டு, சமூகத்தில் ஒரு அந்நியனாக அலைகிறான் அந்த இளைஞன். உணர்ச்சிகள் அவனிடம் செத்துப் போயிருந்தன. ஒரு தடவை, கடற்கரையோரம் ஒரு அரபு மனிதனை அவன் சுட்டுக் கொலை செய்கிறான். எதுவித காரணமுமின்றி, எதுவித நோக்கமுமின்றி, எதுவித உணர்வுமின்றி இந்தக் கொலையைச் செய்து விடுகிறான். காவல்துறையினர் அவனைக் கைது செய்து விசாரிக்கின்றனர். நடந்ததை ஒப்புக் கொள்கிறான். ஆனால் அந்த அர்த்தமற்ற செயலுக்கு அவனால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவன் ஒரு பயங்கர கொலைகாரனாகக் காணப்படுகிறான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

சிறையில், மரணத்திற்காகக் காத்திருக்கும்போது ஒரு குருவானவர் அவனைச் சந்திக்கிறார். குருவானவர் அவனை மனம் மாற்ற முனைகிறார். அழியாத ஆன்மா பற்றியும், அடுத்த உலகம் பற்றியும் சொல்கிறார். விசுவாசத்தால் அடுத்த உலகத்தில் விமோசனமுண்டு என்கிறார். அவனுக்கு ஆத்திரம் எழுகிறது. முதற் தடவையாக உணர்ச்சி வெளிப்படுகிறது. அந்த ஆவேச உணர்வுடன் அவனுக்கு ஒரு வெளிச்சம் ஏற்படுகிறது. அந்த வெளிச்சத்தில் சாவு பற்றிய தெளிவு பிறக்கிறது. சாவுடன் மனித வாழ்வு முற்றுப் பெறுகிறது என்ற ஞானோதயம் பிறக்கிறது. அந்த விழிப்புடன் வாழவேண்டும் என்ற தீவிர ஆசையும் பிறந்துவிடுகிறது. தூக்குக் கயிறு அவனுக்காகக் காத்திருக்கும்போது, சாவு கதவைத் தட்டும் போது, அவனுக்கு வாழ்வில் பற்று ஏற்படுகிறது. வாழவேண்டும் என்ற துடிப்பு ஏற்படுகிறது.

சாவு நிஜமானது. அடுத்த உலகமோ ஆதாரமற்றது. இந்த உலகமோ அபத்தமானது. ஆனால் வாழ்வுக்கு அர்த்தமுண்டு. வாழ்க்கையை வாழ்வதில்தான் அந்த அர்த்தமிருக்கிறது. இந்தக் கருத்தையே இந்த நாவலில் அழுத்திச் சொல்கிறார் கம்யூ.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது பிரான்ஸ் நாடு ஜேர்மனியின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. நாசிச ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் கிளர்ந்த பிரஞ்சு தலைமறைவு இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் கம்யூ. தலைமறைவு இயக்கத்தால் வெளியிடப்பட்ட Combat எனும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். போரும், சாவும், சிதைவும் அந்நியப் படையெடுப்பும் அதற்கு எதிரான போராட்டமுமாக அவர் பட்டுணர்ந்த அனுபவத்திலிருந்து Plague என்ற உருவக நூலையும், The Rebel என்ற தத்துவ நூலையும் எழுதினார்.

கொள்ளை நோய் (Plague) போரையும், சாவையும் குறியீடு செய்கிறது. சாவை எதிர்க்கும் மனிதனின் அர்த்தமற்ற எத்தனிப்பையும் உருவகப்படுத்துகிறது. ஓரான் என்ற அல்ஜீரிய கரையோரப் பட்டினத்தை கொள்ளை நோய் திடீரெனத் தாக்குகிறது. பட்டின வாசல்கள் அடைத்து மூடப்படுகின்றன. சாவின் முற்றுகைக்குள் பட்டினம். நோயை எதிர்த்துப் போராட பட்டினவாசிகள் அணிதிரட்டப்படுகின்றனர். மனிதனுக்கும் சாவைப் பரப்பும் எலிகளுக்கும் போராட்டம் நிகழ்கிறது. ஒருவரோடு ஒருவர் தொடர்பற்று, உறவற்று, தனித்திருந்த பாத்திரங்கள் ஒரு பொதுவான பேரழிவில் ஒன்று சேர்கின்றனர். பிரதான பாத்திரமாக ஒரு வைத்தியர், மற்றும் ஒரு பத்திரிகையாளர், ஒரு தீவிரவாதி, ஒரு அதிகாரி என்ற ரீதியில் வேறுபட்ட பார்வையுடைய வேறுபட்ட மனிதர்கள் ஒரு நாசகார சக்தியை எதிர்கொள்கின்றனர். மற்றவர்களைவிட வைத்தியர் மிகவும் அவதானமாக நடந்து கொள்கிறார். சாவைத் தடுத்து விட முடியாது; ஒத்திப் போடலாம். தப்பிப் பிழைப்பவர்கள் மீண்டும் சாவைச் சந்தித்துதான் ஆகவேண்டும் என்ற பிரக்ஞையுடன் பற்றற்றவராகப் பணி புரிகிறார். கொள்ளை நோயைக் கடவுளின் தண்டனையாக காண்கிறார் பாதிரியார். அசிங்கமான மனிதனைத் தூய்மைப்படுத்தும் திருக்கூத்தாக சாவு சம்பவிக்கிறது எனப் பிரசங்கம் செய்துவந்த அவரைச் சாவு தீண்டிவிடுகிறது. நாவலில் கதையில்லை. ஒரு நெருக்கடி நிகழ்கிறது. மனிதர்கள் சந்திக்கிறார்கள். வார்த்தைகள் பரிமாறப்படுகிறது. அவற்றில் எண்ணங்கள் தெறிக்கிறது. ‘கடவுள் இல்லாமல் ஒருவன் புனிதனாக முடியுமா? இதுதான் இன்று என்னை அழுத்தும் முக்கிய பிரச்சினை’ என்று ஒரு பாத்திரம் கேட்கிறது. ஆன்மீகமற்ற உலகில் அறம் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்புகிறார் கம்யூ. இறுதியில் நோய் தடுக்கப்படுகிறது. ஆனால் நோய்க் கிருமிகள் சாகவில்லை. அக் கிருமிகள் மீண்டும் மனிதரைத் தாக்கலாம். இரண்டாம் உலகப் போர் முடிந்துவிட்டது. ஆனால் போருக்குக் காரணமான விஷக்கருத்துகள் சாகவில்லை. நாசிசமாகவோ, பாசிசமாகவோ அல்லது வேறு எந்தச் சித்தாந்தமாகவோ அந்தக் கருத்துக் கிருமிகள் மானிடம் மீது பேரழிவை ஏற்படுத்தலாம். இதுதான் மானிடத்தின் துயரமான இருப்பு நிலையாக இந்த உருவக நாவலில் சித்தரிக்கப்படுகிறது.

கிளர்ச்சிக்காரன் (The Rebel) என்ற கம்யூவின் தத்துவ நூல் அரசியல் உலகத்தை விசாரணை செய்கிறது.

கம்யூ ஒரு சமூக சீர்திருத்தவாதி. அநீதிக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை அவர் ஆதரித்தார். கற்பனாவாதக் கருத்துக்களாக, சித்தாந்தத்திற்காக புரட்சி செய்வதை அவர் எதிர்த்தார். மதங்களையும், சர்வாதிகார அரசியற் சித்தாந்தங்களையும் அவர் கண்டித்தார்.

கடவுட் கோட்பாட்டில் எழுந்த மத நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மோதுகிறது. மதத்தின் பெயரால் மனிதன் மனிதனை அழித்து வருகிறான். கலவரங்கள் வெடிக்கின்றன. தெய்வத்தின் பெயரால் யுத்தங்கள் நிகழ்கின்றன. நீண்ட நெடுங்காலமாக, மத யுத்தங்களால் இந்தப் பூமியின் மடியில் இரத்த ஆறுகள் ஓடியிருக்கின்றன. நித்தியத்துவம் என்ற கற்பனாவாதக் கருத்திற்காக மானிடம் பிளவுபட்டு மோதித் தன்னையே சிதைத்துக் கொள்கிறது.

அரசியற் கருத்துலகிலும் வன்முறை வெடிக்கிறது. ஒரு கற்பனாவாதக் கருத்துக்காகப் புரட்சி வெடிக்கிறது. கருத்துப் போர் வர்க்கப் போராகி சமூகப் பிரளயங்கள் நிகழ்கின்றன. சித்தாந்தங்கள் யுத்தங்களில் முடிகின்றன.

கம்யூவின் இந்தத் தத்துவ நூல் மத சித்தாந்தங்களை மட்டுமன்றி, அன்றைய கம்யூனிச உலகையும் கடுமையாகச் சாடியது. இதனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரது நட்பை அவர் இழக்க வேண்டி நேர்ந்தது. நீண்ட கால நண்பராக இருந்த சாத்தர் கூட கருத்து முரண்பாட்டால் நட்பை முறித்துக் கொண்டார்.

அநீதிக்கு எதிராக, மனிதன் சுதந்திரம் வேண்டிப் போராடுவதையும் கிளர்ச்சி செய்வதையும் கம்யூ வரவேற்றார். அவர் குறிப்பிடும் கிளர்ச்சிக்காரன் அநீதிக்கு எதிரான சுதந்திரப் போராளி. அவன் அதர்மத்துக்கு எதிரான தர்மத்தின் தளத்தில் நிற்கிறான். மற்றவர்களது துன்பம் அவனைத் தீண்டுகிறது. அந்தத் துன்பத்தைக் காணும்போது அவனிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்வால் துன்பப்படும் மற்றவர்களோடு தன்னை இனம் கண்டு கொள்கிறான். மனித ஆன்மத்திற்கு பொதுவான ஏதோ ஒன்று, மனித அவலத்தில் பிறக்கும் புலனாகாத ஒன்று, அவனையும் மற்றவர்களையும் ஒன்றிணைத்து விடுகிறது.

அநீதிக்கு எதிராக மக்கள் ஐக்கியப்பட்டு எழுச்சி கொள்வதைக் கிளர்ச்சி என்றும், ஒரு கருத்திற்கு வசப்பட்டு மக்கள் அணி சேர்ந்து எழுவதை புரட்சி என்றும் வேறுபடுத்தி, வகைப்படுத்திக் காட்டுகிறார் கம்யூ. முன்னதில் நீதி இருக்கிறது. தர்மம் இருக்கிறது. பின்னதில் உன்னதமானது ஒன்றுமில்லை என்பது அவரது வாதம். மனித சுபீட்சத்திற்காக மனிதன் போராட வேண்டும். அது அர்த்தமுடையது. அரூபமான, பூடகமான கருத்துகளுக்காக மனிதர்கள் போராடுவதும் மடிவதும் அபத்தமானது என்கிறார் கம்யூ.

இந்தத் தத்துவ நூலில் நீச்சேயை அவர் கண்டிக்கிறார். நீச்சேயின் தத்துவார்த்த கருத்துக்கள் சர்வதிகார சித்தாந்தங்களுக்குத் தூபமிட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். கடவுள் இல்லாத ஒரு உலகத்தை சிருஷ்டிக்க முனைந்த நீச்சே, மனித அறங்களும் செத்துவிட்டதாகச் சொல்கிறார். இது தப்பு. இந்தக் கோட்பாடு அராஜகத்திற்கு வழிகோலும். கடவுள் இல்லாத உலகில், மனிதனே அறநெறிகளை வரித்துக் கொள்ள வேண்டும்; அர்த்தத்தைக் காண வேண்டும் என்கிறார் கம்யூ.

1960ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி பாரிசில் கார் விபத்தில் சிக்கி, அல்பேர்ட் கம்யூ மரணமடைந்தார். சாவு என்பது வாழ்வின் ஒரு அபத்தமான நிகழ்வு என எழுதி வந்த கம்யூ, அந்த அபத்தமான சாவை இறுதியில் சந்தித்தார்.

மானிடத்தின் மனச்சாட்சியை கிள்ளி விட்ட ஒரு மகத்தான கலைஞர் என நோபல் பரிசுக் குழு அவரைப் புகழ்ந்துரைத்தது அவருக்குக் கிடைத்த பொருத்தமான சான்றிதழ்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments