×

மனப்புரட்சியும் மனித விடுதலையும்: ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

யார் இந்த ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி?

கடவுள் என்றும், ஞானி என்றும், புத்த பெருமானின் அவதாரம் என்றும், அனுபூதிமான் என்றும், ஆன்மயோகி என்றும், தத்துவதரிசி என்றும் நாம் பதிக்கும் சமூகப் படிமங்களுக்கும் எமக்குத் தெரிந்த சாதாரண அளவீடுகளுக்கும் அகப்படாத ஒரு அபூர்வமான மனிதர்.

அவர் யார் என்பதை வரையறுத்துக் கொள்வது கடினம். அப்படி வரித்துக் கொண்டு நாம் அவரைப் புரிந்து கொள்ளவும் முடியாது.

‘அவர் யார்?’ என்ற கேள்விக்கு அவர் யாருமற்றவர் என்பதுதான் பொருத்தமான பதில். ஏனென்றால் அவர் தனது சுயத்தை, அகந்தையை, ஆளுமையை, அகத்தின் முகத்தை அழித்துக் கொண்டவர்.

அவர் ஒரு அசாதாரண மனிதர். அழகான மனிதர்.

தொண்ணூறு ஆண்டுகள் வரை எம்மோடு இப் பூமியில் வாழ்ந்தார். அதில் எழுபத்தைந்து ஆண்டுகள் வரை எம்மோடு கலந்துரையாடினார், போதித்தார், எழுதினார்.

மனித மனம் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனித விழிப்புணர்வு பற்றி, மனித விடுதலை பற்றி, மனித வாழ்வின் சகல சிக்கலான பரிமாணங்கள் பற்றியும் மிகவும் கனிவுடன், மிகவும் அக்கறையுடன், மிகவும் துல்லியமான தெளிவுடன், மிகவும் அழகான, அற்புதமான கவிதா மொழியில் பேசினார், எழுதினார்.

அவரது போதனைகள், எழுத்துக்கள் எல்லாவற்றையும் நாம் ஒன்று சேர்த்துத் தொகுத்துப் பார்த்தால் அவை ஒரு பெரும் தத்துவார்த்தமாகவோ கருத்துக் களஞ்சியமாகவோ அல்லது ஒரு ஆன்மீக தரிசனமாகவோ அமையமாட்டா. அவை அனைத்துமே எம்மை நோக்கி எறியப்படும் கேள்விகள்; எம்மோடு சேர்ந்து நடத்தப்படும் தேடுதல்கள்; எமது கனவுகளைக் கலைத்து, நம்பிக்கைகளை உடைத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விசாரணைகள். கிருஸ்ணமூர்த்தி எமக்கு எவ்வித தத்துவக் கோட்பாடுகளையும் நெறித்துவிடவில்லை. ஆன்மீக ஞான தரிசனத்தை அளித்து விடவில்லை. உண்மைப் பொருளைக் கண்டு கொள்ளும் ஒரு மார்க்கத்தை காட்டவில்லை.

யுகம், யுகமாக எமக்குள், எமது மனக்குகை இருட்டினுள் நாமே வரைந்துவிட்ட நிழலுருவங்களை, புனைந்துவிட்ட பொய்மைகளைக் கண்டுகொள்வதாயின் “நாமே எமக்கு ஒளியாக வேண்டும்” என்கிறார் கிருஸ்ணமூர்த்தி. அவரது போதனை ஒரு புதுமையான சுய தரிசனக் கண்ணாடி.

மனித குலம் இன்று தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு பயங்கர அணுயுகத்தின் விளிம்பில் நிற்கிறது. உலகமானது பிளவுபட்டு, மனித உறவுகள் சிதைபட்டுக் கிடக்கின்றன. வல்லரசுகள் என்றும், நாடுகள் என்றும், இனங்கள் என்றும், மதங்கள் என்றும், வர்க்கம் என்றும், சாதி என்றும் மானிடம் சிதறுண்டு, முரண்பட்டு மோதுகிறது. இனவாதம், மதவாதம் என்ற வெறிபிடித்த சித்தாந்தங்கள் வன்முறைக்குத் தூபமிடுகின்றன. உலகின் பல முனைகளில் யுத்தங்களும் போராட்டங்களும் புரட்சிகளும் வெடித்து மனிதனை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இவ்விதம் மனித வாழ்வு சீர்குலைந்து கிடப்பது ஏன்? மனித உறவுகள் சிக்குப்பட்டு குரோதமடைவது ஏன்? மனிதர்களிடையே அன்பும் அமைதியும் ஒத்திசைவான வாழ்வும் செத்துப் போனது ஏன்? மனிதன் முழுமையோடு, நிறைவோடு, உள்ளும் புறமும் இசைவாக, அமைதியோடு ஆனந்தமாக வாழ முடியாதா?

மனிதன் நாகரீகங்களை தோற்றுவித்தான். அவை அழிந்து போயின. சாம்ராஜ்யங்களைக் கட்டி எழுப்பினான்.

அவை இடிந்து விழுந்தன. சமுதாய வடிவங்களை உருவாக்கினான். அவை சிதைந்து போயின. மனிதன் மீண்டும் மீண்டும் ஒரு உன்னதமான, புதுமையான சமுதாயத்தைக் கட்டி எழுப்ப விழைகிறான். சமுதாய அமைப்பை மட்டும் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்து விடுவதால் மனிதன் சுபீட்சமடைய முடியுமா?

தனி மனிதனுக்குப் புறம்பான சக்தியாக, தனி மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்தியாக, தனி மனித தனித்துவத்தை நசுக்கிவிடும் சக்தியாக சமுதாய அமைப்பு இயங்கும் பொழுது அது தனி மனித முழுமைக்கும், மனித விடுதலைக்கும் வழி வகுக்குமா?

சமுதாயம் என்பதே சிக்கலான மனித உறவுகளைக் குறிப்பது அல்லவா? இந்த உறவு எனக்கும் உனக்கும் இடையிலான உறவு. அவனுக்கும் மற்றவனுக்கும் இடையிலான உறவு. மனித உறவுகளின் ஒட்டுமொத்தமான சிலந்திவலைப் பின்னலாக சமூக அமைப்பு உருவகம் பெறுகிறது. தனி மனிதன் தனது மனவுலக இருட்டினுள் பாதை தெரியாது தடுமாறும் பொழுது, பொய்மைகளில் புதைந்து குழம்பும்போது, எனக்கும் உனக்குமுள்ள உறவுகளில் புரிந்துணர்வு இல்லாதபோது, அவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள உறவுகளில் முரண்பாடு தலைதூக்கும் பொழுது, சமுதாயத்தை மாற்றி அமைக்க விழைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அக உலகத்தை அறவே உதாசீனம் செய்து புற உலகத்தை, பொருளுலகத்தை மட்டும் சீரமைத்தால் மனித வாழ்க்கை சிறப்புற முடியுமா?

இவ்விதம் கேள்விகளை எழுப்பும் கிருஸ்ணமூர்த்தி, முதலில் தனி மனிதன் தனக்குள், தனது மனவுலகில் ஒரு புரட்சியைச் செய்ய வேண்டும் என்கிறார்.

“சமுதாயப் புரட்சியானது, தனி மனிதனிலிருந்து, தனி மனிதனின் உள்ளீட்டான அகவுலகப் புரட்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். தனி மனிதனின் உள்ளீட்டான புரட்சி நிகழாமல், மனவமைப்பு மாற்றப்படாமல், தனி மனிதனுக்குப் புறம்பாக, வெளியே நிகழும் எவ்வித புதுமையான சமூகப் புரட்சியும் உள்ளடக்கத்தில் உயிரற்றதாகவே இருக்கும். உயிர்த்துடிப்புள்ளதும், காலத்தால் சிதைந்து போகாததுமான ஒரு புதிய சமூக வடிவத்தைக் கட்டி எழுப்புவதாயின் தனி மனிதனின் மனவரங்கில் ஒரு புரட்சி நிகழ்வது அவசியம்.” என்கிறார் கிருஸ்ணமூர்த்தி.

இந்த மனப் புரட்சியானது பிரக்ஞையின் விழிப்புணர்வாக, பிரக்ஞையின் அடித்தளத்திலிருந்து வெடித்தெழ வேண்டும்.

நானே என்னைப் புரிந்து கொள்ளாதவரை, வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளாத வரை, பொய்மைகளின் இருண்ட சுவர்களுக்குள் நான் சிறைபட்டுக் கிடக்கும் வரை, நான் மற்றவனைப் புரிந்து கொள்வது எங்ஙனம்? இந்த சமுதாயத்தையும் உலகத்தையும் அறிந்து கொள்வது எங்ஙனம்?

இந்த சமூகமோ உலகமோ என்னிடமிருந்து மாறுபட்ட ஒரு பூடகமான பொருளல்ல. நானே இந்த சமூகத்தையும் உலகத்தையும் சிருஷ்டித்துள்ளேன். இந்த சமூகமும் உலகமும் எனது சுயத்தின் வெளிப்பாடாகவே பொருளுருவம் பெற்றிருக்கிறது. எனது ஆசைகள், எனது கனவுகள், எனது விருப்பு வெறுப்புகள், எனது மனப் புற்றிலிருந்து பாம்புகளாகச் சீறும் துவேசங்கள், வெறிகள் எல்லாமே இந்த சமூக உலகத்தை, சமூக உறவுகளைப் படைத்திருக்கிறது. எனவே, நானே இந்த சமூகம், நானே இந்த உலகம்.

நான் சிருஷ்டித்த இந்த சமூக உலகத்தை, நானாகவுள்ள இந்த சமுதாயத்தை, நானே மாற்றி அமைப்பதானால் அந்தப் புரட்சி எனக்குள் தொடங்க வேண்டும். எனது மனவுலகக் களத்தில் அந்தப் போராட்டம் ஆரம்பமாக வேண்டும்.

இந்த உள்ளீட்டான, மனவரங்கப் போராட்டத்தில் எனது விடுதலைக்கான ஆயுதம் எனது விழிப்புணர்வுதான். இந்த விழிப்புணர்வின் வெளிச்சத்தில் எனது மனதின் வேடங்களை, கோலங்களை நான் கண்டு கொள்ள வேண்டும். “பொய்மைகளைக் கண்டுகொள்ளும் பொழுது தான் உண்மை புலனாகிறது.” என்கிறார் கிருஸ்ணமூர்த்தி.

ஆன்மீக யாத்திரை என்றும் அகவுலகப் பயணம் என்றும் தியானம் என்றும் யோகம் என்றும் எமக்குள் ஒளிந்திருக்கும் ஆன்மத்தின் சூட்சுமத்தை அறிந்து கொள்வதென்றும் நாம் உலகத்தைத் துறந்து, வாழ்க்கையைத் துறந்து, உறவுகளை அறுத்து, யுகம் யுகமாக நடத்திய தேடுதலால் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. கடவுள் என்றும் உண்மைப் பொருள் என்றும் நாம் தேடி அலைந்ததெல்லாம் எமது ஆசையின் நிகழ்வுகளன்றி வேறொன்றுமல்ல. கால விசாலத்தின் எல்லைகளைக் கடந்து, சாவின் நியதியை வென்று, துயரத்தின் பளுக்கள் அகன்ற ஒரு நித்தியமான, சிரஞ்சீவியான, பேரானந்தமான வாழ்வினைக் கனவு கண்ட எமது விபரீதமான ஆசை கடவுளாகப் பிறந்தது. ஆயிரமாயிரம் கோவில்களைக் கட்டி, அந்தக் கடவுகளைக் குடியமர்த்தினோம். அர்த்தமிழந்த, அபத்தமான எமது வாழ்க்கைக்கு ஒரு பிரமாதமான அர்த்தமாக, ஒரு அலாதியான நம்பிக்கையாகக் கடவுள் என்ற கருத்துருவத்தை நாம் தழுவிக் கொண்டோம். எமது மனமோ கனவுலகில், கற்பனையுலகில், நிதர்சனத்திற்குப் புறம்பான உலகில் தூங்குகிறது. இந்தப் புராதன மனதால், காலம் காலமாகப் பொய்களால் வனையப்பட்ட மனதால், மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன மனதால், கருத்துலக் கோட்பாடுகளில் கண்டுண்ட மனதால் உண்மையைக் கண்டுகொள்ள முடியாது. நாம் ஒரு குருவை வரித்துக் கொண்டோ ஒரு ஆன்மீக வழிகாட்டியைப் பின் தொடர்ந்தோ ஆச்சிரமத்தில் தவமிருந்தோ மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனைகள் செய்து, அழுது புரண்டு ஆண்டவனை வேண்டியோ உண்மைப் பொருளைக் கண்டு கொள்ள முடியாது.

அறிவுப் பசியில் அலையும் எமது மனமோ கருத்துக்களை விழுங்குகிறது. அனுபவத்தைத் தேடித் திரட்டுகிறது. நினைவுப் பளுவைப் பெருக்குகிறது. நடமாடும் நூல்களாக, மற்றவர்களது செத்துப் போன, கருத்துக்களை சதா அசைபோடும் இயந்திரமாக, எண்ணத்தின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் அறிவார்த்த மனமும் உண்மையைக் கண்டு கொள்ளாது.

எண்ணத்தால், சிந்தனையால், அறிவால், அனுபவத்தால் மனிதர்கள் காலம் காலமாக வரைந்து கொண்ட கருத்துருவச் சித்திரங்கள் எல்லாம் பழைய, இறந்த கால மனவுலகத்தைச் சார்ந்தவை. இந்தப் பழைய மனதின் படிமங்களால் மெய்யுண்மையின் கதவுகளைத் திறக்க முடியாது என்கிறார் கிருஸ்ணமூர்த்தி.

“மனித வாழ்வில் எண்ணங்கள் எதற்காக முக்கியத்தைப் பெறுகிறது என்று விசாரித்துப் பார்த்தீர்களா? மனதின் அனுபவக் கடலிலிருந்து ஓயாது அலைமோதும் கருத்துருவங்களாக, படிமங்களாக சதா மனதை உலைத்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணங்களுக்கு எதற்காக நாம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்? மிகவும் தந்திரமாக, மிகவும் நுட்பமாக, மிகவும் சாதுரியமாக இயக்கும் எண்ணமானது தன்னிச்சையாக தனக்கேற்றவாறு சகலத்தையும் திரிபுசெய்து கொள்கிறது. மனித உறவுகளில் பிளவையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்கின்றது. இன்பம், துன்பம் என்று மனித வாழ்வனுபவத்தைக் கூறு போடுகிறது. எண்ணற்ற அனுபவக் கூறுகளை மனதின் நினைவறையில் குவித்துக் கொள்ளும் எண்ணமானது அந்த அனுபவக் கிடங்கிலிருந்தே மீண்டும் புத்துயிர் பெற்று எழுகிறது. வாழ்க்கை பற்றி எண்ணத்தால் அளிக்கப்படும் விளக்கங்களும், வியாக்கியானங்களும் இறந்த கால அனுபவத்திலிருந்து பெறப்படுபவை. ஆகவே எண்ணமானது இறந்த காலத்தைச் சார்ந்தது. பழமையானது.” என்று குறிப்பிடும் கிருஸ்ணமூர்த்தி, எண்ண அமைப்பின் முழு இயக்கத்தையும் கண்டுகொள்வதுதான் சுயதரிசனத்தின், அகப் புரட்சியின் ஆரம்பம் என்கிறார்.

எண்ண அசைவின் மையமாக எனது சுயம் இயங்குகிறது. இந்தச் சுயம் என்றால் என்ன? நான் என்று எனக்குள்ளிருந்து எண்ணிக் கொண்டிருப்பவன் யார்? அவதானிப்பவனாக, அனுபவிப்பவனாக, ஆசைப்படுபவனாக, எனக்குள் என் அகமாக, அந்தரங்க ஆன்மாவாக, என் ஆளுமையாக, என் அகந்தையாக, ஆணவமாக இயங்கிவரும் எனது சுயம் எப்படித் தோற்றம் கொண்டது? இந்த உலகத்தில் எனக்கு எல்லாமே அதுவாக, அதற்காக வாழ்ந்து, அதற்காக அனுபவித்து, அதற்காகத் துயரப்பட்டு, அதை எனது நிரந்த நான் என்று நம்பி, அலாதியான பிரியத்தோடு நான் வழிபட்டுப் பூசிக்கும் அந்த நான், எனது சுயம், எனக்குச் சொந்தமானது எப்படி?

எனது வாழ்வனுபவத்திலிருந்து, எனது நினைவுலகத்திலிருந்து, எனது பாரம்பரியத்திலிருந்து, எனது பண்பாட்டிலிருந்து, நான் எதிர்கொள்ளும் புறவுலக அழுத்தங்களிலிருந்து எனது சுயம் கருவாகி உருப்பெறுகிறது. எனது சுயத்தின் எலும்பும் சதையுமாக இருப்பதெல்லாம் எனது நினைவுகளின் நிழலுருவங்களன்றி வேறொன்றுமல்ல. எனது மனம் சுவீகரித்துக் கொண்ட கோடானுகோடி படிமங்களின் மையத்திலிருந்து எனது சுயம் வெடித்தெழுகிறது. ஆகவே, நான் என்பதே ஒரு படிமம். ஒரு மையப் படிமம். காலத்தால் செத்துப் போன கருத்துருவங்களிலிருந்து, நினைவுகளின் கல்லறைகளிலிருந்து உயிர் பெற்றும் இயங்கும் ஒரு எண்ணம்.

“மிகவும் விழிப்புடன் கூர்மையான கவனத்துடன், கணத்திற்குக் கணம் உனது எண்ணத்தின் அசைவுகளை அவதானித்துப் பார். நீ அவதானிப்பதும் ஆராய்வதும் உனது எண்ணமாக இருந்தால் நீ எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை. உனது விழிப்புணர்வின் வெளிச்சத்திலேயே நீ உன்னைக் கண்டு கொள்ள வேண்டும். உனது விழிப்புணர்வு கூர்மையாகி, உனது கவனம் முழுமைபெறும் பொழுது, அவதானிப்பவனாக, சிந்திப்பவனாக, உனது பிரக்ஞையின் மையமாக இயங்கிவரும் உனது சுயம் செயலிழந்து விடுவதை நீ கண்டு கொள்வாய். இவ் விழிப்பு நிலையில் மனமானது எண்ண இயக்கத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அமைதியடைகிறது. எண்ண இயக்கத்திலிருந்து விடுதலையடைந்து, அமைதிகொள்ளும் மனதில்தான் அன்பும் அழகும் ஆனந்தமும் சாத்தியமாகிறது.” என்கிறார் கிருஸ்ணமூர்த்தி.

வாழ்க்கை என்பதே ஒரு மாபெரும் இயக்கம்; ஒரு மாபெரும் சக்தி. எமது மனம், எமது எண்ணம், எமது உணர்வு, எமது ஆசைகள் எல்லாமே இந்த இயக்கத்தின், இந்த சக்தியின் வெளிப்பாடுகள்தான். எமது மனதில், எண்ணத்தில், உணர்வில், ஆசையில் பிணக்கும் போராட்டமும் தாண்டவமாடும் பொழுது, எமது உறவுகளில் முரண்பாடு தலைதூக்கும் பொழுது இந்த சக்தி விரையமாகிறது, வீணாகிறது. மனித மனமானது விழிப்புணர்வுகொண்டு, தனக்குள் தெளிவுகண்டு, உள்ளும் புறமும் முழுமையான, அமைதியான, ஒத்திசைவான வாழ்வைத் தழுவிக் கொள்ளும் பொழுதுதான் எல்லையற்ற சக்தியாக மனிதனிடம் ஞானோதயம் பிறக்கிறது என்கிறார் கிருஸ்ணமூர்த்தி.

எமது பழைய மனம், பயிற்றப்பட்ட மனம் இறக்க வேண்டும். அந்தச் சாவிலிருந்துதான் புதிய மனம், புரட்சிகர மனம் பிறக்க முடியும். அந்தப் புரட்சிகர மனமே முழு மனித விடுதலைக்கும், சமுதாய விடுதலைக்கும் வழி வகுக்கும்.

கிருஸ்ணமூர்த்தி போதிக்கும் மனப் புரட்சியின் சாராம்சம் இதுதான்.

மனப்புரட்சியும் மனித விடுதலையும்: ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments