×

ரஜீவ் – பிரபா சந்திப்பு: எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவமொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினத்திற்கு முதல் நாள், அதாவது 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்திக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டத்தில் ரஜீவின் நிர்வாக ஆட்சி பீடம் மூடி மறைத்த உண்மைகளில் இதுவும் ஒன்று. ரஜீவ் – பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக் கருதுகிறேன்.

தலைவர் பிரபாகரனும் நானும் யோகியும் திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோகா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிலை எடுத்துக் கொண்டதால் இந்திய அரசுக்குச் சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என ரஜீவ் காந்தி விரும்பினார். அவருக்கு ஒரேயொரு மார்க்கம் தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றிய அவரது கருத்துக்களைக் கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச் சிறந்த வழி என ரஜீவ் காந்தி முடிவு எடுத்தார்.

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி நள்ளிரவு. அசோகா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப் புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ் காந்தி மிகவும் அவசரமாக எம்மைச் சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும்பூனைகளின் வாகன அணி பின்தொடர பிரதம மந்திரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காகக் காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.

புன்முறுவல் பூத்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப் பார்த்து, “உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காகக் காத்து நின்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. “இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றி விபரமாகக் கூறுவீர்களா?” என்று கேட்டார் ரஜீவ் காந்தி. எமது கருத்துகளை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக நான் எடுத்து விளக்கினேன்.

இனப் பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கையில் வட கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாயக நிலம். இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வடகிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ்பேசும் மக்களின் தாயகமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட போதும், இத்தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டைக் கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தைக் கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன். அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக, வடகிழக்கு மாகாண சபையைக் கலைத்து விடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன். அடுத்ததாக ஆயுதக் கையளிப்புப் பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் ஆயுதங்களைச் சரணடையுமாறு விதிப்பது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு கிட்டுவதற்கு முன்பாகக் கையளிக்கும்படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதை எல்லாம் ஆர்வமாகவும் பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் ரஜீவ் காந்தி.

நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடிந்ததும் ரஜீவ் காந்தி சொன்னார். “உங்களது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வதுபோல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாண சபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்குதான். அதிலுள்ள குறைபாடுகளைப் பின்பு நான் ஜெயவர்த்தனாவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயல்வேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்த்தனாவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்தி வைக்குமாறு சொல்லுவேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்ப வேண்டும். தமிழரின் நலன் மீதுதான் நாம் அக்கறை கொண்டு செயற்படுகிறோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத் தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப் பலப்படுத்துவதாக அமையும்” என்றார்.

இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. “இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தமிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பிரபாகரன். ரஜீவ் காந்திக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டுக் காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்.

“உங்களது நிலைப்பாடு எனக்குப் புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ கொள்கையையோ மாற்றச் சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்.” என்றார் ரஜீவ் காந்தி. “பார்த்தீர்களா? பிரதம மந்திரியே உங்களது வழிக்கு வந்துவிட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். அது உங்களது நிலைப்பாடு. அதை ஏற்கத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்த சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்திய அரசுக்காகச் செய்யலாம் அல்லவா?” என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார். இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. “ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கிறோம் என்றுதானே அர்த்தம்?” என்று எனது காதோடு குசு குசுத்தார் பிரபாகரன். ஏற்றுக் கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திப்படுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார். அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.

“உங்களது இயக்கத்திற்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவில் நம்பிக்கையில்லை என்பது எமக்குத் தெரியும். எனக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடும் அழுத்தம் பிரயோகித்து இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம். மாகாண சபைத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், பின்பு பேச்சுக்களை நடத்தி தமிழரின் சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம் அல்லவா? அத்தோடு இந்த மாகாண சபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. அதற்குக் காலம் தேவை. அதற்கு முன்னராக, வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவலாம். அதில் உங்களது அமைப்பிற்கு பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்துகொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்.” என்றார் ரஜீவ் காந்தி.

“இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு இரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்க வேண்டாம். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ்-பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம்.” என்றார் அமைச்சர் பண்டுருட்டி. இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை செய்யப்பட்ட நாடகம் போல எமக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை. எதிலுமே ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்டுருட்டியார் மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.

வடகிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டது. ஈழத்திலுள்ள எல்லாப் போராளி அமைப்புகளுக்கும் இடைக்கால ஆட்சியில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென ரஜீவ் கேட்டுக் கொண்டார். பிரபா அதற்கு இணங்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. இடைக்கால நிர்வாக ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு பற்றி விபரமாகப் பேசப்படவில்லை. அரச அதிபர் ஜெயவர்த்தனாவுடன் பேசி இறுதி முடிவு எடுப்பதென ரஜீவ் வாக்குறுதி அளித்தார். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், சிங்கள அரசாங்கம் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறக்கக் கூடாதென்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கும் ரஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்புச் செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா எனக் கேட்டார் ரஜீவ் காந்தி. அந்த வரிப் பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். மாதாந்தம் எவ்வளவு தொகைப் பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள் என ரஜீவ் கேட்க, இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபா வரை திரட்டுகிறோம் என்றார் பிரபா. “அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது இலட்சம் ரூபா வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்” என்றார் ரஜீவ்.

இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. “ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ணச் சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். பொது மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும். இந்த சூழ்நிலையில் உங்களுக்கு போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்டுருட்டியார். “எதற்காக யோசிக்க வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு.” என்றார். “இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே அப்படித்தான்.” என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபா. “பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசு புதிய ஆயுதங்களைத் தரும் அல்லவா?” என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போலப் பிரதமரும் தலையசைத்தார்.

அப்பொழுது அதிகாலை இரண்டு மணி இருக்கும். அன்று காலை ஒன்பது மணியளவில் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ரஜீவ் காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போன்று பண்டுருட்டியார் திருப்தியுடன் தென்பட்டார். தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன், “ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் என பல விடயங்களைக் கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு, அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?” என்றேன்.

பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். “இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்குப் பிரதமரில் நம்பிக்கையில்லையா? இது ஒரு Gentlemen Agreement. இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?” என்றார் அமைச்சர். ரஜீவ் காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

“நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத Gentlemen Agreement ஆக இருக்கட்டும்.” என்றார் ரஜீவ் காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.

ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை மூன்று மணியாகி விட்டது. “அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை.” என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.

எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிட வில்லை. ரஜீவ் – பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் பற்றியும் விபரமாகத் திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். “அண்ணன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டான். “பிரபாவுக்குத் திருப்தி இல்லை. நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்” என்றேன்.

ஆழமாகச் சிந்தித்தபடியிருந்த திலீபன், “அண்ணை சொல்வதுதான் நடக்கும்.” என்றான். உண்மையில் அப்படியேதான் நடந்தது. ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் உருவாக்கப்படவில்லை.

தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்த திலீபன் ஆத்திரமடைந்தான். இந்திய அரசு செய்த வரலாற்றுத் தவறை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கத்தோடு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினான். இறுதியில் தனது உயிரை அர்ப்பணித்து உலகிற்கு உண்மையை உணர்த்தினான். எழுதப்படாத ரஜீவ் – பிரபா ஒப்பந்தம் பூகம்பமாக வெடித்து, தமிழீழத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டு பண்ணியது.

ரஜீவ் – பிரபா சந்திப்பு: எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments