
இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும். இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம். வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே “படலை” என்பார்கள். வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில், சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். இது “சங்கப்படலை” அல்லது “சங்கடப்படலை” எனப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப்போக்கில் ஓடுகள், சீமெந்து கொண்டு அமைக்கப்பட்டது. சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும் இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் சங்கப்படலைகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ?
முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக் கூடப் பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கின்றோமென்பது அவமானமே !
படம்:
யாழ்ப்பாணத்தில், “அளவெட்டி” என்னும் ஊரிலிருந்து “அம்பனை” என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.