×

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள் இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப்பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப்பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம்கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல் தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம் ஈதெலாம் கற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்….. (– சித்தர் நாடி நூல் 18 –)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments