×

கண்ணதாசன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில், தன வணிகர் செட்டியார் மரபில் பிறந்தார்.[சான்று தேவை] இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955 ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.

குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள்  இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு
உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

Source: Wikipedia

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments