×

ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமர்

விடுதலைப் புலிகளின் போரியற் சாதனைப் பட்டியலிற் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சமராக ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் மீதான ஊடறுப்புச் சமர் அமைகிறது. தளத்தின் மையப்பகுதிவரை ஊடுருவி, அதன் உயிர்நாடியான ஆட்லறித் தளங்களையும் பிரிகேட் தலைமையகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து, எதிரியின் ஆட்லறி நிலைகளிலிருந்தே அவற்றைப் பயன்படுத்தி அவனுக்கெதிரான தாக்குதலை நடத்தி, இறுதியிற் பெரும் ஆயுதக் களஞ்சியங்களையும் ஒன்பது ஆட்லறிகளையும் அழித்து, நூற்றுக்கணக்கில் இராணுவத்தினரைக் கொன்று எதிரியின் இதயத்துள்ளேயே எமது படையணிகள் புரிந்த வீரச்சமர் நிகழ்வுகளை இவ்வூடறுப்புச் சமர் தன்னகத்தே அடங்கியுள்ளது.

சிங்கள இனத்தின் வீரச்செயல்களில் ஒன்றாக கருதப்பட்ட, சந்திரிகா அரசின் யாழ்ப்பாணப் பறிப்பைத் தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதற்கு அனையிறவு இராணுவ வலயத்தை பாதுகாப்பது இன்றியமையாதது. அது சிறீலங்காவின் போர் மூலோபாயத்தின் உயிர்மையம். யாழ்ப்பாணத்தைப் பெருநிலப்பரப்புடன் இணைக்கின்ற ஒரே தரைப்பாதையைக் கொண்டிருக்கும் அதன் கழுத்துப் போன்ற ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைவது சிங்களத்தின் யாழ்ப்பாண வெற்றியை மட்டுமன்றி அதன் போர் மூலோபாயத்தை சிதறடித்துவிடும். எனவேதான், ஆரம்பத்திற் சிறிய தடைமுகாமாக இருந்த ஆனையிறவை ஓர் இராணுவக் கூட்டுத்தளமாக மாற்றியிருந்த சிங்களம், யாழ் ஆக்கிரமிப்பின் பின் அதையொரு பாரிய இராணுவ வலயமாக மாற்றியது. கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவென அகன்று விரிந்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை உள்ளடக்கிய அந்த இராணுவ வலயம், 30.000இற்கு மேற்பட்ட இராணுவத்தைக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைத் தன் பின்பலமாகக் கொண்டிருந்தது.

அதன் முக்கியத்திற்கேற்ப அதிநவீன போராயுதங்களையும் கொண்டிருந்தது.
இத்தகைய பலம்வாய்ந்த ஆனையிறவு இராணுவ வலயம் 1997இல் மேலும் முக்கியத்துவம் பெற்றது. ‘சத்ஜய’ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகளோடு, இராணுவ வலயத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடனும் யாழ்க் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையைத் திறக்கும் முயற்சியில் மேலும் முன்னேறும் பொருட்டும் ஆனையிறவை இயங்கு தளமாகக் கொண்ட பாரிய படையெடுப்பு ஒன்றிற்கு சிங்களப்படை தயாராகியது. மேலும் முன்னணிப் படையணிகள் குவிக்கப்பட்டும் முன்னகர்வுக்குத் தேவையான அதிசக்தி வாய்ந்த மரபுப்போர்க்கருவிகள், தளபாடங்கள் பெருமளவிற் குவிக்கப்பட்டும் படைத்தலைமையின் இறுதிக் கட்டளைக்காகக் காத்திருந்தது ஆனையிறவு.

இந்நிலையிற் போரியலிற் களயதார்த்தத்திற்கேற்ப அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் எமது தலைவர், ஆனையிறவு – பரந்தன் கூட்டுத்தளம் மீது வியப்பூட்டும் ஓர் ஊடறுப்புச் சமரைச் செய்வதென முடிவுசெய்தார். சிங்களப்படைகளின் போர் ஏற்பாடுகளைச் சின்னாபின்னப்படுத்துவதுடன், களநிலைமைக்கேற்பத் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அம்சங்களை உள்ளடக்கிய தாக்குதல் திட்டத்தை வரைந்திருந்தார்.

ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரிற்கான திட்டத்திற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு எப்போதும் போலவே கடினமானதும் சிக்கல் நிறைந்ததுமான பணிகள் தலைவரால் ஒப்படைக்கப்பட்டன. ஆனையிறவுத் தளத்தின் முன்னரண்களை உடைத்தெறிந்து கொண்டு பிரதான தளத்துள் நுழையும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி அங்கிருக்கும் முதல்தர ஆட்லறி நிலைகளையும் புளியடியில் அமைந்திருக்கும் மோட்டர் தொகுதிகளை உள்ளடக்கிய பிரிகேட் தலைமையகத்தையும் கட்டுப்பாட்டிற்குட் கொண்டு வர வேண்டும். அதேவேளை சின்ன உப்பள முகாமின் முன்னணிக் காவலரண் வரிசையைக் கைப்பற்றும் பணியும் எமது படையணியுடன் ஒப்படைக்கப்பட்டது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் செயற்பாடே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின் திட்டத்திற்கு உயிரூட்டும்.

09.01.1997 அன்று கடல்நீரேரியாற் சூழப்பட்டதும், பெரும் வெட்டவெளிப் பிரதேசத்தை உள்ளடக்கியதுமான தமது இலக்கை நோக்கி எமது படையணி போராளிகள் நகர்ந்துகொண்டிருந்தனர். அது எமது போரியல் வரலாற்றிலேயே சிக்கல் வாய்ந்த நீண்ட நகர்வு. எல்லோராலும் விரும்பப்பட்டது போலவே எதுவித சிக்கல்களுமின்றித் தமது நகர்வுகளை முடித்துக் கொண்டு இறுதிக் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள் போராளிகள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், சமரை வழிநடத்திய தளபதி பால்ராஜிடமிருந்து சண்டையை ஆரம்பிப்பதற்கான கட்டளை தொலைத்தொடர்புச் சாதனத்திற் பறந்தது.

புயல்வேகத்திற் சண்டையைத் தொடக்கிய எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணிகள் எதிரியின் முதல்தரப் பாதுகாப்பு அரண்களை உடைத்தெறிந்தன. ஆட்லறித் தளத்தினுள் நுழைந்தவர்கள் அவற்றை எதிரி எதுவும் செய்துவிடாதபடி பறித்தெடுக்கும் நோக்கில் தமது உயர் செயற்றிறனை வெளிப்படுத்தினர். வேகமான தாக்குதலால் நிலைகுனிந்த எதிரி தன் ஆட்லறிகளையும் ஆயுதக்களஞ்சியங்களையும் அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். பெரும் பயன்பாடு ஒன்றிற்கு ஏற்றவகையில் நிலைப்படுத்தப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, துணிகளாற் போர்த்தப்பட்ட நிலையில் எட்டு ஆட்லறிகள் பத்திரமாய் நின்றன. ஆட்லறி நிலைக்குள் நுழைந்த மேஜர் கார்முகிலனின் தலைமையிலான எமது அணியினர் அவற்றை எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதற்காகவே எமது படையணியின் ஓர் அணியினருக்கு ஆட்லறிகளை இயக்குவதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை புளியடி பிரிகேட் தலைமையகம் மற்றும் மோட்டர் நிலைகளை உள்ளடக்கிய தளத்தைக் கைப்பற்றுவதற்காக நுழைந்த லெப்.கேணல் ராகவனின் தலைமையிலான எமது மற்றைய அணியினரும் வேகமான முறையில் அதைச் செய்துமுடித்தனர். சின்ன உப்பள முன்னணி நிலைகளைக் கைப்பற்ற வேண்டிய எமது மற்றைய அணி எதிர்பார்த்த வெற்றியிலக்கை எட்டமுடியாமற் சிரமங்களைச் சந்தித்துக்கொண்டிருந்தது.

ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. அடுத்த சிலநாட்களில் தமது பெரும் படையெடுப்பிற்கான கட்டளைகளை வழங்கத் தயாராயிருந்த படைக் கட்டளைப்பீடம் தனது படைத்தளங்களின் தொடர்பை இழந்து அங்கு என்ன நடக்கிறது என அறிய முடியாது தவியாய்த் தவித்தது. சிறீலங்காவின் அரசியல் இராணுவத் தலைமைகள் புலிகளின் இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் திகைத்துப்போயின. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற ஏக்கம் அவர்களைத் தாக்கியது.

திட்டமிட்டதுபோலவே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதான வெற்றிகள் யாவும் எட்டப்பட்டிருந்தன. சமரின் முதலாவதும் பிரதானதுமான நோக்கம் நிறைவு செய்யப்பட்டது. நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதபடி களத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் எதிரிக்கு அதிஸ்டத்தைக் கொடுத்தன. அப்படியான சமயங்களிற் சமரைத் தொடர்வதில்லையென்பது ஏற்கனவே எமது திட்டமாக இருந்தது. எமது அணியினராற் கைப்பற்றப்பட்டிருந்த ஆட்லறிகள், வெடிபொருள், களஞ்சியங்கள் எல்லாந் தகர்த்தெறிக்கப்பட்டன.

ஆனையிறவுத்தளம் பெரும் வெடியோசைகளால் அதிர்ந்தது. வெடிபொருள் குதங்களின் தகர்ப்பு, தளத்தை ஒளிவெள்ளத்தால் நிறைத்தது. எதிரிக்கெதிரான ஏற்பாட்டுக் குலைப்பு நடவடிக்கையொன்றை வெற்றிகரமாகச்  செய்துமுடித்த புலியணிகள் தளம் திரும்பின. சமரில் எதிரியின் பீரங்கிநிலை ஒன்றைக் கைப்பற்றியிருந்த எமது படையணியின் லெப்.கேணல் ராகவனின் தலைமையிலான நியூட்டனின் அணி அங்கிருந்து இரண்டு 120மி.மீ பீரங்கிகளை மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சுமரின் முடிவில், போர்த்தயாரிப்புகளுடன் ஆரவாரித்திருந்த பகைவனின் படைத்தளம் அமைதியாக உறைந்துபோனது. ஆனையிறவிலிருந்தான தனது படையெடுப்புத் திட்டத்தை எதிரி கைவிட்டான். எமது போராட்ட வரலாற்றில், இச்சமரில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நிலைநாட்டிய பெறுமதிவாய்ந்த சாதனைகள் என்றும் எவராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமர்

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments