×

அதிகாரம் 29 – கள்ளாமை 

குறட் பாக்கள்

குறள் #281

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பொருள்
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

குறள் #282

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.

பொருள்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

குறள் #283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள்
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

குறள் #284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

பொருள்
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

குறள் #285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

பொருள்
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

குறள் #286

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருள்
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

குறள் #287

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்.

பொருள்
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

குறள் #288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

பொருள்
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

குறள் #289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

பொருள்
அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

குறள் #290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் 
தள்ளாது புத்தே ளுலகு.

பொருள்
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

திருக்குறள் அருஞ்சொற்கள்

எனைத்தொன்றும் 

எத்தகைய பொருளையும்

உள்ளல் 

எண்ணுதல்

விழுமம் 

துன்பம்

பொச்சாப்பு 

சோர்வு

கார் 

இருள்

கரவு 

வஞ்சனை

வீவர் 

கெடுவர்

தேற்றாதவர் 

அறியாதவர்

தள்ளும் 

தவறிப்போகும்

புத்தேள் உலகு 

தேவருலகம்

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments