×

அதிகாரம் 30 – வாய்மை

குறள் #291

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்.

பொருள்
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

குறள் #292

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

பொருள்
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

குறள் #293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பொருள்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் #294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

பொருள்
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

குறள் #295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

பொருள்
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

« மேலதிக உரைகள் »

குறள் #296

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

பொருள்
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

குறள் #297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொருள்
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

குறள் #298

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

பொருள்
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

குறள் #299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

பொருள்
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

குறள் #300

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

பொருள்
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

புரைதீர்ந்த 

குற்றமில்லாத

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments