×

அதிகாரம் 33 – கொல்லாமை

குறள் #321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

பொருள்
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

குறள் #322

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

பொருள்
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

குறள் #323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

பொருள்
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

குறள் #324

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 
கொல்லாமை சூழும் நெறி.

பொருள்
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

குறள் #325

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

பொருள்
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

குறள் #326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.

பொருள்
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

குறள் #327

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

பொருள்
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

குறள் #328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பொருள்
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை

இழிவானதாகவே கருதுவார்கள்.

குறள் #329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

பொருள்
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

குறள் #330

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

பொருள்
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

கோறல் 

கொல்லுதல்

ஓம்புதல் 

காப்பாற்றுதல்

புலைவினையர் 

இழிதொழிலார்

செயிருடம்பு 

நோயுடம்பு

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments