×

அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

குறட் பாக்கள்

குறள் #511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

பொருள்
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

குறள் #512

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள்
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

குறள் #513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள்
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

குறள் #514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

பொருள்
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

குறள் #515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.

பொருள்
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.

குறள் #516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.

பொருள்
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

குறள் #517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

பொருள்
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

குறள் #518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

பொருள்
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.

குறள் #519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.

பொருள்
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

குறள் #520

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

பொருள்
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

உற்றவை 

தடைகள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments