×

அதிகாரம் 54 – பொச்சாவாமை

குறட் பாக்கள்

குறள் #531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

பொருள்
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

குறள் #532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

குறள் #533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.

பொருள்
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

குறள் #534

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

பொருள்
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

குறள் #535

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.

பொருள்
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

குறள் #536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.

பொருள்
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல்

பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை

தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

குறள் #537

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

பொருள்
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

குறள் #538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.

பொருள்
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

குறள் #539

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

பொருள்
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

குறள் #540

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.

பொருள்
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

இறந்த 

அடங்காத

பொச்சாப்பு 

மறதி

நிச்ச 

நாள்தோறும்

நிரப்பு 

இரந்து

இழுக்கு 

மறதி

மைந்து 

வலிமை

உள்ளியது 

எண்ணியது, குறிக்கோள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments