×

அதிகாரம் 65 – சொல்வன்மை

குறட் பாக்கள்

குறள் #641

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.

பொருள்
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

குறள் #642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

குறள் #643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

பொருள்
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

குறள் #644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்.

பொருள்
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

குறள் #645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

பொருள்
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

குறள் #646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

குறள் #647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பொருள்
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

குறள் #648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

பொருள்
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

குறள் #649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

குறள் #650

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.

பொருள்
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

ஞாலம் 

உலகம்

இணர் 

கொத்து

ஊழ்த்தும் 

மலர்ந்திருந்தும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments