×

அதிகாரம் 66 – வினைத் தூய்மை /

குறட் பாக்கள்

குறள் #651

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

பொருள்
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.

குறள் #652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

பொருள்
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

குறள் #653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.

பொருள்
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

குறள் #654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

பொருள்
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

குறள் #655

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள்
`என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும்

தொடராதிருப்பதே நன்று.

குறள் #656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பொருள்
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

குறள் #657

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பொருள்
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

குறள் #658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

பொருள்
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

குறள் #659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை.

பொருள்
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன்

தரும்.

குறள் #660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

பொருள்
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

ஒருவுதல் 

ஒழித்தல்

ஆதும் 

மென்மேலும் உயர்தல், மேலாகக் கடவோம்

மாழ்கும் 

கெடுதற்குக் காரணமாகும்

ஓதல் 

ஒழித்தல்

இளி 

இழிவு

கழிநல்குரவு 

மிகுந்த வறுமை

கடிந்த 

நீக்கிய

கடிந்து ஓரார் 

விலக்கார்

பீழை 

துன்பம்

இரீஇ 

காத்தல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments