×

அதிகாரம் 94 – சூது

குறட் பாக்கள்

குறள் #931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பொருள்
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.

குறள் #932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?.

குறள் #933

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

குறள் #934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்.

பொருள்
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

குறள் #935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

பொருள்
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

குறள் #936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

குறள் #937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின்.

பொருள்
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.

குறள் #938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது.

பொருள்
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

குறள் #939

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

பொருள்
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

குறள் #940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.

பொருள்
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

ஆறு 

வழி

ஆயம் 

ஆதாயம்

ஓவாது 

இடைவிடாது

சீர் 

புகழ்

கழகம் 

களம்(ஆடுமிடம்)

தருக்கி 

மேற்கொண்டு

இவறியார் 

கைவிடாதவர்

அகடு 

வயிறு

ஆரார் 

நிறைவுபெறார்

அல்லல் 

துன்பம்

முகடி 

மூதேவி

ஆயம் 

சூது

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments