×

புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 – புலவி நுணுக்கம் / குறட் பாக்கள்

குறள் #1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பொருள்
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

குறள் #1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

பொருள்
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து.

குறள் #1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

குறள் #1314

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள்
“யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

குறள் #1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று நான் சொன்னவுடன் “அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?” எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

குறள் #1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பொருள்
“உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;” அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்.

குறள் #1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

பொருள்
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ “யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்” என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.

குறள் #1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

பொருள்
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் “ஓ” உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?” எனக் கேட்டு அழுதாள்.

குறள் #1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பொருள்
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் “ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?” என்று சினந்தெழுவாள்.

குறள் #1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

பொருள்
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

கோட்டுப் பூ 

வளைந்த மாலை

செறுப்ப 

அடக்குதல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments