×

தளராது நின்ற தலைவர் வளர்த்த பிள்ளை லெப். கேணல் ஜோய்

முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….!

மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான்.

‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன்.

சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகர கோஷ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புதுக் கோஷ்டி, வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன்.

“அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன்.

“எங்கிருந்து வந்தனீங்கள்” நான் கேட்டுவிட்டு அவனைப் பார்க்கிறேன்.

“நான் மட்டக்களப்பில் இருந்து வந்தனான்” என்கிறான் அவன்.

எனக்கும் ஜோய்க்கும் ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது. எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல. மட்டக்களப்பு தமிழும் புதியதுதான். நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கல் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு. உழவு, விதைப்பு, வெட்டு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும், தயிரும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம்.

1988, 1989

எம்மைச் சுற்றிவர இந்தியப் படை.

நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டிவிட்டு அபகரிக்க வந்த வேற்றவன்.

10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன், இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா? எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன்மேலாக எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான். நயினாமடு இந்தியப்படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கிறான்.

ஒவ்வொரு ஆடாக, பட்டியில் இருந்த 19 ஆடுகள் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான். இந்திய இராணுவத்தினன் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டுவிட்டு ஏதோ கத்தித் தொலைக்கிறான். ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியே வர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணைவேண்டும். ஆட்டைத்தேடி உலங்கு வானூர்த்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித்தேடி சுடுகின்றது. அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான்.

தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப்பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது. இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்பிடித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான். மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது. “பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்காக நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஐஸ்ரின் என்னைப் பார்த்து கூறினான்.

“இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன்.

“பாட்டு, டான்ஸ் இப்படி பல” ஐஸ்ரின் அபிநயம் பிடித்துக் காட்டினான்.

பொங்கல், கிறிஸ்மஸ், போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும். இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஐஸ்ரின் ஆடினான். அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகின்றது.

வளைந்து, நிமிர்ந்து, முறிந்து….. என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது.

“வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன். ஆர்.பி.ஜி. தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது. தமிழீழ சிறிலங்காப் போர் மீண்டும், தொடங்கிய பின், யாழ் கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான்.

ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது.

மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும், இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது. மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும். கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதிதான்.

“70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர்.

ஒவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறிலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும். இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது. மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை.

“எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” என்றே எப்போதும் பதில் வரும்.

தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறைதான் ஜோய் தவழ்ந்த வீடு. அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு. இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு. ஒரு முறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான். அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம்.

சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம்.

ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும்போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம். அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டபப்ட்ட தலையை ஆட்டியபோது தலை விழுந்து விட்டதாம். இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது.

கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப் படை பக்சியின் உடலையும் விட்டுவிட்டு ஓடியது. ஓடும்போது தமது கத்திகளை மிக வேகமாக மண்ணில் புதைத்து, புதைத்து ஓடியது. கூர்க்காப்படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது. இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைகளுக்குப் போராட்டப் படிப்பினையாகியது.

தமிழீழ – சிறிலங்காப்போர் மீண்டும் தொடங்கியபோது சிறிலங்காப்படை, முஸ்லீம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்கு கீழ் தமிழ் மக்கள் வாழ்க்கை தொடர்ந்தது.

‘தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறிலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மட்டக்களப்பில் மீண்டும் காலடி எடுத்து வைத்தான். மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விசேட தளபதி , அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார். புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறிலங்காப்படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன.

தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தபப்ட்ட தாக்குதல். விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறிலங்காப்படை வராததால் தாக்குதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை. 15 நிமிடத் தாக்குதலில் பல சிறிலங்காப் படையினர் கொல்லபப்டடனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

“விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார். டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட் லைன் (Frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருக்கிறது.

“எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப்படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்துவந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?”

“முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத் தான் சிறிலங்காப்படை கைப்பற்றியது.”

“மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறிலங்காப்படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.”

“மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கு ஏற்ப எங்கும் செல்வோம்”

“நீங்கள் நேரில் நின்று நிலைமையைப் பார்க்கலாம்”

“நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள், அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப் பட்டதையா காட்டுகின்றது?”

“நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டுதான் இருக்கின்றோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது.

27.11.1991அன்று 3000க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றிவளைப்பில் இறங்கினர்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டான்.

பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த தீர்மானித்தான்.

தாக்குதல் வலயப் பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்த பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னமொரு பாலமும் இருந்தது. 29.11.91 காலை 08.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள். தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன.

தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்து கொண்ட சிறிலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது. படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான்.

இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு. காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய…..

மீன் மகள் பாடுகிறாள்

வாவி மகள் ஆடுகிறாள்

மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே

எட்டுத் திசையும் கலையின் வாடியம்மா.

என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதின் கதிரி இரண்டு வரிகள்.

போர்க்கலையில் வல்ல புலிக் கூட்டமும் உண்டு

பகையை பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு.

முடுகு – முன்னேறு

கிறுகு – திருப்பு

மறுகா – பின்பு, பிறகு

(இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்.)

தளராது நின்ற தலைவர் வளர்த்த பிள்ளை லெப். கேணல் ஜோய்

நினைவுப்பகிர்வு:- யோகி.

விடுதலைப்புலிகள் (குரல் 27)

 

 

 

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments