×

பட்டித்திடல் படுகொலை – 26.04.1987

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குள் அமைந்துள்ள இப்பூர்வீக கிராமத்தில் விவசாயம் செய்பவர்களும் கூலிவேலை செய்பவர்களும் அதிகமாக வாழ்கின்றார்கள். 1987ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்கள் ஆங்காங்கே இடம் பெற்றவண்ணம் இருந்தன. பட்டித்திடல் கிராமமும் 26.04.1987 அன்று இராணுவத் தாக்குதலுக்குள்ளாகியது.

பட்டித்திடல் கிராமத்திலிருந்து நெடுஞ்சாலையின் மேற்கே மல்லிகைத்தீவு சந்தியும் வாசிகசாலையும் உள்ளன. அப்பகுதியில் மோதல் சம்பவங்கள் நடந்தது. அதனை அறிந்த மக்கள்  தாங்கள் இராணுவத்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக ஊரைவிட்டு அகன்றுவிட்டனர். பழிதீர்க்கும் எண்ணத்தில் கிராமத்திற்குள் வந்த இராணுவத்தினர் மக்களை தேடி வந்த போது கிறிஸ்தவக் குடும்பமான பொன்னம்மா குடும்பத்தை சேர்ந்த பதினெட்டுப் பேர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் தங்களுக்கொன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

வீடு வீடாகத் தேடிக்கொண்டு வந்த இராணுவத்தினர் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன். குற்றுயிரோடு இருந்தவர்களை வெட்டிவிட்டு அனைவரையும் குறிப்பாக குறை உயிரோடு இருந்தவர்களையும் வீட்டினுள் வைத்துத் தீயிட்டு படுகொலை செய்தனர். மொத்தம் ஒரே குடும்பத்தில் பதினேழு பேர் உயிரிழந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளுக்கும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து திரு.கோணன் உலகநாதன் என்பவர் மட்டுமே உயிர் தப்பினார்.

26.04.1987 அன்று பட்டித்திடல் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது 06)
  2. உலகநாதன் ஜெயரதி (வயது 01 – குழந்தை)
  3. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26 – வீட்டுப்பணி)
  4. கோனன் பத்தினியன் (வயது 42 – தொழிலாளி)
  5. பத்தினியன் சீதையம்மா (வயது 34 – வீட்டுப்பணி)
  6. பத்தினியன் நேசன் (வயது 17 – மாணவன்)
  7. பத்தினியன் பிரகாஸ் (வயது 13 – மாணவன்)
  8. பத்தினியன் சோபனா (வயது 12 – மாணவி)
  9. பத்தினியன் கிருசாந்தி (வயது 10 – மாணவி)
  10. பத்தினியன் அற்புதராசா (வயது 08 – மாணவன்)
  11. கோணன் பொன்னம்மா (வயது 60 – வீட்டுப்பணி)
  12. கோணன் மேரி (வயது 23)
  13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29)
  14. சிந்தாமணி பாலமுருகன (வயது 11 – மாணவன்)
  15. சிந்தாமணி யோகராசா (வயது 14 – மாணவன்)
  16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15 – மாணவி)
  17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30 – கமம்)

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments