×

விடுதலையின் பாதையில் அழியாத தடம் – ராகவன்

1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த ‘ஓயாத அலை’ களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ராகவனையும் தன்னுடன் அணைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று ஏடுகளிற் பெரும் சரித்திரப் பதிவுகளாகிய தலைவர் பிரபாகரனின் படை நடத்தல்களிலெல்லாம் முன் நின்று உழைத்த வீரப்புலி அவன். அவனும் ‘ஓயாத அலைகள் 03’ இன் சரித்திரத்திற்காகத் தலைசாய்க்க அச்சமர் பெருமைமிகு வெற்றியோடு நிறைவுபெற்றது.

ராகவன் இரவும் பகலும் ஓயாது உழைத்து வளர்த்துவிட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் போராளிகள் எதிரியரண்களை உடைத்து உட்புகுந்து புளியங்குளம் வரையும் கைப்பற்றிச் சற்று ஓய்வெடுத்த போது ‘எங்கட சண்டைகளையும் வெற்றிகளையும் பார்த்துச் சந்தோசப்பட ராகவன் அண்ணை இல்லாமற் போய்ட்டாரே’ என்று அங்கலாய்த்தனர். ‘எதிரி அவரைத் தடையிலேயே வீழ்த்திப் போட்டான். பாவம் எதிரி; அவனுக்கு எப்படித் தெரியும்    ராகவன் அண்ணை தான் இப்பவும் எங்கட மனங்களுக்குள்ள இருந்து எங்களை வழிநடத்திறார் எண்டு’ அதுதான் உண்மையில் நடந்தது. ஆம்… தானில்லாத வேளைகளிலும் வீரர்களை வெற்றியின் பாதையில் வழிநடத்தக்கூடிய வழிகாட்டலின் உயரிய தலைமைப் பண்ப எங்கள் தலைவன் வளர்த்தெடுத்த அந்த தளபதியிடம் இருந்தது.

ராகவன்! அற்புதமான போராளி; ஆற்றல் மிக்க போர்த்தளபதி; எல்லோரையும் நேசித்ததால் எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஓர் உயரிய மனிதன்; நீண்ட – ஈடிணையற்ற விடுதலைப் போர் வரலாற்றில் அவன் ஓர் அத்தியாயத்தின் பதிவு. அவனின் வரலாற்றை எழுதுவதானால் ஈழப்போரில் தொண்ணூறுகளில் போரியலில் முக்கியமான வரலாற்றுக் கட்டமொன்றை எழுதியேயாக வேண்டும். அக்கால கட்டத்தின் முக்கியத்துவமான போர்க்களங்களில் எல்லாம் சரித்திரம் படைத்த வீரனவன்.

90-91 காலப்பகுதியில் மாவட்டரீதியில் நடந்த சிறுசிறு தாக்குதல்கள் பலவற்றில் பங்கு கொண்டவன் ராகவன். அந்தப் புலிக்குள்ளிருந்த இராணுவ ஆற்றல்களையும். போராட்டப்பற்றையும். உறுதியையும் மணலாற்றின் சிங்களப் படைகளின் ‘ஒப்பரேசன் மின்னல்’ வெளிக்கொணர்ந்தது. வன்னி மாவட்டத்தின் 1.9 படையணியில் தளபதி தீபனின் வீரர்கள் நூற்றைம்பது பேர் கொண்ட அணியிற் சாதாரண போராளியாக ராகவனும் களம் இறங்கினான். போராட்ட வரலாற்றில் மிகவும் கடுமையான போர்க்களங்களில் ‘மின்னல்’ களமும் முக்கியமானது. ஆணையிறவிற் பாய்ந்த புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டதாக கற்பனை செய்த சிங்களம் தமிழீழத்தின் இதய பூமியை ஆக்கிரமித்து விடுதலைப் போருக்கு முடிவுகட்ட எண்ணியது. பல்லாயிரம் எனத்திரண்டு. நவீனரக ஆயுதங்களை ஒன்றிணைத்து. சிங்களப்படைகள் போரிற் குதித்திருந்தன. எறிகணைகளும் போர்விமானங்களும் இதயபூமியை அதிரவைக்க. குண்டு மழையுட் குளித்தபடி மண்காத்த மறவர்களுள் ராகவனும் ஒருவனாகப் போரிட்டான்.

எந்தவொரு போர்வீரனுக்கும் கடினமான போர்க்களம் அது. அந்தப் போர்க்களத்தின் ஒவ்வொரு நாளும் ராகவனை நன்கு இனங்காட்டியது. உணவும் நீருமின்றி நாட்கணக்காய்ப் போரிட்ட பொழுதெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கி முன்மாதிரியாகச் செயற்பட்ட அந்த வீரனின் செயல்கள் எமது அணித்தலைவருக்குக்கூட உற்சாகத்தை கொடுத்தனவென்றால் அது மிகையல்ல. ‘மின்னல்’ களத்திலேயே சமரின் குறுகிய நாட்களில் தளபதி தீபன் அவர்களால் ஏழுபோர் கொண்ட அணியொன்றின் தலைவனாக்கப்பட்டான். ஒவ்வொரு புலி வீரனும் வரலாற்றிற் பெருமைகொள்ளத்தக்க அந்தச் சமரிற் பங்குகொண்ட 1.9 படையணியில் இறுதியாகத் திரும்பிய ஐவருள் ராகவனும் ஒருவன்.
‘மின்னல்’ முடிந்து சில நாட்களிலேயே சிங்களப் படைக்குப் பேரிடி கொடுத்த முல்லைத்தீவு இராணுவ முகாமின் 3ஆம் கட்டை மினி முகாமின் மீது பாய்ந்த புலியணியில் ராகவன் 15 பேர் கொண்ட அணியின் பொறுப்பாளனாக இருந்தான். சிங்களப்படையினர் பத்துப்பேரின் உடல்களும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்ட அந்தத் தாக்குதலில் ராகவனின் அணி தனது பணியைச் செவ்வனே செய்தது.

1992ஆம் ஆண்டில் ராகவன் நன்கு இனங்காணப்பட்ட அணித்தலைவனாகி விட்டான். அவனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவனது ஆளுமை வெளிப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அந்த வீரன் செய்த பல வெற்றிகரமான அதிரடித் தாக்குதல்கள் சிங்களப்படைகளைக் கதிகலங்கச் செய்தன. வண்ணாங்குளம். கொம்பாவௌ, செட்டிகுளம்… என இக்காலப்பகுதியில் மட்டும் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட வெற்றிகரமான தாக்குதல்களில் அவன் பங்குகொண்டான். குறுகிய காலத்திலேயே வளர்ச்சி கண்ட அந்தப் போர் வீரன் அப்போது 45 பேர் கொண்ட அணியொன்றின் பொறுப்பாளனாக்கப்பட்டிருந்தான். வன்னியில் எதிரியிருந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் அந்தப் புலிவீரனின் துப்பாக்கி சடசடத்தது. வழிநடத்தும் அவனின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

2ஆம் கட்ட ஈழப்போரிற் புலிகள் இயக்கத்தின் போரியல் ஆற்றலை வெளிக்கொணர்ந்து. சிங்களத்தின் போர். அரசியல் அரங்குகளை அதிரவைத்து. உலகின் புருவங்களை உயரவைத்த ‘இதயபூமி 01’. ‘யாழ்தேவி’ ஆகியவற்றுக்கெதிரான முறியடிப்புச் சமர்கள். ‘ஒப்பரேசன் தவளை’ ஆகிய களங்களில் தனது அணியுடன் முக்கிய சண்டைகளில் இறங்கி காத்திரமான வெற்றியை ஈட்டினான்.

ஓவ்வொரு சண்டையிலும் அந்தப் புலியின் ஆளுமை புடமிடப்பட்டது. அந்த வீரனுக்கு அதிஷ;டவசமாக எண்ணிலடங்காச் சண்டைக் களங்கள் கிடைத்தன என்பதை விட அந்த இடங்களிலெல்லாம் அவனின் தேவை அவசியப்பட்டதென்றே சொல்ல வேண்டும். அதனாலேயே ராகவனின் சண்டைப் பட்டியல் நீண்டு கொண்டே போனது. வன்னியில் நிலை கொண்டிருந்த சிங்களத்துப் படைகளுக்கு ஒவ்வொரு முனைகளிலும் ராகவன் பாடம் புகட்டினான். 1995 இல் 3ஆம் கட்ட ஈழயுத்தம் மூண்ட போது ராகவனின் பணி யாழ்ப்பாணம் வரை விரிந்தது. குடாநாட்டைப் பிடிக்கத் தன் பலத்தின் முழுமையையும் திரட்டி இறங்கிய சிங்களத்தின் ‘சூரியக்கதிர்’ நடவடிக்கையை அங்குலக் கணக்கில் நகர வைத்த போர்களத்திலும் ராகவன் போரிட்டான்.
‘சூரியக்கதிர்’ முடித்து புலிகள் இயக்கம் முழுதாக வன்னிக்கு வந்து சேர்ந்த போது ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையில் இணைக்கப்பட்டான்.

ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வந்ததும் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவமானவை. தலைவர்; நம்பிக்கையுடன் அவற்றை அவனிடம் ஒப்படைத்த போது அக்கறையெடுத்து. தனது கடின உழைப்பால் அவற்றையெல்லாம் நேர்த்தியாகச் செய்து முடித்தான்.

யாழ்க் குடாநாட்டை ஆக்கிரமித்து திமிர் கொண்டிருந்த சிங்களத்தின் இராணுவக் கற்பனைகளை அர்த்தமற்றதாக்கிய. ‘புலிகள் ஓய்ந்துவிட்டார்கள்’ எனப் பகற்கனவு கண்டவர்களுக்கு நெத்தியடி கொடுத்த ‘ஓயாத அலைகள் 01’ இல் மிகவும் முக்கியமான பணியொன்று ராகவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிக்காக இரவு பகலாய் உழைத்த தலைவர் அந்தப்பணியை அவனிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த போது அதைத் திறம்படச் செய்து முடித்தான். அத்தளத்தின் பிரதான முகாமின் உயர்பாதுகாப்பு அரண்களைப் பிரித்தெறிந்து. உள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றுவதில் தான் வெற்றியின் நிச்சயத்தன்மை தங்கியிருந்தது. தலைவரின் நம்பிக்கைக்கேற்ப அவன் அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தான். அதனால் தளம் எமது கைகளில் வீழ்ந்தது.

மோதல்கள். சண்டைகள், சமர்கள் எனத் தமிழீழ போரரங்குகளிலெல்லாம் சுற்றிச்சுழன்றான் ராகவன். சண்டைகளால் ராகவன் புடமிட்டான் என்பதிலும், சண்டைகளை ராகவன் புடமிட்டான் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், அப்படித்தான் இருந்தது நிலைமை. அறிவாலும் அனுபவத்தாலும் போரியலில் அவன் உயர்ந்து நின்றான். தனது களச்செயற்பாடுகளில் அவற்றை வெளிக்காட்டித் தலைவரின் தனிப்பட்ட விருப்பைப் பெற்றிருந்தான். தளபதி ஒருவருக்கான கடமைகள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டன.

போர்முனையில் இறுக்கமான கட்டங்களிலெல்லாம் ராகவன் தேவைப்படுவான். எமது படைநடவடிக்கைகள் இறுக்கமான கட்டங்களைச் சந்தித்த பல சந்தர்ப்பங்களில் அவற்றை உடைத்தெறிந்து எமக்குச் சாதகமான நிலைமைகளைப் பெற்றுத்தந்திருக்கிறான். நெருக்கடியான வேளைகளில் எங்கள் மூத்த தளபதியின் கண்களுக்குத் தெரிபவர்களுள் ராகவன் முக்கியமானவன். ‘இக்கட்டான வேளைகளில் நேரிலேயே களமிறங்கி நிற்கும் தலைமைப் பண்பு அவனிடம் இருந்தது’ என்றார் தளபதி கேணல் தீபன். ‘முன்னரங்கப் போர் நிலைகளில் தனது போராளிகளுக்குச் சண்டையில் வைத்தே சண்டை பழக்கும் தளபதி அவன்’ என்று ராகவனின் தலைமைத்துவத்தை நினைவு கூர்ந்தார் களத்தில் நின்ற தளபதியொருவர்.

1997 ஜனவரியில் படைத்தளத்திற் புளியடி பிரதான முகாம் ராகவனின் அணிக்குரிய இலக்காக இருந்தது. வேவு நடவடிக்கையின் படி திட்டமிடப்பட்டு, உரிய முறையிற் பயிற்சிகளெல்லாம் ஆணையிறவு – பரந்தன் படைத்தளங்களிற் புலிகள் இயக்கத்தின் படையணிகள் பாய்ந்த போது முக்கிய முனையொன்றில் ராகவனின் படைநடத்தல் இவனின் அதீதப் போராற்றலை வெளிக்காட்டியது. ஆணையிறவுப் வழங்கப்பட்டிருந்தன. ஆனாற்கள நிலைமைகளோ தழைகீழாக இருந்தன. எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறான கள நிலைமையது. எதிரி உசாரடைந்திருந்தான். எமது நகர்வுகளை அவன் அவதானித்து விட்டதையே எதிரியின் செயற்பாடுகள் வெளிப்படுத்தின. ஓட்டுமொத்தமாகச் சண்டையே குழம்பிவிடுமோ என்று அச்சங் கொண்ட வேளை களத்தில் நேரில் நின்று, தனது இராணுவ அறிவால் துணிச்சலுடன் முடிவெடுத்து, தனது இலக்கை வெற்றி கொண்டுஇ 120 மி.மீ பீரங்கிகள் சிலவற்றையும் மீட்டெடுத்துத்தந்து வெற்றிவாகை சூடினான் ராகவன்.

போரியலில் உயர்ந்து நின்ற எங்கள் போர்த்தளபதி லெப்.கேணல் ராகவன் சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரமான ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையைச் சுக்குநூறாக்குவதற்காக கடுமையாக உழைத்தான். ஜெயசிக்குறுவின் தென்முனையிற் பனிக்க நீராவியிலிருந்து மாங்குளம் வரையிலும் வடமுனையிற் கிளிநொச்சியில் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் அந்தத் தளபதி தன் உயிர்கொண்டு வீரம் விதைத்தான். அவனது உழைப்பின் அறுவடைதான் வரலாற்றிற் பொறிக்கப்பட்டு விட்ட புளியங்குளத்திற் புலிகள் இயக்கம் புரிந்த சாதனைகள். எதிரியின் பாரிய மரபுவழிப் படையெடுப்பை மறித்துப் புளியங்குளத்திலே முகாம் அமைத்து நிலைகொள்வதெனத் தலைவர் அவர்கள் முடிவு செய்த போது தளபதி தீபனுக்கு துணையாக நின்று தள அமைப்புக்காக ராகவன் கடுமையாகத் தன்னை வருத்தினான். புளியங்குளம் முகாமில் தாக்குhல் அணிகளின் பொறுப்பை ஏற்றிருந்த அவன், எதிரியை எதிர்கொள்வதற்கெனச் சகல ஏற்பாடுகளையும் நேரில் நின்ற செய்தான்; செய்வித்தான். புளியங்குளத்தை ‘புலிகளின் புரட்சிக் குளம்’ ஆக மாற்றியதில் ராகவனின் உழைப்புக்கும் அவன் சிந்திய வியர்வைக்கும் முக்கிய பங்கு இருந்தது.

புளியங்குளத்தில் உடலைப் பிழிந்து உழைத்த ராகவனுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. ஓமந்தையில் ‘ஜெயசிக்குறுய்’ படைகளுக்கெதிரான ஊடுருவித் தாக்குதலிற் பிரதான தாக்குதல் அணியின் தலைவனாக அவன் களமிறங்கினான். அந்தச் சண்டையிற் கடின உழைப்பைத் தந்த ராகவனையும் அவனது அணியையும் ஓய்வுக்காக பிண்ணணிக்கு அனுப்பி வைத்தார் தளபதி தீபன். ஆனால் விரைவிலேயே களத்தைத் திறந்து முக்கிய நகர்வொன்றை எதிரி ஆரம்பித்தான். அப்போது அங்கே ராகவன் தேவைப்பட்டான்.

புளியங்குளத்தில் முகாம் அமைத்து நிலைகொள்ள எடுத்த எமது இயக்கத்தின் முடிவிற்குச் சவாலாக அமைந்திருந்தது எதிரியின் அன்றைய நகர்வு. எமது பாதுகாப்பு அரண்கள் இல்லாத பகுதியை நோக்கிச் சன்னாசிப்பரந்தன் ஊடாக புளியங்குளத்தை நெருங்கிக் கொண்டிருந்தான் எதிரி. இக்கட்டான சூழல், எதிரியின் முன்னேற்றத்தை உடனடியாகவே முறியடித்தாக வேண்டும். அந்தப் பலப் பரீட்சையில் நிச்சயம் நாம் வென்றேயாக வேண்டும். தளபதி தீபனின் கண்களுக்குள் ராகவன் நின்றான். ‘நான் செய்து முடிப்பன்’ ராகவனின் உருவம் சொல்லாமற் சொன்னது. ராகவன் உடனடியாகவே களமிறக்கப்பட்டான்.

போராளிகள் முப்பது பேரை மட்டுமே கொண்ட அணியுடன் ராகவன் களமிறங்கினான். எதிரியை வழிமறித்து, ஊடறுத்து எமது பாதுகாப்பு நிலைகளை அமைக்கக் கூடிய பகுதியொன்றினூடாக ராகவன் தனது அணியுடன் உட்புகுந்தான். எதிரியோ மிகக் கடுமையாகச் சண்டை செய்தான். எந்தக் கட்டத்திலும் விட்டுக் கொடுக்க எதிரி தயாரில்லை. களத்தில் ராகவன் நின்றதால் எல்லோர் மனத்திலும் நம்பிக்கை இருந்தது. தங்களுடன் ராகவனும் நின்றதால் களத்திலிருந்த போராளிகளிடம் உற்சாகம் பிறந்தது. இறுதியில் எதிரியைச் சின்னாபின்னமாக்கி அந்தக் கடினமான சண்டையை எல்லோரும் நம்பிக்கை வைத்தபடியே செய்து முடித்தான் அந்தப் புலிப்போர்த் தளபதி. புளியங்குளத்தைப் புலிக்குகையாக்க உழைத்த அந்த வீரன் இறுதியிற் சவாலாக வந்த எதிரியின் நகர்வை எதிர்கொண்டு அந்தப் புலிக்குகையைக் காத்தான். எதிரிக்கு புலிகள் பற்றிப் பாடம் புகட்டினான்.

தென்முனையில் தமது இயலாமையை உணர்ந்து கொண்டுஇ வடமுனையிற் கிளிநொச்சி ஊடாக புதிய களமுனையொன்றைத் திறப்பதற்கு எதிரி தயாராகி வந்த போது ‘ஜெயசிக்குறுய்’ எதிர்ச் சமரின் துணைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனுடன் கிளிநொச்சிக் களமுனைக்குப் புறப்பட்டான் ராகவன். அங்கே அந்தப் போர்த்தளபதி தமிழீழத்தின் புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியானான். அப்போது கிளிநொச்சித் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அந்த வீரன் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. 1998 பெப்ரவரியிற் கிளிநொச்சித் தளத்தின் மீது புலிகள் பாய்ந்து தளத்தின் தென்பகுதியை வீழ்த்திய போது அப்பகுதியிற் சண்டைக்காக நியமிக்கப்பட்ட எமது ‘ராங்கி’ அணியின் நகர்வு வழிநடத்துனனாக ராகவன் இருந்தான். அதன்பின் எமது முன்னணி அரண்களை எதிரிக்குக் கிட்ட நகர்த்தி, எதிரியை அச்சுறுத்திப் பாதுகாப்புப் பணியில் அவன் நின்றான். அவனது உழைப்புக்குச் சவாலாக எதிரி எழுந்த ஒவ்வொரு தடவையும் ராகவன் பாடம் புகட்டினான். அவன் புகட்டிய பாடங்கள் இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் அவர்களால் என்றைக்குமே மறக்கமுடியாத அளவு முக்கியத்துவம் பெற்றவை.

1998 ஜூன் நான்காம் நாளன்று கண்டி வீதிக்கு மேற்குப் புறமாகப் பல முனைகளில் எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரியின் முன்னணிப் படையணிகள் உட்புகுந்து விட்டன. முன்னணி அரண்களிற் குறிப்பிடக்கூடிய பகுதியை எதிரி கைப்பற்றிவிட்டான். அப்பகுதியில் நிலைகொண்டிருந்த எமது அணிகளும் சேதமடைந்தன. மிகவும் நெருக்கடியானதொரு களநிலைமை. உடனடியாகவே எதிரியை முறியடிக்க வேண்டும். தளபதி கேணல் தீபன் அனுப்பிவைத்த உதவியணிகனை வைத்து அவரின் கட்டளையின் கீழ் களத்தில் நின்று படை நடத்தினான் ராகவன். நீண்ட நேர ‘மரணச்சண்டையின்’ பின் எதிரியை ஊடறுத்து. முற்றுகைக்குள்ளாக்கி உள்நுழைந்தவர்களை அழித்து முடித்துத்தான் மூச்சுவிட்டான். சிங்களத்தின் முன்னணித் தாக்குதற் படையில் 200 பேருக்கும் மேலான வீரர்கள் சிதறிச் சின்னாபின்னமாகி வீழத் தமிழர் சேனை வெற்றிவாகை சூடியது. எதிரியின் 50 உடல்களும் ஏராளம் ஆயுதங்களும் மீட்கப்பட அந்த வெற்றித் தாக்குதலை நேர்நின்று செய்வித்தவன் தளபதி ராகவன்.

மீண்டும் நான்கு நாட்களில் அடிபட்ட பாம்பு போற் சீறிச் சிங்களப் படைகள் முன்னேறி வந்தன. இம்முறையும் சிங்களத்தின் குறி ராகவனின் அதே பகுதி தான். எமது காவலரண் வரிசையைப் பலமுனைகளால் உடைத்து உட்புகுந்து விட்டான் எதிரி. இம்முறையும் அதே இறுகிய சூழல், சென்ற தடவை போலவே இப்போதும் சிங்களப்படைகளுக்குப் பாடம் புகட்டினான் ராகவன். சீறிய பாம்புகள் உயிரைவிட, எஞ்சியவை பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயின. அந்த நாட்களில் எங்கள் தளபதியின் படைநடத்தலாற் கிளிநொச்சி மண் தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவுகளைப் பெற்றுக் கொண்டது.

போரியலில் முதிர்ச்சி பெற்றிருந்த அந்த வேங்கை இப்போது எதிரியாலும் நன்கு அறியப்பட்டிருந்தான். ராகவன் என்றால் யார் என்பதைத் தனது படைநடத்தல் மூலம் எதிரிக்குச் சொல்லி வைத்திருந்தான் அவன். ராகவன் நிற்கும் பகுதியென்றாலே எதிரி அதீத கவனம் எடுப்பான். ஏனெனில், ராகவனிடம் ‘பாடம் படிப்பதற்கு’ சிங்களத் தளபதியால் இனியும் உயிர் விலை செலுத்த முடியாது.

1998 ஒக்டோபர் மாதத்தில் ராகவனின் சுமை இரட்டிப்பானது. ‘ஓயாத அலைகள் 02’ இற்காக இயக்கம் தயாராகிக்கொண்டிருந்த காலப்பகுதி அது. ஓய்வுறக்கமின்றித் திரிந்தான் ராகவன். முன்னணி நிலைகளில் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது. பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளை உற்சாகப்படுத்தி அதைத் திறம்படச் செய்விப்பது என எல்லாவற்றிலும் அவன் உழைத்தான்.

‘ஓயாத அலைகள்02’ புலிகள் பாய்வதற்கான நாள் வந்தது. தலைவனைச் சந்தித்துத் திட்டங்களை அறிந்து புலிச்சேனை தயாராகியது. பிரதான பகுதியொன்றின் துணைத்தளபதியாக ராகவன் நியமிக்கப்பட்டான். எனினும். அந்தக் களப்பகுதியில் அவனையொத்த அனுபவம் வாய்ந்தவர்கள் களமிறக்கப்பட்டிருந்ததால் தளபதி கேணல் தீபனின் கட்டளை மையத்தில் ராகவன் நிற்கப் பணிக்கப்பட்டான். அந்த நடவடிக்கையில் முன்னணிக் காவலரண்களைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்பாக இருந்த தளபதி தீபனுக்கு உதவியாக அவன் செயற்பட்டுக்கொண்டிருந்தான்.

முதல்நாட் சண்டை உக்கிரமான கட்டத்தை எட்டியது. எமது கைகளிற் காவலரண்கள் வெற்றிகரமாக வீழ்ந்தன. ஆயினும், அன்றைய தொடர் சண்டையில் அவற்றில் அநேகம் எதிரியின் கைக்கு மீண்டும் மாறின. சண்டை நிலைமைகள் எதிரிக்குச் சாதகமாக மாறிவிட்ட சூழல். எப்படியாவது அந்த நிலைமையை மாற்றியமைத்தேயாக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிக்கல்களை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்போது ராகவன் களத்திற்குப் போக வேண்டியிருந்தது. நிலைமையை உணர்ந்து கொண்டு தளபதி தீபனிடம் அனுமதி பெற்று அணியொன்றுடன் எமக்கச் சாதகமற்ற பட்டப்பகலிற் களமிறங்கினான் ராகவன்.

எதிரி மிகுந்த உளவியற் பலத்துடன் உற்சாகமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, எமது அணிகள் பின்னடைவைச் சந்தித்து நின்ற முனையொன்றினூடாக ராகவன் களமிறங்கினான். எதிரியின் அத்தனை துப்பாக்கிகளும் உதவியணிகளைத் தடுக்கும் பொருட்டு ராகவனின் அணியைக் குறிவைத்துத் தாக்கின. எதிரியின் குண்டு மழைக்குள்ளால் தனது அணியுடன் உள்ளே போய்ச் சேர்ந்தான் எங்கள் தளபதி. ஏதிரியை அடித்துப் பின்நகர்த்திக் காயப்பட்ட, வீரச்சாவடைந்த போராளிகளை பின்னே அனுப்பி வைத்துவிட்டு, அணிகளை ஒழுங்கமைத்துச் சண்டையைத் தொடர்ந்தான் அவன். எதிரியின் முறியடிப்புப் பற்றிய கற்பனைகளையெல்லாம் தகர்த்துச் சண்டையணிகளை முன்னகர்த்திக் களநிலையை மாற்றியமைத்தான் ராகவன். ‘ராகவன் ஓயாத அலைகள் 02 வெற்றியின் திறவுகோல்’ என்றார் தளபதி கேணல் தீபன்.

‘ஓயாத அலைகள் 02’ இன் சில மாதங்களின் பின் ராகவனை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையின் சிறப்புத் தளபதியாக தலைவர் நியமித்தார். தலைவரால் பற்பல எதிர்பார்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட புகழ்பூத்த படையணியொன்றிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ராகவன், தலைவரின் எதிர்பார்ப்பைத் திறம்படச் செய்து முடிக்க வேண்டும் என்ற பேரவாவுடன் மேலும் மேலும் கடுமையாக உழைத்தான். படையணிக்குப் புதிதாக வந்த போராளிகளை வைத்து அந்தச் சண்டைப் படையணியின் போர்த்திறனை மேலும் மேலும் வளர்க்க ராவகன் அயராது பாடுபட்டான். அவனது உழைப்பின் அறுவடைக்கான நாளும் வந்தது.

‘ஓயாத அலைகள் 03’ தாக்குதல் திட்டம் விளக்கப்பட்டது. பிரதானமான சண்டை முனையொன்றின் நேரடித் தளபதியாக ராகவனைத் தலைவர் நியமித்தார். நம்பிக்கையுடன் தலைவர் தன்னிடம் ஒப்படைத்த பணியைத் தனது படையணியை வைத்து வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்காக அவனது மூளை இடையறாது சிந்தித்தது. விடுதலைக் களத்தில் ஓயாது சுழன்ற அந்தப் புயல் ‘ஓயாத அலைகள் 03’ இன் அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. பரதான முனையொன்றினூடாகக் களத்தைத் திறந்தது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சண்டை இறுக்கமான சூழலிற் சிக்கியிருந்தது. போராளிகள் தடுக்கத் தடுக்க ராகவன் எப்போதும் போலவே தனக்கான எல்லையைக் கடந்து முன்னேறினான். குண்டு மழைக்குட் குளித்தபடி சண்டையணியின் முன்வரிசையில் எங்கள் தளபதி நின்றான். குண்டொன்று நேராய் அவன் நெற்றியைத் துளைக்க ராகவன் வீழ்ந்தான். பறிபோகவிருந்த எத்தனையோ வெற்றிகளை மீட்டுத்தந்த அந்தத் தளபதி அமைதியாக அடங்கிப் போனான்.

சிறப்புத் தளபதி
லெப். கேணல் ராகவன்
சின்னையா சுவேந்திரராஜா
வவுனியா

நினைவுப்பகிர்வு – அ.  பார்த்தீபன்
படிப்பகம் இதழ்

விடுதலையின் பாதையில் அழியாத தடம் – ராகவன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments