×

சுப்பிரமணியம் அம்பலவாணர்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1910) ஆசியாவில் Fellow of the Royal Astronomical Society (FRAS) பட்டம் பெற்ற முதல் வானியல் நிபுணர் ஓர் ஈழத்தமிழர் என்பது பலர் அறிந்திராத விடயம். அவரது பெயர் சுபிரமணியம் அம்பலவாணர்.

வானியல் நிபுணரான ஐசக் நியூட்டனின் நன்மதிப்பைப் பெற்ற தோமசு கெலி என்பவர் ஓர் வால்வெள்ளியை 1704 இல்  கண்டறிந்து, 1758 இல் அது மீண்டும் தோன்றுமென அறிவித்தார். ஆனால் அது மீளத் தென்பட்டபோது தோமசு கெலி உயிருடன் இருக்கவில்லை. அதனால் அந்த வால்வெள்ளிக்கு அவரது பெயரைச் சூட்டினார்கள்.

பின்னர் மீளவும் அவ்வால்வெள்ளி எப்போது தோன்றுமென யாரும் கண்டறியாத நிலையில், யாழ்.கல்லூரியில் ஆசிரியராயிருந்த அம்பலவாணர், அது மீண்டும் 1910 இல் தோன்றுமெனக் கணித்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்காக இவருக்கு இங்கிலாந்து அரசு  FRAS என்ற பட்டமும், சான்றிதழும் வழங்கி மதிப்பளித்தது. யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையத்தில்  இச் சான்றிதழ் இன்னும் இருப்பதாகச் சொல்கிறார்கள். 1921 ஆம் ஆண்டில் இவ்விருதைப் பெற்ற உலக விஞ்ஞானிகளில் ஆசியாவைச் சேர்ந்த முதலாவது நபர் ஈழத்தமிழர் என்பது இப்பொழுது வரலாறுகளில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.

சுப்பிரமணியம் அம்பலவாணர் 1865 ஆம் ஆண்டு காரைநகர் – பயிரிக்கூடல்  என்ற இடத்தில் கந்தப்பர் சுப்பிரமணியம், பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1876 ஆம் ஆண்டு பரவிய கொடிய பேதி நோயின் காரணமாக பெற்றோர் இருவரும் இறந்துவிட, அம்பலவாணர் அவரது சித்தப்பாவான கந்தப்பர் சரவணமுத்து என்பவருடன் வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் பள்ளிகள் இல்லையென்பதால் திருமதி சேதி நாகமுத்து என்பவரிடம் திண்ணைப் பள்ளியில் பயின்று வந்தார்.

கார்த்திகேசு என்பவரிடம் தமிழையும் இலக்கியங்களையும் முறைப்படி கற்றார். 1881 ஆம் ஆண்டு தெல்லிப்பளை ஆசிரியர் கல்லூரியில் அனுமதி பெற்று கல்வியை முடித்து , கிறித்தவ மதத்தைத் தழுவி அலன் அம்பலவாணர் ஆனார். பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில், திசைநாயகம் என்பவரால் இணைக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். இக்காலத்திலே இவரது விஞ்ஞான அறிவைக் கண்டு ஆச்சரியமடைந்த அறிஞர்கள் பலர். 1891 இல் தமிழ்ப்பேராசிரியராக யாழ்ப்பாணக்கல்லூரியில் அமர்த்தப்பட்டார்.

பேராசிரியராக பணிபுரிந்தபடியே, Senior Local  என்ற தேர்வை 1886 இலும், சென்னை Metriculation தேர்வை 1889 இலும் எழுதித் தேர்வடைந்தார். 1893 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் F.A  மற்றும் B.A  தேர்வுகளிலும் தாமாகவே கற்றுத் தேர்வடைந்தார். பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் வானவியல் கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.  பின்னர் முத்தாச்சி என்பவரை மணமுடித்து; கனகசுந்தரம், அருளையா, என இரு மகன்களையும்  ஆச்சிமுத்து என்ற மகளையும் பிள்ளைகளாகக் கொண்டார். இவரது விஞ்ஞான, வானவியல் கட்டுரைகளை உதயதாரகை , Royal Astronomical Society ஆகிய சஞ்சிகைகள் தாங்கிவந்தன. காரைநகரிலிருந்தபடியே  வானமண்டலத்தையும் , விண்மீன்களையும் தொடர்ந்து ஆய்ந்துவந்தார்.

1910.05.19 அன்று  கெலியின் வால்வெள்ளி 9.00 – 10.00 மணிக்கிடையில் வான்வெளியில் தோன்றுமென முன்னமேயே கூறி உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கூறியவாறே சரியாக கெலியின் வால்வெள்ளி வானில் தோன்ற உலகமே மலைத்துப்போய் அம்பலவாணரைத் தேடத்தொடங்கியது.  உடனேயே இங்கிலாந்து வானியல் ஆய்வு நடுவம் இவருக்கு Fellow of the Royal Astronomical Society என்ற விருதை வழங்கி மதிப்பளித்தது. இயல்பான ஆசிரியர் ஒருவர் பெறமுடியாத விருது இது.

வானவியலுடன் இசை, தமிழ் இலக்கியம், வேளாண்மை, குமுகாயப்பணி ஆகியவற்றிலும் சிறந்து விளங்கிய அம்பலவாணர் இயற்றிய எட்டு கிறித்தவ தமிழ்ப் பாடல்கள்  தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்தின் வழிப்பாட்டுக்கு நூலில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை சைவத் திருமுறைகளையும்  கோயில்களில் இசையுடன்  பாடிவந்தார். ஒரு முறை ஐயா.பொன் இராமநாதன் காரைநகருக்கு அழைக்கப்பட்டிருந்த வேளை, அவர் வருவதற்குரிய நாழிகை கழிந்த நேரத்தில், மக்கள்  அவசரப்பட, சைவத் திருமுறைகளைப் பாடி மக்களை அமைதிப்படுத்த, இவரது செயலைக் கண்டு  மக்கள் வாயடைத்துப் போய், மெய்யுருகி நின்றனர்.

நாள்தோறும் வயலுக்குச் செல்வது இவரது கடைமைகளில் ஒன்றாகும்.  1914 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டார். புத்திசீவிகள் எனப்படுவோரின் பொறாமையும், புகைச்சலும் இவரை உள அளவில் பாதிப்படையைச் செய்ததே அவர் தம்மைக் கல்லூரியில் இருந்து விடுவித்துக்கொண்டதற்கான அடிப்படை என்று சொல்லப்படுகிறது. 30 வருடங்களாக அரும்பணியை ஆற்றி; 1922 ஆம் ஆண்டு June மாதத்தில் காலில் ஏற்பட்ட புண்ணுக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனையை நாட்டியவர் திரும்பி வரவில்லை. 01.07.1922 அன்று அவர் இயற்கை எய்தினார்.

1910 ஆம் ஆண்டு கெலியின் வால்வெள்ளியின் உருவத்தைச் சரியாகக் கணித்த இவரை, வால்வெள்ளி ஆய்வு செய்யும் இன்றைய மேற்கத்தைய நாடுகள் புறக்கணித்துவிட்டன. ஆனாலும் இவரது பெயரும், இங்கிலாந்து வழங்கிய பட்டமும் உலகுள்ளவரை அழியாதிருக்கும். இம்மாதம் இவரது 101 வது  ஆண்டு நினைவாகும். ஈழத்தமிழர் நாம் இவரது புகழை உலகெங்கும் பரப்புவோம்.

(நன்றி ஈழநாடு, Voice of Global Tamil Right )

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments