×

ஊர் நோக்கி – உருத்திரபுரம் 

இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமம் உருத்திரபுரம். புராதண பழமை வரலாறுகள் வரலாற்று அமசங்கள் கொண்ட கிராமம்  உருத்திரபுரம் அல்லது உருத்திரபுரிஸ்வரம் என்னும் பெயர்கள் இக்கிராமத்துக்கு உண்டு. உருத்திரபுரம் மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு, புதுமுறிப்பு சிவநகர், சக்திபுரம் என்னும் கிராம சேவகர் பிரிவுகளை அடக்கி கிராமம் இதுவாகும்.

உழவுத்தொழில் முக்கியமானதாகவும் மருத நிலம் சுற்றிலும் காணப்படும். இரணைமடு அன்னையின் நீரின் செழிப்பில் வயல்கள் பச்சை கம்பளம் விரிக்கும் அழகு மிக்க கிராமமாகும். சைவத் தமிழ் செழித்தும் கிருத்தவ ஆராதனை இணைந்த மத நல்லிணக்கம் காணும் கிராமம் உருத்திரபுரமாகும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மற்றும் சோழர்கால தொல்லியல் அடையளங்களுடன் காணப்படும் மிகத் தொன்மையான தமிழ் கிராமமாகும். கல்விச் செழிப்பும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும் இக் கிராமம் சிறப்புப் பெற்றது.  கிராமத்தில் கபடி கால்பந்து விளையாட்டு வீரர்கள் இலங்கை நாட்டின் தேசிய அணியில் விளையாடும் பெருமை இந்த கிராமத்தக்கு  உண்டு. பல மாவீரர்களையும் போராளிகளையும் போர்க்கால வீர வரலாறுகளையும் தன்னுள் கொண்ட கிராமம் உருத்திரபும்.

இங்கு காணப்படும் ஆலயங்கள்:
01. உருத்திறபுரீஸ்வரம் சிவாலயம்
02. உருத்திரபுரம் அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
03. உருத்திரபுரம் அருள்மிகு சக்திபுரம் முருகன் கோயில்
04. ஆலடி சித்தி விநாயகர் ஆலயம்
05. பாலையடி அருட்செல்வ விநாயகர் கோயில்
06. புதுமுறிப்பு சித்தி விநாயகர் ஆலயம்
07. கிருஸ்தவ ஆலயங்கள்

சிறுதெய்வ வழிபாடும் உருத்திரபுரம் பிரதேசமும்:

01 வைரவர் ஆலயங்கள்
02.விநாயகர் ஆலயங்கள்
03. நாகதம்பிரான் ஆலயங்கள்
04. அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் – எள்ளுக்காடு
05. பொறிக்கடவை கண்ணகி அம்மன் ஆலயம்
இவ்வாலயமும் பழமையானது.
06. மனோன்மணி அம்மன் ஆலயம் (நாகமணி மீனாட்சி அம்மன்) 3ம் குறுக்கு
07. ஆலடி முத்துமாரி அம்பாள் ஆலயம் (ஆலடி அம்மன்) 3ம் குறுக்கு
08. ஐயனார் ஆலயம் 3ம் குறுக்கு

உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலைகள்:

உருத்திரபுரம் மகாவித்தியாலயம்
சிவநகர் வித்தியாலயம்

யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய யுத்தத்தின் தாக்கமும், அதேபோல் போர்த்துக்கேயருக்கும் அடுத்து ஒல்லாந்தருக்கும் அதன் பின் ஆங்கிலேயருக்கும் எதிராக வன்னி சிற்றரசு  நடத்திய யுத்தங்களின் தாக்கமும், அக்காலத்தில் இப்பகுதியில் அதாவது கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பெருநிலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அப்பகுதியை விட்டு இடம்பெயரக் காரணமாக அமைந்தன.
இதனால் அப்பிரதேசத்திலிருந்த ஆலயங்கள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டன.

கொழும்பு தொல்பொருட்காட்சியகத்தில் 1976ஆம் ஆண்டளவில் காணப்பட்ட நடராஜர் திருவுருவச் சிலையொன்றில் இச்சிலை கி.மு. 2ஆம் நூற்றாண்டு காலத்திற்குரியதென்றும், அது கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டதென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த சிலை 1980களில் அகற்றி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் கி.மு. நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் இருந்ததென்பது வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தக்கூடியதாயுள்ளது.
அழிவுற்ற நிலையிலிருந்த இச்சிவாலய இடிபாடுகள் கி.பி. 1882 செப்டெம்பர் மாதம் 02ஆம் நாள் அன்றைய பிரித்தானியர் கால யாழ்ப்பாண அரசாங்க அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியிலே வெளிக்கொணரப்பட்டது.

உருத்திரபுரக்குளத்தின் அருகாமைக் காட்டில் இவ்வழிவுற்ற சிவாலயமானது பொதுமக்கள் உதவியுடன் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதுடன் இவ்வாலய வரலாறும் வெளிக்கொண்டு வரப்பட்டது.

இலங்கைத் தீவில் வரலாற்றுப் பழைமை கொண்ட சிவாலயங்களில் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரமும் ஒன்று. இச்சிவாலயமானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பிரதேச தமிழ் சைவ மக்களின் இருப்பையும் பழைமையையும், சிறப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாகவுள்ளது. ஒரு சமூகத்தின் வரலாற்று ஆதாரமாக இருப்பவற்றில் முக்கியமானது அவர்களது வழிபாட்டுத் தலங்களாகும்.
அந்த உண்மையையுணர்ந்து தமிழர்கள்  தமது வழிபாட்டுத் தலங்களின் வரலாற்றைப் பேணுவது அவசியமானதாகும். தற்போது புனருத்தாபனம் செய்யப்பட்டுள்ள இச்சிவாலயத்தில் நித்திய பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வருவது பெருமைக்குரியது.

இவ்வளவு பெருமைக்குரிய கி மு முற்பட்ட காலத்துக் கிராமங்கள் கிளிநொச்சியில் உண்டு. ஆனால் 1953  ல் குடியேற்ற மாவட்டம் கிளிநொச்சி என்னும் கரத்திலே பல விடையங்கள் அரச ஆவணங்களில் காணப்படுகிறது.
தமிழர்களின் வரலாற்று அம்சங்களை பேணுவதும் காப்பதும் எமது கடமையாகும். எந்த விடையத்தையும் வரலாற்றுப் பார்வையிலும் எதிர்கால நலத்திலும் கவனத்தில் கொண்டு உண்மையை எழுதும் போது தமிழர்களின் இருப்பை வழப்படுத்தும்.

இன்றும் பல வரலாற்று தொல்லியல் பொருமைக்குரிய மதிப்பு மிக்க கிராமம் உருத்திரபுரமாகும் அதன் வரலாற்றை அறிதலும் பாதுகாத்தலும் அவசியமாகும்.

வட்டக்கச்சி
வினோத்

உசாத்துணை
த. மனோகரன் கட்டுரை
மற்றும் இணையக் கட்டுரை
வாய்மொழி வரலாறு

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments