அல்லைப்பிட்டிப் பிலிப்பு நேரியார் தேவாலயப் படுகொலை – 13 ஆவணி 2006
யாழ்ப்பாணத்தின் கரையோரமாக அமைந்திருக்கும் தீவுகளில் அல்லைப்பிட்டியும் ஒன்றாகும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே அல்லைப்பிட்டிக்கு சமீபமாக சண்டை ஆரம்பித்ததும் மக்கள் அடைக்கலம் புகுந்த பிலிப்பு நேரியார் தேவாலயப் பக்கமாக இராணுவத்தினர் கண்டபடி சுட்டார்கள். இதில் பல எண்ணிக்கையானோர் இறந்ததாக கூறப்படுகின்றது. இது இன்றுவரை பதிவுக்குட்படுத்தப்படவில்லை.
இந்த செல்தாக்குதல் சம்பவத்தைக் கண்ட பில்ப்நேரி தேவாலய பங்குத்தந்தை ஜிம் பிறவுணும் இராணுவத்தினரால் காணாமல் போகச் செய்யப்பட்டார். இந்தச் செல்தாக்குதலுக்கு ஆளான தன்னை இனம்காட்ட விரும்பாத இளம் பெண் ஒருவர் பின்பு இந் நிகழ்வு தொடர்பான தமது அனுபவம்பற்றி எழுதியுள்ளார். அந்த இரவின் நிகழ்வு தொடர்பாக வேறு பதிவுகள் இல்லாததால் அவரது பதிவு மிகவும் முக்கியமானது. அவரது கூற்றுப்படி எல்லா இடத்தையும் சுற்றி செல் விழுந்து வெடித்தவண்ணம் இருந்ததால் தாங்கள் மாட்டிக் கொண்டதாக நினைத்தார்கள். அவர்கள் பிலிப்பு நேரியார் தேவாலயத்தில் அடைக்கலமடைந்தனர். பின்பு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தேவாலயத்திற்கு வந்து அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அழித்தனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மக்களை கேடயமாக பாவித்ததோடு தமது முகாமுக்கு அண்மித்தும் அவர்களை கைவிட்டனர். எனவே மக்கள் செல்தாக்குதலுக்கு மத்தியில் மீண்டும் தேவாலயத்தை நோக்கிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இராணுவத்தின் நோக்கை மக்கள் உணர்ந்து கொள்ளும்வரை பலமுறை இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொண்டனர். சில மணித்தியாலங்களுக்கு பிற்பாடு செல்தாக்குதல் நேரடியாக தேவாலயத்துக்கு வந்தது. கடலிலிருந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தநேரத்தில் பலர் இறந்துவிட்டார்கள் பெற்றோரை பிள்ளைகள் இழந்தனர். இந்த அக்கிரமத்தின் பின்பு உடல்களை மீட்பதற்கு பங்குத்தந்தை ஜிம் பிறவுணும் முயன்றபோது இராணுவம் அதையும் தடுத்தது. இன்றுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பதிவுக்குட்படுத்தப்படவில்லை.
தமிழினப் படுகொலைகள் (1956 – 2001) 1ஆம் தொகுதியில் குறிப்பிடப்பட்ட 1990இல் இடம்பெற்ற பெரும்தொகையானோர் காணாமல் போன சம்பவத்தின் மையமாக இதே பிலிப்பு நேரியார் தேவாலயம் விளங்குகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிலிப்பு நேரியார் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீதான எறிகணைத் தாக்குதலும் அமைகின்றது.
13.08.2006 அன்று அல்லைப்பிட்டிப் படுகொலையில் உயிரிழந்த மக்களின் விபரம்:
01. யோகன் றொபிற் (வயது 41)
02. மரிமஞ்சுளா (வயது 45)
03. மெனிஸ் (வயது 19)
04. மைக்கல் (வயது 55)
05. நடராஜா (வயது 60)
06. தெய்வகுமார் (வயது 28)
07. உதயகுமார் (வயது 35)
08. ஞானப்பிரகாசம் (வயது 70)
09. றமேஸ் (வயது 26)
10. தேவநாயகி (வயது 30)
11. வேலிகை (வயது 20)
12. ஆனந்தம் (வயது 51)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 2002 – 2008 நூல்.