தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.
தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது.