×

1958ஆம் ஆண்டு இனக்கொலை

1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம்  ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத் தமிழர் தரப்பினர் 1956ஆம் ஆண்டு யூன் மாதம்  ஐந்தாம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் சிங்களம் மட்டும் சடடத்திற்கு எதிராகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் சிங்களக் காடையர்களால் வன்முறை பிரயோகிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 1957ஆம் ஆண்டு தமிழர் தரப்பினர் திருகோணமலைக்குப் பாதயாத்திரை சென்று அங்கு ஒரு மாநாடு நடாத்தினார்கள். பண்டாரநாயக்கா அரசிற்கு ஒரு வருட காலக்கெடு கொடுத்து அதற்குள் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கொடுக்கவேண்டும் என்றும் தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகளுக்காக பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் திருமலை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு அமைய பண்டாரநாயக்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தான் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, தந்தை செல்வநாயக்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தார். இதன் விளைவாக 26.07.1957 அன்று தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியோடு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஒரு உடன்படிக்கை செய்தார். இதுவே புகழ்பெற்ற 1957 பண்டா – செல்வா உடன்படிக்கையாகும்.

இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா கண்டிக்குப் பாதயாத்திரை போனார். அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியானது “முதல் காலடி” (First Step) என்ற வெளியீட்டையும் வெளியிட்டு இனவாதப் பரப்புரையில் ஈடுபட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரை நாளேடான  “சியரட்ட” (Siyaratta) மிக மோசமான இனவாதப் பரப்புரையைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டது. கண்டிக்குப் பாதயாத்திரை போகப் புறப்பட்ட ஜே.ஆர் இன் பாதயாத்திரை இம்புள்கொட என்ற இடத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தலைமையில் வந்த இன்னொரு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பண்டாரநாயக்காவைப் பதவிக்குக் கொண்டுவந்த பிக்கு பெரமுனவைச் சேர்ந்த பௌத்த பிக்குமாரும், ஜாதிக விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த வெலிமடை எம்.பி கே.எம்.பி இராஜரட்னாவும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அதிபர் மெத்தானந்த போன்றவர்களும் சிங்கள தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆர்.ஜி. சேனநாயக்கா போன்றவர்களும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பண்டார நாயக்காவுக்கு அழுத்தம் கொடுத்ததுடன், பிரதமர் பண்டார நாயக்காவின் கொழும்பு ஏழு, றொஸ்மீட் பிளேசிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்னால் பண்டா – செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறியுமாறு முழக்கமெழுப்பினார்கள். அவர்களது முழக்கத்திற்கும், வேண்டுகைகளுக்கும் அடிபணிந்த பண்டாரநாயக்கா, தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொண்ட பண்டா – செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறிந்தார்.

இதனைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு மே மாதம் இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு ஆகிய திகதிகளில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வவுனியா மாநாட்டிற்கு வருகைதந்து கொண்டிருந்த மட்டு – அம்பாறையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் பயணம் செய்த தொடருந்து பொலநறுவை மாவட்டத்தில் கிங்குராகொட என்னும் தொடருந்து நிலையத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டுச் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார்கள்.

இதே காலப்பகுதியில் நுவரெலியா மாநகரசபையின் மேஜர் செனிவிரட்ண மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வைத்து தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டார். பிரதமராக இருந்த பண்டாரநாயக்கா இதைப் பெரிதுபடுத்தி இலங்கை வானொலியில் பரப்புரை செய்தார். இதைத் தொடர்ந்து தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலை வெடித்தது. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாணந்துறையில் சிறீ கதிர் வேலாயுத சுவாமி கோயிற் குருக்கள் ஆலயத்திற்குள் வைத்து உயிரோடு கொழுத்தப்பட்டார். பொலநறுவை அரசினர் வைத்தியசாலையில் சிங்கள மக்களுக்குச் சிகிச்சை அளித்த தமிழ்த் தாதியான பாலிப்போடி என்பவரின் மனைவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். இவ்வளவும் நடந்தும் பண்டாரநாயக்காவினுடைய அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ அல்லது ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ இல்லை. தமிழர்கள் தாக்கப்படுவதாக புகார் செய்யப்பட்டபோதும்  பண்டாரநாயக்கா தமிழர்கள் பட்டு அனுபவிக்கட்டும் (Let them taste their own flesh) என்று கூறினார்.

இந்த இனக்கொலையின் போது தமிழ் மக்களின் பல வீடுகள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டன. பல தமிழ்க் குழந்தைகள் கொதிக்கும் தாரில் போடப்பட்டார்கள். மேலும், இக்கட்டத்தில் இலங்கையில் தங்கியிருந்த பிரபல ஆங்கிலப் நாளேட்டாளரான டாசி வித்தாச்சி அவர்கள், பண்டாரநாயக்கா அரசினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின் தனது தாய் நாட்டிற்குச் சென்று “அவசரகாலச் சட்டம் ஐம்பத்தெட்டு”  என்ற நூலை எழுதி வெளியிட்டார். இன்று இந்நூல் உலகப் புகழ் பெற்ற நூலாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் எல்லாமாக முன்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அக்காலகட்டத்தில் வெளியான நாளேடுகள் வாயிலாக அறியமுடிகின்றது. பல நூற்றுக்கணக்கான மக்கள் வெட்டி அங்கவீனப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன, அவர்களது உடைமைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இக்காலகட்டம் பற்றி எத்தகைய விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எத்தகைய நிவாரணமோ நட்டஈடோ வழங்கப்படவில்லை.

 

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments