×

அதிகாரம் 67 – வினைத்திட்பம்

குறட் பாக்கள்

குறள் #661

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது

குறள் #662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

பொருள்
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

குறள் #663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

பொருள்
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

குறள் #664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

குறள் #665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

பொருள்
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

குறள் #666

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக

இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

குறள் #667

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.

பொருள்
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

குறள் #668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

பொருள்
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

குறள் #669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

பொருள்
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

குறள் #670

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.

பொருள்
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

திருக்குறள் அருஞ்சொற்கள்

கொட்கின் 

வெளிப்படுமாயின்

ஏற்றா 

தீராத

வீறு 

சிறப்பு

உறவரினும் 

மிகவரினும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments