உலகத்துக்கு முன் உதாரணமான தமிழீழ பெண்கள்
ஈழப் போராட்டத்தில் பெண்களுக்கு என்று தனித்துவமான பெருமைகள் உண்டு.1984 முதல் பெண்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டாலும், 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தனியாக பெண்கள் பிரிவுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் ஆண்களே தலைமைகளை வகித்தனர். பெண்களை அனைத்து பிரிவுகளும் உள்வாங்கி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தியது. இராணுவ படையணிகளில் மட்டும் அல்லாது தொழில் நுட்பம் / நிர்வாகம் அனைத்திலும் பெண்கள் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். பெயருக்கு பெண்கள் இருந்தார்கள் என்கின்ற கதைகள் எல்லாம் அங்கு நடக்காது. ஆண் – பெண் பாகுபாடின்றி அனைவரும் ஆயுதப் பிரிவுகளில் எல்லாம் மிகப் பெரிய சரித்திரங்களைப் படைத்துள்ளனர்.
10-10-1987 அன்று தங்களின் விடுதலைப் போராட்டத்தை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இந்தியப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் களம் கண்ட நாள். அதே நாளில் கோப்பாய் என்ற இடத்தில் இந்தியப் படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவாக இந்த நாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் இவர்தான். 3000த்துக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ஈழப் போராட்டத்தில் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.