சிவகங்கையின் அரசியும் 18 ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியாராலும் ஆர்காட்டு நவாபாலும் வெல்ல முடியாத ஒரே அரசி ஆவார். போர்க்கலைகளில் தேர்ச்சியும், குதிரை ஏற்றம் போன்றவற்றில் திறனும் பத்து மொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். முதல்முதலாக,பெண் போராளிகளைக் கொண்ட உடையாள் படை என்ற படையணியை உருவாக்கினார்.
இராமநாதபுரம் சேதுபதியான செல்லமுத்து விஜயராகுநாதசேதுபதியின் மகளான வேலுநாச்சியார் சிவகங்கையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாத தேவரை (1750-1750) மணந்தார். 1772 சூன் 21 அன்று காளையார் கோவிலில் ஆர்காட்டு நவாபின் படையும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினிப்படையும் சேர்ந்து தாக்கி முத்துவடுவநாதரைக் கொன்றன.
வேலுநாச்சியாரும், அவருடைய மகள் வெள்ளாச்சி நாச்சியாரும் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சிக்குத் தப்பிச்சென்றனர். தம்நாட்டை விட்டு வெளியேறி ஏழு ஆண்டுகளை வேலுநாச்சியார் கழித்தார் . விருப்பாச்சி பாளையக்காரரான கோபாலநாயக்கரும் மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியும் பாதுகாப்பு அளித்தனர்.
1780 இல் ஹைதர் அலியின் படம் உதவ கிடைத்ததும் வேலைநாச்சியாரும் அவருடைய ஆலோசகர்களான மருதுசகோதரர்களும் நவாப் மற்றும் கும்பினிப்படையினர் மீது தாக்குதல் நடாத்தினர். கும்பினிப் படையினர் மதுரை கோச்சடையிலும் மானாமதுரையிலும் சிதறடிக்கப்பட்டனர். தமது படைகளை வேலைநாச்சியார் மூன்றாகப்பிரித்து, சிவகங்கைப்பிரிவுக்குத் தாமே தலைமையேற்று மும்முனைத்தாக்குதல் (1780) நடத்தி வெற்றி பெற்றார். வேலைநாச்சியாரின் மகள் வெள்ளாச்சியை அரசியாக அறிவித்து வேலுநாச்சியார் பகராளுநராகச் செயல்பட்டார். பெரியமருது தளபதியாகவும், சின்னமருது அமைச்சராகவும் பணியேற்றினர். வேலுநாச்சியார் 1790 ல் இறந்ததாக கருதப்படுகிறது .
நன்றி. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.