உண்மையான காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன சங்கரலிங்கனார் பழைய சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி காலவரையற்றப் பட்டினிப்போரில் ஈடுபட்டு உயிர் ஈகம் செய்தார். 1956 சூலை 27 அன்று பட்டினிப்போரைத் தொடங்கி, தன்னந்தனியராய் விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் 78 வயதான அவர் 77 நாட்கள் பட்டினிப்போரை நடாத்தினார்.
முக்கியத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், தமது கோரிக்கையை மாற்றிக்கொள்ள சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். நினைவிழந்த நிலையில் அக்டோபர் 10 – ஆம் தேதி அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அக்டோபர் 13 ஆம் நாள் இறந்தார். அவருடைய உடல் மதுரையில் புதைக்கப்பட்டது. அவர் உயிர் ஈகம் செய்து 13- ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாதுரை அவர்களின் அருமுயற்சியால் 1969 சனவரி 14 அன்று சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.