×

எதிர்காலச் சிற்பிகள்

தமிழீழ பூமியில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கின்றது. அதிநவீன ஆயுதங்களை சிறீலங்கா அரசு பாவித்து தமிழர்களைக் கொலை செய்கின்றது.

அதனை எதிர்த்து தமிழீழ வீரமறவர்கள் மன உறுதியைப் பிரதான ஆயுதமாகப் பாவித்து மண்ணை மீட்கும் போரில் ஈடுபட்டுள்ளார்கள். உயிராயுதங்களைப் பாவிக்கும் ஞானிகளுக்கு முன்னே சிங்கள ஏகாதிபத்தியம் ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் கூட போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ அமைப்புக்களில் எமது எதிர்கால வாரிசுகள் கட்டுக்கோப்பான முறையில் வளர்க்கப்படுகின்றார்கள். அண்மையில் தமிழீழம் சென்றிருந்த ஐ.நா. அதிகாரிகள் இந்த அமைப்புக்களின் வளர்ச்சி கண்டு ஆச்சரியம் தெரிவித்தனர். போரின் அனர்த்தங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு அரும்பணியா என்று அவர்கள் வியப்புடன் வினவியுள்ளனர். எங்கள் செல்வக் குழந்தைகளை அவர்கள் தட்டிக் கொடுத்தனர்.

ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் திரு. ரோலன்ட் ஹட்சன், கல்வி அபிவிருத்தி நிறுவன பிரிட்டா ஹொட்ஸ்பேக் ஆகியோரே தமிழீழம் சென்றிருந்த மேற்படி அதிகாரிகளாவர். செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர்கள் இவர்களின் மனதை ஆழமாகத் தொட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழத்தில் கல்வியும், மனிதாபிமானமும் சங்கமிக்கும் ஓரிடத்தில் அவர்களின் மனம் இளகியதில் வியப்பேதுமில்லை. தமிழர்களின் இந்தத் தார்மீகத்தை அவர்கள் உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும், மனநோயாளர்கள் என்றும் சிறீலங்கா அரசினால் செய்யப்படும் பிரச்சாரங்கள் உண்மைக்கு மாறானவை என்பதை அவர்கள் மாத்திரம் அறிந்தால் போதாது. தமிழீழத்தில் மனிதநேயமிக்க, மனவலிமை படைத்த விடுதலை வீரர்களைச் சந்தித்ததாக அவர்கள் சகலருக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பிலும் பல அர்த்தங்கள் உண்டு. அதை அவர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள்.

‘எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்கவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்றவேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.’ என தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டார்.

‘இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்ல. தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப்போராட்ட சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாக மாறி, ஒரு காலம் தமிழீழத் தேசத்தின் சிந்தனைச் சோலையாக சிறப்புற வேண்டுமென்பதே எனது ஆவல்.’

‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்கள் எந்தளவு எதிர்பார்ப்புடன் வளர்க்கப்படுகின்றார்கள் என்பதை தமிழீழ தேசியத் தலைவரின் இந்த உரைகள் விளக்குகின்றன.

1991-ம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கிய ‘செஞ்சோலை’ மகளிர் பாடசாலை 1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை இன்று வளர்ச்சியடைந்து இருநூறுக்கும் அதிகமானவர்களைக் கொண்டதாக செயற்படுகின்றது. மூன்று வயதிற்கும் பதினைந்து வயதிற்கும் உட்பட்ட பெண்களுக்கு இங்கு கல்வி வழங்கப்படுகிறது. கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவர்களைத் தயாரிப்பதல்ல வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவது  எமது நோக்கம் என்கிறார் ‘செஞ்சோலை’ அமைப்பின் பொறுப்பாளர் ஜனனி.

பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் இங்கு கல்வி பயில்கிறார்கள். பாலர் வகுப்பிலிருந்து ஆண்டு ஆறு மட்டும் வகுப்புக்கள் இயங்குகின்றன. பிள்ளைகளின் உடல் வயதிற்கும் உள வயதிற்கும் ஏற்றாற்போல் வகுப்புக்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஓர் உண்மைமிக்க, நீதிமிக்க கல்வி அமைப்புப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்கு செஞ்சோலை மகளிர் பாடசாலை ஒரு கொடையாக அமைந்துள்ளது. செஞ்சோலை மாணவர் தொகை அதிகரித்தவண்ணமிருக்கிறது. இதனால் பாடசாலையை விருத்தி செய்யவேண்டியுள்ளது. பாடசாலைக்கென புதிய கட்டிடங்கள் தேவையாகவுள்ளது. வன்னிப் பகுதியில் புதிய பாடசாலையொன்று கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் அரியாலையில் செஞ்சோலை மகளிர் பாடசாலைக்காக புதிய கட்டிடம்  ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக் கட்டிடம் செஞ்சோலையினால் திட்டமிடப்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக கட்டப்படவுள்ளது.

இப்பாடசாலை 22 லட்சத்து 70 ஆயிரம் ரூபா செலவில் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வழங்கி எமது சமுதாய வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டும். தங்கள் பகுதி செஞ்சோலை பொறுப்பாளர்களை அணுகி உங்களால் இயன்ற தொகையை இக் கட்டிட நிதிக்காக வழங்க வேண்டும். நன்கொடையாளர்கள் நிதி இலகுவாக வழங்க வசதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு அம்சங்களுக்கும் தனித்தனியாக செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்ட மண்டபம் அமைக்கவும், நிர்வாக அலுவலகம் அமைக்கவும் தலா ஒன்றரை இலட்சம் ரூபா செலவாகும்.

ஒரு வகுப்பறை அமைக்க ஒன்றரை இலட்சம் ரூபா வீதம் ஏழரை இலட்சம் ரூபாவில் 5 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. கைப்பணியகமும், நூலகமும் அமைக்கத் தலா ஒன்றரை இலட்சம் ரூபா வீதம் மூன்று இலட்சம் ரூபா செலவாகும். மாதிரி பாலர் பாடசாலை அமைக்க ஒரு இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாவும், மூலவள நிலையம் அமைக்க இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவும், ஆய்வு கூடம் அமைக்க ஒன்றரை இலட்சம் ரூபாவும், மனையியற்கூடம் அமைக்க ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாவும், விளையாட்டு மைதானம் அமைக்க இரண்டு லட்சத்து ஐயாயிரம் ரூபாவும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எமது தேசியத் தலைவரின் கனவை நனவாக்கும் செஞ்சோலை அமைப்புடன் நாமும் இணைந்து கொள்வோம். கட்டிடம் அமைய எமது ஆதரவுக் கரங்களை செஞ்சோலை சிறார்களுடன் இணைத்துக் கொள்வோம்.

வீ.ஆர். வரதராஜா

PDF FILE – எதிர்காலச் சிற்பிகள்

செஞ்சோலை வளாகப் படுகொலை – (14.08.2006)

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments