மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டுக்கரைக்குளக் கரையோரமாக விவசாய நிலப்பரப்புடன் வட்டக்கண்டல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
1985ஆம் ஆண்டு தை மாதம் முப்பதாம் திகதி வட்டக்கண்டல் கிராமத்தில் வசித்து வந்த அப்பாவித்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படையும், விமானப்படையினரும் இணைந்து தாக்கினார்கள். 1985ஆம் ஆண்டு தை மாதம் முப்பதாம் திகதி அதிகாலை 5.00 மணியளவில் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட இருநூறிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மதவாச்சி வீதி வழியாக வந்து கட்டுக்கரைக் குளக்கரை வழியாக வட்டக்கண்டல் கிராமத்தில் நிலைகொண்டனர்.
பின்னர் காலை 6.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் செய்த வண்ணம் வட்டக்கண்டல் கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்து எதிர்ப்பட்டவர்களையெல்லாம் சுட்டும் கூரிய ஆயுதங்களாலும் தாக்கினர். அவ்வேளையில் விமானப்படையின் உலங்குவானூர்த்தி மக்கள் குடியிருப்புக்களைத் தாக்கியது. பின்னர் வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலைக்குள் பல இராணுவத்தினர் புகுந்து அங்கு கல்விச்செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பதினெட்டுப் பேரைச் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஏனைய இராணுவத்தினர் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களையும், வீதிகளில் நடமாடியவர்களையும், ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றிச் சித்திரவதைக்கு உள்ளாக்கிச் சுட்டார்கள். பின்னர் வீடுகளினுள் புகுந்து தனித்திருந்த பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் இராணுவத்தினர் ஆறு மணித்தியாலத்திற்கு மேலாக மக்கள் மீது நடாத்திய தாக்குதல் பிற்பகல் 2மணிவரை தொடர்ந்தது பின் சடலங்களில் சிலவற்றை பொதுமக்களைக் கொண்டு பொதுமக்களின் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தள்ளாடி இராணுவ முகாமிற்குச் சென்றனர். இராணுவம் கிராமத்தினை விட்டுச் சென்றதன் பின்னர் அயற்கிராமத்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை தேடியெடுத்து அடக்கம் செய்ததுடன், காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கும் எடுத்துச்சென்றனர். இராணுவத்தின் திட்டமிட்ட பொதுமக்கள் மீதான தாக்குதலினால் ஐம்பத்திரண்டு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட மன்னார் வட்டக்கண்டலைச் சேர்நத் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை தெரிவிக்கையில்:
“1985ஆம் ஆண்டு தை மாதம் முப்பதாம் திகதியன்று காலை 6.00 மணிதொடங்கி இராணுவத்தினரின் துப்பாக்கிச் சத்தம் கேட்டபடியிருந்தது. எங்களுடைய வீடு பிரதான வீதியிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தது ஓடிவந்த மக்கள் என்ன காரணமெனத் தெரியாது இராணுவத்தினர் சுட்டுக்கொண்டு வருகிறார்கள் எனக் கூறியவாறு எங்கள் வீதி வழியாக ஓடினார்கள். பின்னர் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் ஓடினோம். இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை அதிபரும் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் வீதியாற் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற் பங்குகொண்ட இராணுவத்தினர் அனைவரும் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து A – 14 என்று சொல்லப்படும் மன்னார் – மதவாச்சி வீதியால் கட்டுக்கரைக்கு வந்து பெரிய உடைப்பு அணைக்கட்டைக் கடந்து வண்டக்கண்டற் கிராமத்திற்கு வந்து இந்த அட்டூழியங்களைப் புரிந்தனர். இச்சம்பவத்தின் போது மொத்தமாக நாற்பத்தெட்டு அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரினதும் மரணப் புத்தகங்களில் மரணத்திற்கான காரணம் இராணுவத்தால் சுடப்பட்டு இறப்பு என்றே பதியப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.”
30.01.1985 அன்று வட்டக்கண்டல் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.