பருத்தித்துறை
செழித்த ஈழநாட்டின் வடக்கே துறைமுக நகரமான பருத்தித்துறை பல நூற்றாண்டுக்கு முற்பட்ட ஓர் புராதன நகரமாகும் உலக நாடுகளுடன் தொடர்புபட்ட வணிகத் தலைநகரமாகவும் செழித்து விளங்கிய பருத்தித்துறை. யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நகரம் பாதிக்கப்பட்டது. பருத்தித்துறை அதிகளவு பாடசாலைகள் கோவில்கள் கொண்ட ஊராக விளங்குகின்றது
யாழ்ப்பாணக் குடாநாட்டை கதிரமலையில் இருந்து ஆட்சி செய்த உக்கிர சிங்கன் என்ற தமிழ் மன்னன் சோழ இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமான மாருதப்புரவல்லியை திருமணம் செய்து அவளுக்காக அவளது பெயரில் உருவாக்கிய நகரமே வல்லிபுரமாகும்.கி.பி.6ம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகள் ஆட்சி உருவாகும் வரை வல்லிபுரமே யாழ்ப்பாணக் குடாநாட்டின் தலை நகரமாக இருந்தது. என்ற ஒர் வரலாற்றுத் தகவலும் பருத்தித்துறைக்கு உள்ளது.
பருத்தித்துறை அடிப்படையில் ஓர் துறைமுகப் பட்டினமாகும். ஆரம்பகாலங்களில் இங்கு பருத்தி அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்பட்டதால் பருத்தித்துறை என்ற பெயர் வந்ததது. இந்த நகரத்தை ஆங்கிலத்தில் ‘பொயின்ற் பிட்ரோ’ POINT PETRO என்றும் அதையே தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து ‘ பீத்துறு முனை ‘ என்றும் சொன்னார்கள் ஆனால், ஒல்லாந்து கடலோடியான பெட்ரோ இந்த நகரை கண்டுபிடித்தால் பொயின்ற் பெட்ரோ என்று பெயரிட்டதாக வரலாறு சொல்கின்றது.
பருத்தித்துறையில் கடற்கரையோரமாக முனையும் துறை முகமும் உள்ளது. முனை சரியாக ஆண் கடலையும் பெண்கடலையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இங்கு இருக்கும் வெளிச்சவீட்டு கோபுரமும் பிரசித்தி பெற்றது. இந்த வெளிச்சவீட்டிலிருந்து இலங்கையின் தென்பகுதியான காலியிலுள்ள வெளிச்சவீட்டுக் கோபுரம் வரைக்குமான தூரத்தையே இலங்கையின் மொத்த நீளமாக கணிக்கின்றார்கள்.
இங்கு பட்டம் விடுதல் முக்கிய நிகழ்வு. அதே போல் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவும் பிரபல்யமானது. வல்லிபுரக் கோவில் கடற்கரையில் இருக்கும் மண் புட்டிகளைக் கடந்து பெருமாளை கொண்டுவந்து கடற்கரையில் தீர்த்தமாட விடுவார்கள்.
தோசை, வடை, அப்பம், எள்ளுப்பா போன்ற உணவுகளுக்குப் பெயர் பெற்றது. தோசை என்றால் அதற்கு இடி சம்பல், பொரி சம்பல், பச்சைமிளகாய் சம்பல், சிவப்பு மிளகாய் சம்பல், தோசைக்கறி (இது பருத்தித்துறைக்கே உரித்தான ஒன்றென்று கூறலாம்)
விழாக்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு இந்திரவிழா தொடக்கம் பட்டத்திருவிழாவரைக்கும் கோயில் திருவிழாக்கள் என்று எப்போதும் விழாக்கோலமாக இருக்கும் பருத்தித்துறை ஈழப்போராட்ட காலத்தில் பாரிய தியாகத்தையும் செய்துள்ளது மாவீரர்கள், போரளிகள் எண்ணற்ற அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்கள் என தமிழுக்கு தந்த பருத்தித்துறை இன்றும் ஈழத் தாகத்தோடு இருக்கிறது.
வட்டக்கச்சி வினோத்