×

எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்

மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், இன்று பிறந்த நாள் 17 சனவரி 1917

எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்

எம்.ஜி.ஆர் அவர்களை அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் நன்கு அறிவார்கள்.

திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெளிப்படையாகவே ஆதரித்து, தடம்புரளாமல் இன்றுவரை தன் கொள்கையில் உறுதியாக இருப்பவர். ஈழப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர் அவர்களின் நிலைபற்றி நெடுமாறன் அவரிடம் கேட்டபோது, தனது தமிழ் தேசிய இயக்கப்பணிகளுக்கிடையிலும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தனார். அது வருமாறு.

ஈழப்பிரச்சினை சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொடுத்தேன். இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று வரிசையாக பத்து அம்சங்கள் அடங்கிய தீர்மானங்கள் கொடுத்திருந்தேன். அதுக்கு அப்பறம் அரசாங்கத்தில் இருந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்திட்டாங்க எந்த தீர்மானத்தை எடுத்துக்கிறது என்று முதல் கமிட்டிக்கு விட்டாங்க. என் தீர்மானத்தை வலியுறுத்தல. டிஸ்போஸ் பண்ண சொன்னேன். அரசாங்கமே தீர்மானம் கொண்டு வந்த பிறகு எல்லாருமே அதை ஏகமனதாக நிறைவேற்றலாம் என்று சொன்னேன். அப்ப எம்.ஜி.ஆர். சொன்னாரு இல்லை இல்லை உங்க தீர்மானத்தை வலியுறுத்தியே பேசுங்க. பின்னால நீங்க பேசின பிற்பாடு அந்த தீர்மானத்தை ஓட்டுக்கு விடவேண்டாம். என்று சொன்னார்.

என் தீர்மானத்தில் இலங்கை மீது பொருளாதார நடவடிக்கை எடுக்கும். இந்தியாவில் இருந்து எந்த பொருளும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது அது மாதிரி எல்லாம் தீர்மானத்தில் இருந்தது. அதையெல்லாம் வலியுறுத்திப் பேசினேன் எனக்கு 20 நிமிசம் மட்டும் தான் ஒதுக்கியிருந்தாங்க. 20 நிமிசத்தில முடிக்க முடியல சபாநாயகரும் மணியடித்து ஞாபகப்படுத்தினார். அதுக்குள்ள எம்.ஜி.ஆர், எஸ்.டி.எஸ் வழியாக எனக்கு குறிப்பு அனுப்பினார.; நீங்க எவ்வளவு நேரம் வேணுமானாலும் எடுத்துக் கொண்டு பேசுங்க என்றார். அதுக்கு மேல 25 நிமிசம் பேசினேன.; மொத்தத்தில் 45 நிமிசம் பேசினேன்.

எல்லோரும் பேசிய பிறகு எம்.ஜி.ஆர். இதுக்கு பதிலளித்தார். அதுல என்ன சொன்னாருன்னா. நெடுமாறன் தீர்மானங்கிறது அவரது பேச்சும் அவரது தீர்மானமும் ஜந்து கோடி தமிழ் மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது. இந்த உணர்வை மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளணும். அவருடைய உணர்வுதான் இந்த அவையில் இருக்கிற எல்லோருடைய உணர்வும், அப்படின்னு சுட்டிக்காட்டினார். இனப்பிரச்சினை குறித்து அவ்வப்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும் நிறைவேற்றுவோர். இது ஒருபுறமிருக்க எம்.ஜி.ஆர் ஆரம்பகாலம் தொட்டே விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவாக இருந்தார்.

1982 ஆம் ஆண்டு ஜன் மாதம் வாக்கில் பிரபாகரன் மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தி கேட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன் 20 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அ.தி.மு.க.வினர் சார்பில் ப.உ.சண்முகம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அனுமதியோடுதான் கலந்து கொண்டார்.

பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை எக்காரணம் கொண்டும் சிங்களக் காவற்துறையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இதைக்காரணம் காட்டி எம்.ஜி.ஆர். இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளை காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர். அவர்கள் நான் சந்தித்த பொழுது எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் சிங்கள அரசிடம் ஒப்படைக்க, நான் சம்மதிக்க மாட்டேன் என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார். அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதியுடன் எடுத்த நடவடிக்கை பிரபாகரன் உயிரைக் காத்ததோடு மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு தள நாயகனையும் கொடுத்தது என்பதுதான் உண்மை.

பிரபாகரன் மீது வழக்கு இருக்கிறப்ப தப்பித்து போய்விட்டார். அப்போது மதுரையில் எங்க வீட்டில்தான் இருந்தார். இங்கிருந்து தப்பித்துப் போனா நியாயப்படி என் மேல்தான் வழக்குப் போடனும். என்ன பிடிச்சுக் கொண்டு போய்தான் வைப்பாங்க. அவர் தப்பிச்சு போனதற்கு உடந்தையா வழக்கு போட்டிருக்கணும். அப்போது என்னை வந்து காவற்துறை அதிகாரி ராஜசேகரன் நாயர் டி.ஜி.பி கிரைம் பொறுப்பில் இருந்தவர் தான் வந்து பேசினாரு. பிரபாகரன் இந்த மாதிரி செஞ்சது ரொம்ப தப்பு. அவர் உயிருக்கு ஆபத்து வந்திடும் அதனால அவர் இருக்கிற இடத்தை சொல்லியிருங்க, என்றார்.

நான் அவரிடம் உண்மையை சொன்னேன். அவர் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து எவ்வளவு நாளாகுது. இப்ப வந்து தேடுறீங்களேன்னு சொன்னத அவர் நம்பவில்லை. புதுச்சேரியில் தான் இருக்காரு எங்களுக்குத் தெரியும் என்றார். ராஜசேகரன்நாயர் போய்ப்பிடிங்க என்று சொன்னேன். இல்லை இல்லன்னாரு இது எல்லாம் என்கிட்ட பேசப்பிடாது என்று நானும் கடுமையாக பேசிய பிறகு போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்து எம்.ஜி.ஆர். சட்டசபை லாபியில் என்னைப்பார்த்துக் கூப்பிட்டார். போனேன் அப்படியே தோள்ள கையைப்போட்டு  ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார். பி.ஏ.க்களை எல்லாம் வெளியே போகச்சொல்லிட்டாரு உட்காரவைத்துவிட்டு என்ன உங்க நண்பரை பத்திரமாக அனுப்பிச்சிட்டிங்க போல இருக்கு. ஆமா பத்திரமாக போயிட்டாரு என்றேன். உண்மையாகவே பத்திரமாக போய்ச்சேர்ந்திட்டாரா? என்று கேட்டாரு உண்மையாகவே போய் சேர்ந்திட்டாரு. உங்க அதிகாரிங்கள் தான் நம்ப மாட்டாங்கிறாங்கன்னவுடன் அதிகாரிகள் கிட்ட எதுக்கு சொல்றீங்க இத நீங்க என் கிட்ட மட்டும் சொன்னா போதும். அவங்க கிட்ட சொல்ல வேண்டியதில்லை என்றார்.

மீண்டும் பத்திரமாக இருக்காருல்ல என்று இரண்டு தடவை கேட்டாரு. நல்லா இருக்காரு பத்திரமா இருக்கிறாரு போய் சேர்ந்த செய்தியும் வந்து விட்டது என்றவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அப்புறம் வேற விசயங்கள் எல்லாம் பேசிவிட்டு அனுப்பினார். நியாயப்படி பிரபாகரன் தப்பித்து போனதற்கு இருந்ததற்கு வழக்குப் போட்டிருக்கணும் அல்லது தொந்தரவு கொடுத்திருக்கணும். ஒண்ணுமே செய்யல. அவர் அப்ப பிரபாகரன் தப்பித்துப் போகணும்கிறத விரும்பினாரு என்பது தான் அர்த்தம்.

ஆனா அவர் உள்ளுக்குள்ள அரசாங்கம் ரீதியாகவும் தன்னுடைய தனிப்பட்ட முறையிலும் ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு வெளிப்படையாக அவர் கொடுத்த பணம் போக பலமடங்கு அதிகமான தொகை அவர்களுக்க ரகசியமாக கொடுத்து இருக்கிறார். அதுல ஒண்ணும் சந்தேகம் இல்லை. அந்தப்போராட்டம் வெற்றி பெறணுங்கிற ஒரு ஆதங்கம் இருந்த காரணத்தால்தான் அவர்களுக்கு உதவிசெய்தார். அதுலயும் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் அகதிகளாக வந்தவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அன்றைக்கெல்லாம் இந்தமாதிரி சிறப்பு முகாம்கள் எல்லாம் கிடையாது.

தமிழீழத்தில் இருந்து சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட விடுதலைப் புலிகளானாலும் சரி அரசாங்க மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையெல்லாம் கொடுக்கப்பட்டது. எல்லாவகையிலும் விடுதலைப்புலிகளுக்க உறுதுணையாக இருந்தார். எல்லா வகையிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழீழப்போராட்டத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கம் பக்கபலமாக இருந்து உலக தமிழினக் காவலராக செயல்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த திரு.தங்கநேயன் என்ற எழுத்தாளர், ‘எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்என்ற நூலை எழுதியுள்ளார். 144 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பல தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துக்கள், செய்மதிகள் அடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்த விடயங்களே இப்பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments