×

லெப். கேணல் ஜொனி – மேஜர் சஞ்சிகா

1986ஆம் ஆண்டில் மன்னார் சிறிலங்கா காவல்நிலையம் மீதான தாக்குதல், தள்ளாடியிலிருந்து முன்னேறி வந்த சிறிலங்காப் படையினரை அடம்பனில் இடைமறித்துத் தாக்குதல். 1987இல் யாழ். தொலைத் தொடர்பு நிலையம் மீதான தாக்குதல், மயிலியதனைச் சிறுதளம் மீதான தாக்குதல் என ஆண் நபாராளிகளின் வழிநடத்தலில் களங்களாடி, சிறிது சிறிதாக போராற்றலை வளர்த்துக்கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு, இந்திய இராணுவக் காலம் திறந்த பல்கலைக்கழகமானது.

கல்லுண்டாய், வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பொன்னாலை, மாசியப்பிட்டி, கோப்பாய், நீர்வேலி போன்ற பல இடங்களில் இந்திய இராணுவத்தினரின் ஏராளமான தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. சூழலை நன்கறிந்த, போர் அனுபவமுள்ள ஆண் போராளிகளுடன் நான்கைந்து பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சமராடிய நாட்கள் அவை.

முன்னேறி வந்த இந்திய இராணுவம் கல்லுண்டாய் வெளியில் தளம் அமைத்து நிலை கொண்டது. லெப்.கேணல் ஜொனியின் தலைமையில் பெண்போராளிகளும் புறப்பட்டார்கள் தளத்தைத் தாக்கியழிக்க. இரண்டு இரவுகள் முயன்று, மூன்றாம் நாளிரவு பலத்த எதிர்ப்புக்களின் நடுவே தளத்தை நெருங்கினர். காப்புகளற்ற வயல் வெளிகளில் புலிகள். வரம்புகளைவிட்டு தலையை உயர்த்தியவர்களின் நெற்றிகளில் விழுந்தது சூடு. கடும் மோதலின் பின் தளத்தைத் தகர்த்து, எதிரிகளின் ஆயுதங்களை அள்ளி எடுத்தவர்கள், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். மூன்று நாட்களாகச் சேற்றுவயலில் கிடந்ததால் உடல் முழுவதும் சேறு.

பெண் போராளிகளிடம் வந்த லெப். கேணல் ஜொனி,

” பிள்ளையள் போய் குளித்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கோ. அடுத்த சண்டைக்குப் போகவேண்டும். ”

என்று சொல்லி முடிப்பதற்கிடையில் வந்தது செய்தி, ” சங்கானைக்கு ஆமி வந்திட்டான். ”

இராணுவத்தோடு மட்டுமல்ல போராட்டம்; இயற்கையோடும் தான்.

1990ஆம் ஆண்டு. பலாலிப் பகுதியில் நிலைகொண்டிருந்த பெண் போராளிகளில் ஒரு பகுதியினர் கொக்காவிலிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தைத் தாக்கவென வன்னிக்கு வந்துவிட்டனர். பெண் போராளிகளுக்குரிய இலக்குகள் தலைவர் அவர்களால் தனித்துப் பிரிக்கப்பட்டன.

சண்டை தொடங்கியது. தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகைவரின் காப்பரணை மின்னல் வேகத்தில் அழித்து உள்நுழைந்தனர் பெண் போராளிகள்.

” நான் ஆமியின்ரை பொயின்ரில நிக்கிறன் ” வானலையில் வந்தது மேஜர் சஞ்சிகாவின் குரல். அடுத்தடுத்த காப்பரண்களைக் கைப்பற்றவேண்டிய ஆண் போராளிகளின் அணிக்குப் பொறுப்பாகப்போன தளபதியால் நம்பமுடியவில்லை. ஆனால் சஞ்சிகா
இப்படிச் செய்யக்கூடியவர்தான் என்பதும் இவருக்குத் தெரியும். உண்மையிலேயே மேஜர் சஞ்சிகாவின் அணி உள்நிற்பதை உறுதிசெய்த தளபதி, பக்கக் காப்பரண்கள் பிடிபடாத நிலையில் ஒரு அணி தனித்து நிற்பதன் ஆபத்தை உணர்ந்து தாக்குதலை வேகப்படுத்தினார். களங்களில் சஞ்சிகா ஒரு புயல்தான்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments